கொரோனா நோயாளியை அடித்து விரட்டிய மக்கள்!!

நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 178 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று மாலை புதிததாக இரண்டு கொரோனா தொற்றுறுதியானவர்கள் அடையாளங் காணப்பட்டனர்.
கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 5 பேர் நேற்றைய தினம் மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளார்.
முல்லேரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களே பூரண குணமடைந்துள்ளதாக தொற்று நோயியல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 38 ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன் தற்போது கொரோனா வைரஸ் தொற்று உறுதியான 137 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன் அதில் 98 பேர் தேசிய தொற்று நோயியல் நிறுவகத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேநேரம் முல்லேரியா மருத்துவமனையில் 27 பேரும் வெலிகந்த மருத்துவமனையில் 12 பேரும் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவதாக தொற்று நோயியல் தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் 259 பேர் தற்போது பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே ஜாஎல - தேலதுர பகுதியில் உள்ள தனியார் இடம் ஒன்றில் அத்துமீறி நுழைந்த ஒருவர் மீது தாக்குதல் நடத்திய பிரதேச மக்கள் அவரை பமுனுவ காவல்துறையில் ஒப்படைத்துள்ளனர்.
இதனையடுத்து அவர் சிகிச்சைகளுக்காக றாகம போதானா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதன்போது அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதாக அந்த மருத்துவமனையின் பணிப்பாளர் செல்டன் பெரேரா தெரிவித்துள்ளார். இதன் பின்னர் அவர் ஐ.டி.எச் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதேவேளை, பிலியந்தலை - கஹபொல பகுதியை சேர்ந்த 6 பேர் புனானை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
களுபோவில போதனா மருத்துமனையில் 5 ஆம் இலக்க அறையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, முல்லைத்தீவு இராணுவ முகாம் மற்றும் பூஸ கடற்படை முகாம் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைளை பூர்த்தி செய்த 217 பேர் இன்றைய தினம் தத்தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் விசேட பேருந்துகள் மூலம் தத்தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே வைரஸ் பரவி சென்றமை காரணமாக மூடப்பட்டுள்ள பண்டாரகம - அட்டுலுகம - கெம்மன்துடாவ கிராமத்திற்கு போல்கொட கங்கை ஊடாக பல வழிகளில் ஆட்கள் பிரவேசிப்பதை தடுக்கும் வகையில் கடற்படையினருடனான இரண்டு கண்காணிப்பு படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அந்த கிராமத்தில் உள்ள சிலர் குறித்த கங்கை ஊடாக ஏனைய பகுதிகளுக்கு தப்பிச் செல்வதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
அதனை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையில் பேருவளை - பன்னில பிரதேசத்தின் 7 கிராம சேவகர் பிரிவுகளுக்கு உட்பட்ட சுமார் 2 ஆயிரம் குடும்பங்கள் தொடர்ந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கேகாலை மாவட்டத்தில் அரநாயக்க சுகாதார பிரிவிற்குட்பட்ட பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அரநாயக்க - களுகல பகுதியை சேர்ந்த 22 வயதான இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் மரணமானதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை சந்தேகத்திற்கிடமான நோய் அறிகுறியுடன் மஹரகம அபேக்ஷா மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஒருகொடவத்தையை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்றுறதியானமை அடையாளம் காணப்பட்டுள்ளது.
அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக ஹோமாகம ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதே இந்த தொற்றுறுதி அடையாளங் காணப்பட்டுள்ளது.
இதற்கமைய நான்கு மருத்துவர்கள் அடங்கலாக 15 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மஹரகம அபேக்ஷா மருத்துவமனையின் பணிப்பாளர் விஷேட மருத்துர் வசந்த திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
Blogger இயக்குவது.