கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரின் அவசர வேண்டுகோள்
ஐம்பெருங் கடமைகளில் ஒன்றான பர்ளான நோன்பினை அல்லாஹ்விற்காகவே முஸ்லிங்களாகிய நாம் நோற்கிறோம். அல்லாஹ்வின் அருளை பெற வேண்டுமென்பதற்காகவே பசித்திருந்து, இரவெல்லாம் கண் விழித்து நின்று தொழுகிறோம்.
அல்லாஹ்விற்காக நோன்பு நோற்ற நாம் இம்முறை நோன்புப் பெருநாளை நாட்டு மக்களின் நன்மை கருதி, நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து எமது வீடுகளிலேயே எளிமையான முறையில் கொண்டாட வேண்டும் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
அவர் வெளியிட்ட விசேட அறிக்கையில் தொடர்ந்தும்,உலகளாவிய ரீதியில் அச்சுறுத்தலாக மாறியிருக்கின்ற கொரோனா வைரஸின் தாக்கமானது எமது நாட்டிலும் இதுவரை முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படாத நிலையே காணப்படுகிறது. கொரோனாவின் தாக்காத்தினால் பள்ளிவாசல்கள் மூடப்பட்டு அதான் சொல்வதற்காக மாத்திரமே திறக்கப்படுகிறது.
எமது உயிர் மூச்சாய் பேணிவரும் ஐங்காலத் தொழுகைகளை பள்ளிவாசல்களுக்கு சென்று இமாம் ஜமாத்துடன் தொழுது கொள்ள முடியாமல் நாளாந்தம் கவலையடைகின்றோம். அது மாத்திரமல்லாமல் ரமழான் காலங்களில் கூட்டாக நிறைவேற்றுகின்ற தராவீஹ், கியாமுல் லைல் போன்ற தொழுகைகளையும் தொழ முடியாமல் பரிதவிக்கின்றோம்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக தங்கள் அன்றாட தொழிலை இழந்து அல்லலுறும் மக்கள் இம்முறை நோன்புப் பெருநாளை புத்தாடைகளை அணிந்து கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
கொரோனாவின் தாக்கத்தால் வாழ்வியல் நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கும் இச் சந்தர்ப்பத்தில் ஏழைகளின் மனநிலையை புரிந்து கொள்ளாது சிலர் செயற்படுவது வருத்தமளிக்கிறது.
பெரும்பான்மைச் சமூகத்திடையே எம்மை எதிரிகளாக காட்டுவதற்காக சில தீய சக்திகள் முனைந்து கொண்டிருக்கின்றன.
நாம் புத்தாடைகளை கொள்வனவு செய்வதற்காக கடைகளுக்கு செல்லும் போது அதனை இனவாத ஊடகங்கள் பெரும்பான்மை மக்களிடையே விமர்சனமாக கொண்டு சேர்த்து விடுவார்கள்.
அது மேலும் எமது சமூகத்தின் மீது பழி போடும் செயலாக மாறிவிடும்.
தமிழ், சிங்கள புத்தாண்டு மற்றும் வெசாக் பண்டிகைகளை எளிமையான முறையில் அச் சமூகம் கொண்டாடியதை ஊடகங்கள் அண்மைக்காலங்களில் பேசுபொருளாகியிருந்தன.
நாட்டின் சட்டதிட்டங்களிற்கு மதித்து தம் கொண்டாட்டங்களை வீடுகளிலேயே கொண்டாடியிருந்ததாக செய்திகளை வெளியீடு செய்திருந்தனர்.
கொரோனா வைரஸினை ஒழிப்பதற்காக பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் இச் சந்தர்ப்பங்களில் நாமும் அதற்கான முழு ஒத்துழைப்புகளையும் வழங்க வேண்டும். பெருநாள் ஆடை கொள்வனவிற்காக கடைத் தெருவிற்கு சென்று முஸ்லிங்கள் கொரோனாவை கட்டுப்பாட்டிற்ககுள் வரவிடாமல் தடுத்தார்கள் என்ற பழி சொல்லை சுமக்க கூடியவர்களாக நாம் மாறிவிடக் கூடாது.
ஊடரங்கு தளர்த்தப்படுகின்ற சந்தர்ப்பங்களில் நாம் கெளரவமாக நடந்து கொள்ள வேண்டும். முஸ்லிங்கள் ஏனைய சமூகத்திற்கு முன்மாதிரியாக திகழ வேண்டும். அதையே எமது மார்க்கமும் கற்றுத் தந்திருக்கிறது. பெருநாள் தினத்தன்று வீடுகளிலேயே தொழுது கொள்ளுங்கள். இருக்கின்ற ஆடைகளில் சிறந்த ஆடையினை உடுத்து இம்முறை பெருநாளை எளிமையாக கொண்டாடுவோம் என கேட்டுக்கொண்டுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo