கொரோனாவுக்கு மத்தியிலும் டெல்லி போலீஸ் அதிரடி நடவடிக்கை

டிசம்பரில் ஜாமியா நகர் மற்றும் நியூ பிரண்ட்ஸ் காலனியில் நடந்த வன்முறை தொடர்பாக உள்ளூர் தலைவரை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது.

டிசம்பர் 15’ம் தேதி ஜாமியா நகர் பகுதியில் சிஏஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் வன்முறையைத் தூண்டியதற்காக உள்ளூர் தலைவரான ஆஷு கானை டெல்லி போலீஸ் குற்றப்பிரிவு நேற்று கைது செய்தது.

கான் மீது ஜாமியா நகர் மற்றும் நியூ பிரண்ட்ஸ் காலனி காவல் நிலையங்களில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 2 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த மாதம் ஷாஹீன் பாக் ஆர்ப்பாட்டக்காரர்களை காவல்துறையினர் அந்த இடத்திலிருந்து வெளியேற்றியபோது ஆஷு கான் ஒரு கும்பலை கூட்டியதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு டிசம்பர் 15’ஆம் தேதி, ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் அருகே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறியது. ஆர்ப்பாட்டக்காரர்கள் காவல்துறையினர் மீது கற்களை வீசி, பொது பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்களுக்கு தீ வைத்தனர்.

பின்னர் போலீசார் பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து, கண்ணீர்ப்புகை குண்டுகள் வீசியும் தடியடி நடத்தியும் கும்பலை கலைத்தனர்.
Blogger இயக்குவது.