உலகம் மனிதனுக்கானது மட்டுமல்ல- கவிபாஸ்கர்

மனித விரல்கள்
தீண்டாத
பூக்களெல்லாம்
சிரித்து… குலுங்கி
வேரின் மடியில்
விளையாடுகின்றன..

இதுவரை
நாம் பார்க்காத
பறவைகளெல்லாம்
எல்லையற்ற மகிழ்வில்
வானக் கூரையிலும்
மரக்கிளைகளிலும்
கும்மாளமிட்டு பாடுகின்றன…

காட்டுவிலங்குகளும்
ஊருக்குள் நுழைந்து
வீட்டு விலங்குகளோடு
ஊர்வலம் போகின்றன!

வான்வெளியில் பறந்த
விமானப் பறவைகள்
ஓடு தளத்தில்
ஓய்வு எடுப்பதைக் கண்டு
வானத்தில் பறக்கும்
கழுகுகள் எக்காளமிட்டு
சிரிக்கின்றன..

பேருந்து – தொடர்வண்டி
சக்கரங்கள்..
துருப்பிடித்துவிட்டன..

தார் சாலைகளில்
காக்கை குருவிகள்
கபடி ஆடுகின்றன..
தொழிற்சாலைகள்
வணிக நிறுனங்கள்
கேளிக்கைக் கூடங்கள்
அனைத்திலும்
பூச்சி – பூரான் – பாம்புகள்
யாரிடமும் வாடகை தராது
குடியேறிவிட்டன..

கோயில்
மசூதி
ஆலயம் யாவும்
இருளில் மூழ்கிவிட்டன
அங்கே
கடவுள் சிலைகளும்
தாம் திருடப்படாததை நினைத்து
பெருமூச்சு விடுகின்றன..

ஓரறிவு தொடங்கி
ஐந்தறிவு உயிரினங்கள் அவரை
கொரோனாவைக் கண்டு
கைத்தட்டுகின்றன!

ஆறறிவு.. உயிர் இப்போது
கதவைத் தாழிட்டு
அடங்கியிருக்கிறது!

இயற்கை படைத்த
அனைத்தும்.. விழித்துக் கொண்டன
மனிதன் படைத்த அனைத்தும்
மெளனமாகி விட்டன

புவிப்பந்தில்
புலர்ந்த அனைத்தையும்
சுரண்டி
இறுமாப்பில் திரிந்த
மனிதன்
இப்போது
இருமிக்கொண்டு
சுருண்டு கெடக்குறான்..

கண்காது
வாய் மூக்கு
அனைத்தும் மூடிக்கொண்டு
நிற்கும் குரங்கு பொம்மைகள்

இப்போது
முகக்கவசம் அணிந்து
மூடிக்கொண்டு போகும்
மனிதக் குரங்குகளை பார்த்து
பாடுகிறது..
ஆடுறா..ராமா.. ஆடு.. !

இதற்கு முன்னே
ஆடாத ஆட்டம் ஆடிய
மனிதனைப் பார்த்து..

மீண்டும்
எச்சரிக்கை செய்கிறது
கண்ணுக்குத் தெரியாத
கொரோனா!

உலகம்
மனிதனுக்கானது
மட்டுமல்ல!
Blogger இயக்குவது.