புழுதி - பாகம் 8!!

வானகனிடம் குறும்புத்தனங்கள் அதிகம்   உண்டு.  சிறு வயதிலேயே எறிகணை வீச்சில் தாயைப் பறிகொடுத்து விட்டான்,   மனைவியை இழந்த துக்கம் அவனது அப்பாவிடம் ஒரு வெறுமைத்தனத்தை கொடுத்திருந்தது,  ஏனோ, தானோ என்று வாழ்ந்து கொண்டிருந்தவர் கடலுக்கு தொழிலுக்காக சென்ற வேளை இராணுவத்தினரின் துப்பாக்கிச் சன்னங்களுக்கு பலியாகியிருந்தார்.


  அவனும் தம்பியும்  உறவினர் வீட்டில் தான் தங்கியிருந்தனர்,  அம்மாவுக்கு வானகனிடம் நிறைய பாசம்,    வானகன் வீட்டிற்கு வரும் நேரங்களில்  அம்மா நன்றாக கவனித்துக்கொள்ளுவா,  'தாயில்லா பிள்ளைகள்' என்ற எண்ணத்தில் அம்மாவிடம் அவர்கள் மீது அதிகமான பாசம் சுரக்கும்.

மனதில் ஏற்பட்ட வெறுமையை மறக்கவோ,  தன் துக்கத்திற்கு வடிகாலாகவோ வானகன் குறும்புத்தனங்களை அதிகம் தன்னோடு ஒட்ட வைத்திருந்தான்,  அதன் ஒரு வெளிப்பாடு தான் மழைநீரைக் கண்டால் உடனே காகிதக்கப்பல் செய்வது,

நானும் சீராளனும் வானகனின் அருகில் சென்று நின்று கொண்டோம்,  நாங்கள் அருகில் நிற்பதுகூட தெரியாமல் அவன் கப்பல் விளையாட்டில் மூழ்கியிருந்தான்,  அந்த கணத்தில் வானகனின் மீது எனக்கு ஒரு இனிய அன்பு சுரந்தது,  அவன் தலையில் கையை வைத்து, 'என்னடா?' என்றேன்.

"கப்பல் விடுறன்டா" என்றான்,  "சரி......சரி.. விடு" என்று என்றுவிட்டு அவனருகில்  அமர்ந்து கொண்டேன்.  அன்று காட்டுக்குள் வைத்து அவனை அடித்து விட்டதற்கு இப்போது மனம் அதிகம் கனம் கொண்டது, 'மனுசனாடா நீ' என்று மனச்சாட்சி கேள்வி கேட்டது,

"டேய் வானகன் அண்டைக்கு உன்னை அடிச்சதுக்கு என்னை மன்னிச்சு கொள்ளடா" என்றேன்,  வானகன் மட்டுமல்லாமல் சீராளனும் என்னை விசித்திரமாக பார்த்தார்கள்,

"எப்போடா ?" விழி விரித்து கேட்டான் வானகன்,

"டேய் அன்பு,  அவனே அதை மறந்திட்டான், நீ ஏன்டா?"

"இல்லடா,  என்ன இருந்தாலும் நான் அவனை அடிச்சிருக்க கூடாது, "

கப்பலை கைவிட்டுவிட்டு மெல்ல எழுந்து கொண்ட வானகன், " டேய் அன்பு , எப்பவும் உன்னோடதான் சுத்துறன்,  உன்ர அம்மாட  கையாலதான் அடிக்கடி சாப்பிடுறன்,  உன்ர கையால அடி வாங்க கூடாதாடா, நீ அடிச்சா நான் வாங்குவன்டா" என்றான்,


"டேய்,  இதுக்கு எனக்கு ரெண்டு அடி அடிடா,  இப்படியெல்லாம் சொன்னா, எனக்கு ரொம்ப கஸ்ரமா இருக்குடா," நான் கண் கலங்கியதில் சீராளனுக்கு கோபம் வந்து விட்டது.

"டேய் வானு,  என்னடா நீ, அவனே நொந்து போய் இருக்கிறான்,  நீ வேற,  ஏன்டா "

"அன்பு, உன்னைக் கவலைப்படவைக்க நான் அப்பிடி சொல்லேல்லடா,  யதார்த்தமாதான் சொன்னேன், " கண் கலங்கினான் வானகன்.

"சரி,விடுடா....." சட்டென்று அவனை அணைத்துக் கொண்டேன்,  எங்களோடு ஒட்டிக்கொண்டான் சீராளனும்....


தொடரும்....


கோபிகை

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.