மன்னார் மாவட்டத்தின் அவசர நிலைமைகளைச் சமாளிக்க ஏற்பாடு!
மன்னார் மாவட்டத்தின் அவசர நிலமைகள் தொடர்பாக ஆராயும் அவசர கலந்துரையாடல் இடம்பெற்றுள்ள நிலையில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
மன்னார் மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் வன்னி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர், இராணுவ, கடற்படை பொலிஸ் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், அழைக்கப்பட்ட திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது, மாவட்டத்தில் தற்போதைய அவசர நிலைமையின் போது முன்னெடுக்கப்பட்டு வந்த, முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.
குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை தென்பகுதியில் இருந்துகொண்டுவருவது தொடர்பாக ஆராயப்பட்டது.
இதன்போது, மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் உரிய அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு அமைவாக வெளி மாவட்டங்களில் இருந்து மன்னாருக்கு அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு வருபவர்களை நேரடியாக மன்னாருக்குள் நுழைய அனுமதிக்காது மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
தென்பகுதியில் இருந்து பொருட்களுடன் மன்னாருக்கு வருகின்ற லொறிகள் உயிலங்குளம் 9 ஆம் கட்டைப் பகுதியில் உள்ள பாடசாலையில் நிறுத்தி, பின்னர் குறித்த லொறி கிருமி நீக்கம் செய்யப்பட்டு மன்னாரில் இருந்து அழைத்துச் செல்லப்படும் பிறிதொரு சாரதியின் உதவியுடன் குறித்த லொறி மன்னாருக்குள் கொண்டுவரப்பட்டு பொருட்களை வியாபார நிலையங்களுக்கு வழங்க முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
குறித்த நடவடிக்கைக்கு வன்னி மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மற்றும் இராணுவ அதிகாரி ஆகியோர் பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகத் தெரிவித்தனர். குறித்த செயற்பாடு பிரதேச செயலாளர் மற்றும் உரிய அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் நாளைமுதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்த வர்த்தகர்களும் குறித்த நடவடிக்கைக்கு பூரண சம்மதத்தைத் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் இரண்டு வாரங்கள் மிகக் கடினமான வாரங்களாக அமையவுள்ளதாக வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து வருகின்றவர்களினால் மன்னார் மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவலாம் என்ற காரணத்தை அடிப்படையாக வைத்து குறித்த நடைமுறையினை எதிர்வரும் இரண்டு வராங்களுக்கு நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டதாக அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்ந்து நீடிக்குமாக இருந்தால் மன்னார் மாவட்ட மக்களுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றன.
எனவே, நெல் உற்பத்தியை மேற்கொள்ளும் வகையிலும் உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையிலும் விவசாயிகளை விவசாயத்தில் ஈடுபட வைக்கும் வகையில் பொலிஸார் ஊரடங்குச் சட்டத்தின் போது அவர்களுக்கும் பாஸ் வழங்குவது தொடர்பாக ஆராயப்பட்டது.
பிரதேச செயலாளர்கள் ஊடாக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளினால் விவாசாயிகளுக்கு பாஸ் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

.jpeg
)




