முன்னணி உறுப்பினர்களுக்கு தனிமைப்படுத்த வழங்கிய கட்டளையை மீளப்பெற்றது யாழ் நீதிமன்றம்!!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த 11 பேரையும் வீடுகளில் தனிமைப்படுத்த வழங்கிய கட்டளையை மீளப்பெற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

“தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்துமாறு கோரப்பட்டுள்ள 11 சந்தேக நபர்களுக்கும் நோய் அறிகுறிகள் உள்ளதாக மருத்துவ அறிக்கையை பொலிஸார் சமர்ப்பிக்கவில்லை. அதனால் நோய் அறிகுறி இல்லாதவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தினால் அவர்கள் மன உலைச்சலுக்கும் வேறு பல நோய்களுக்கும் உள்ளாகக் கூடும்
அதனால் 11 பேரையும் தனிமைப்படுத்தும் கட்டளை மன்றினால் மீளப்பெறப்படுகிறது” என்று நீதிவான் ஏ.பீற்றர் போல், மீளாய்வு விண்ணப்பம் மீது கட்டளை வழங்கினார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் தலைமையிலான சட்டத்தரணிகளும் பொலிஸ் தரப்பில் யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் பொலிஸ் அத்தியட்சகர், யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் முன்வைத்த நீண்ட சமர்பணத்தினை முன் வைத்திருந்தனர்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், செயலாளர் உள்பட பதினொரு பேரை எதிர்வரும் 14 நாள்களுக்கு வீடுகளில் தனிமைப்படுத்தி 14 நாள்களின் பின்னர் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஐந்து பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரிகளுக்கு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ. பீற்றர் போல் நேற்று கட்டளையிட்டிருந்தார்.
யாழ்ப்பாணத்தில் கடந்த தினங்களில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் செயலாளர் உள்ளிட்ட 11 பேரினது பெயர்களை நீதிமன்றில் சமர்ப்பித்த யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ , தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறினார்கள் என நீதிமன்றில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அறிக்கை சமர்ப்பித்தார்.
குறித்த அறிக்கையை ஆராய்ந்த நீதிவான் , 11 பேரையும் அவர்கள் வீடுகளில் 14 நாள்கள் தனிமைப்படுத்தி அவர்களை கண்காணித்து 14 நாள்களின் பின்னர் நீதிமன்றுக்கு அறிவிக்குமாறு பிரதேச மருத்துவ அதிகாரிகளுக்கு நீதிவான் கட்டளையிட்டிருந்தார்.
இந்நிலையில் குறித்த வழக்கை மீள அழைக்குமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் அணைக்கப்பட்டு மன்றிடம் விண்ணப்பம் விடுத்தனர். அதனடிப்படையில் வழக்கு திறந்த மன்றில் நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் அழைக்கப்பட்டே குறித்த கட்டளை வழங்கப்பட்டது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.