தமிழீழ மக்கள் கொரோனா முன் தடுப்பு நடவடிக்கைகளில் கவனமாக இருக்க வேண்டும்

உலகில் எல்லோரையும் விட தமிழீழ மக்கள் கொரோனா முன் தடுப்பு நடவடிக்கைகளில் கவனமாக இருக்க வேண்டும்.



காரணம் மிக நீளமானது. நீண்ட ஆய்வுத் தரவுகளினூடாகப் பதிவு செய்யப்பட வேண்டியது அது.
அதனால் சுருக்கமாக ஓரிரு வரிகளில்..

நீங்கள் உன்னிப்பாக அவதானித்தால் புரியும். இன்றுவரை கொரோனா தாக்கத்தால் மரணித்தவர்களில் பெரும்பாலானோர் முதியவர்கள் மற்றும் முன்பே ஏதோ ஒரு நோய் தாக்கத்தின் காரணமாக நோயெதிர்புச் சக்தி குறைந்து காணப்படுபவர்கள்.

குழந்தைகள் இயல்பாகவே நோயெதிர்ப்பு சக்தி கொண்டவர்கள். அதுதான் அவர்கள் நேரடியாகப் பாதிக்கப்படவில்லை.

இனி விடயத்திற்கு வரலாம்.

உலகிலேயே சனத்தொகை விகிதாசார அடிப்படையில் நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் என்றால் அது தமிழீழ மக்கள்தான்.

காரணம் நீண்டகால  போருக்கு முகம் கொடுத்து இன அழிப்புக்குள்ளாகியது மட்டுமல்ல தொடர்ந்து இன அழிப்பு அரசின் ஆளுகைக்குள் வாழ்வதால் ஏற்பட்டுள்ள நெருக்கடியும் சேர்ந்து எமது மக்கள் நேயெதிர்ப்பு சக்தியில் பலவீனமாகவே உள்ளார்கள்.

இதன் விளைவாக ஏற்கனவே
இயற்கை மரணம் என்ற பெயரில் ஒரு இனஅழிப்பு நடந்து கொண்டிருப்பதை நாம் மறந்தும்,  மறைத்தும் கொண்டிருக்கிறோம்.

ஒரு விடயத்தை திரும்ப திரும்ப பேசுவது அயாச்சி தரும் ஒன்று. ஆனால் நிகழ்வுகள் தொடரும் போது தொடர்ந்து நாமும் பேசவேண்டியதாக இருக்கிறது.

புனர்வாழ்வு என்ற பெயரில் இனஅழிப்பு வதைமுகாமில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட போராளிகளும், மகளும் இறுதி இனஅழிப்பின் போது வன்னி நிலப்பரப்பில் சுத்தமான குடிநீரில்லாமலும் இராசயான ஆயுதங்களின் பாவனையாலும் தொடர்ந்து உப்புநீரை அருந்தியதாலும் நீண்ட நாள் திட உணவை உண்ணாததன் விளைவாகவும் நோயெதிர்ப்பு சக்தி குறைந்து பல மோசமான உடற் தாக்கங்களை சந்தித்து நோயாளிகளாகி அதன் விளைவாக மரணத்தை தினமும் சந்தித்து வருகிறார்கள்.

குறிப்பாக சிறுநீரக செயலிழப்பு மற்றும் புற்றுநோய். அத்துடன் இதயநோய் மற்றும் கர்ப்பப்பை சார்ந்த பிரச்சினைகள். அதை விட முக்கியமானது எமது மக்கள் சந்திக்கும் உளவியற் பிரச்சினைகள்.

இராசயண ஆயுதங்களின் பாவனையால் எமது மக்களின் உடலில் மனித உடலில் இயற்கையாகக் காணப்படும் Co enzyme Q இன் அளவு குறைந்து விட்டது. இது இனஅழிப்பிற்கு ஒரு உயிர் வாழும் ஆதாரம் ( living genocidal bio makers) என்பதை நாம் பல தடவை வலியுறுத்திவிட்டோம்.

இதன் அளவு உடலில் குறையும் போது படிப்படியாக மிக ஆபத்தான புற்றுநோயிலிருந்து உளவியற் சிக்கல்கள்வரை தோன்றும் வாய்ப்பிருக்கிறது.இதய பலவீனம் மற்றும் கர்ப்பப்பை சிக்கல்கள் இதன் குறிப்பிடத்தகுந்த பக்க விளைவுகளாகும்.

இவை தீர்க்க முடியாத பிரச்சினைகள் அல்ல. அதற்கு தொடர் சிகிச்சை அவசியம். அத்தோடு பெரும் பொருளாதார பலம் வேண்டும். நிலத்தையும் இழந்து வாழ்வாதாரத்தையும் இழந்து பெரும் பொருண்மிய சிக்கலிற்குள் தவிக்கும் எமது மக்களுக்கு இது சாத்தியமா?

அத்துடன் ஏற்கனவே போரின் வடுக்களினால் உளவியல் சிக்கல்களும், பொருளாதார நெருக்கடிகளும் சூழந்துள்ள வேளையில் சுயபாதுகாப்பு என்பது இயல்பாகவே அவர்களை விட்டுப் போய்விட்டது. எனவே ஆரம்பத்திலேயே நோய்களை குணப்படுத்த அவர்கள் தயாரில்லை. இறுதியில் நோயும் முற்றி பொருளாதாரமும் நெருக்க தம்மையே அழித்துக் கொள்ள முடிவெடுக்கிறார்கள். அதிகளவிலான தற்கொலைகள் எல்லாம் இந்த பின்னணியிலேயே நடக்கின்றன.

இன அழிப்பு அரசு திட்டமிட்டு நடத்தும் கட்டமைப்பு  சார் இன அழிப்புப் படிமுறை இது.

இப்படியான ஒரு சூழலில் தற்போது கொரோனா தாக்கத் தொடங்கியிருக்கிறது.

இன அழிப்பு அரசு இதையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தத் தொடங்கி விட்டதை நாம் எல்லோரும் அறிவோம்.

உண்மையான அரசு என்றால் தமிழர் தாயகத்தில் ஒருத்தர் கொரோனாவால் பாதிக்கப்பட்டால், போர் வடுக்களை சுமந்து நோயெதிர்ப்பு சக்தி குறைந்த பகுதி - அதனால் நோய் பரவும் வீதம் அதிகம் என்ற அடிப்படையில் தென்னிலங்கையில்தான் தடுப்பு முகாம்களை நிறுவ வேண்டும்.

ஆனால் இங்கு நிலைமை தலைகீழாக இருக்கிறது.

எனவே மேற்படி தரவுகளின் அடிப்படையில் நாம்தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும்.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து தமிழீழ மக்கள் சுய பாதுகாப்பைத் தேடிக் கொள்ள வேண்டியது காலக் கட்டாயம்.
Blogger இயக்குவது.