கொரோனா தொற்று – 75 ஆயிரத்தை கடந்தது இறப்பு எண்ணிக்கை!!

உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், குறித்த வைரஸ் தாக்கத்துக்கு இலக்காகி இறந்தவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரத்தை கடந்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் சீனாவில் ஆரம்பித்து அங்கிருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவியுள்ள நிலையில், ஏறக்குறைய அனைத்து நாடுகளிலுமே குறித்த வைரஸ் தாக்கத்தால் பல மனித உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில், குறித்த வைரஸ் பரவளினால் இதுவரை 75 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் சர்வதேச ரீதியாக பலியாகியுள்ளனர்.
மேலும், இவ்வைரஸ் தொற்றுக்கு உலகளாவிய ரீதியில் இலக்காகியுள்ளவர்களின் எண்ணிக்கை பதின்மூன்றரை லட்சத்தை கடந்துள்ளது.
அத்துடன் இவ்வைரஸ் தாக்கத்துக்கு இலக்காகி இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 3 லட்சத்தை நெருங்குகின்றது.
ஆரம்பத்தில் குறித்த வைரஸால் சீனா அதிக பாதிப்புகளை எதிர்கொண்டிருந்தாலும், குறித்த வைரஸ் பின்னாட்களில் அதிகமாக ஐரோப்பிய நாடுகளில் நிலைகொள்ள ஆரம்பித்தது.
அதனடிப்படையில் இத்தாலி பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்திய வைரஸ் பரவல், இத்தாலியில் தினமும் ஆயிரக்கணக்கானவர்களின் உயிரை பறித்து இதுவரை பதினாறாயிரத்து ஐநூறுக்கும் அதிகமானவர்களை மரணிக்க செய்துள்ளது.
அதே போன்று பிரான்சில் குறித்த வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தை நெருங்குகின்றது.
இந்நிலையில் கொரோனா வைரஸின் தாக்கத்துக்கு தற்போது அமெரிக்கா மிக தீவிரமாக முகம் கொடுத்துள்ளது.
நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கானவர்களை பலி கொடுக்கும் அமெரிக்காவில் இதுவரை இவ்வைரஸ் தாக்கத்துக்கு இலக்காகி ஏறக்குறைய பதினோராயிரம் பேர் மரணித்துள்ளனர்.
குறித்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அமெரிக்கா பல முயற்சிகளை மேற்கொண்டு வரும் அதேவேளை, இந்தியா உள்ளிட்ட சில நாடுகளிடம் அத்தியாவசிய மருந்துப் பொருட்களை தமது நாட்டுக்கு அனுப்பி வைக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Blogger இயக்குவது.