ஜப்பானில் அவசர நிலை மே 31 வரை நீட்டிப்பு

ஜப்பானில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து, மே 31ம் தேதி வரை நாடு தழுவிய அவசர நிலை நீட்டிக்கப்படுவதாக பிரதமர் ஷின்சோ அபே அறிவித்துள்ளார்.

ஜப்பானில் கொரோனா வைரஸ் தொற்றால் 15,789 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 549 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் நோயாளிகள் கூட்டம் நிரம்பி வரும் நிலையில், மேலும் அழுத்தம் ஏற்படுவதை தடுக்கும் நடவடிக்கையாக அவசர நிலை நீட்டிக்கப்பட்டுள்ளது. முதலில் ஏப்.,07ம் தேதி டோக்கியோ, ஒசாகா உள்ளிட்ட 7 மாகாணங்களில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டது. பின்னர் அனைத்து மாகாணங்களுக்கும் ஏப்.,16 வரை விரிவுப்படுத்தப்பட்டது. வரும் மே 6ம் தேதியுடன் அவசரநிலை முடிவடைய இருந்தது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கூறியதாவது: ‛உடல் ரீதியான இடைவெளியை அடிப்படையாகக் கொண்ட புதிய வாழ்க்கை முறைகளை மக்கள் ஏற்றுகொள்ள வேண்டும். அவசர நிலை நீட்டிப்பு என்பது அடுத்த கட்டத்திற்குத் தயாராகவும், அவசரகால நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது’. இவ்வாறு அவர் கூறினார். ஜப்பானில் அவசர நிலை என்பது கடுமையான ஊரடங்கை பின்பற்ற வேண்டுமென்பதில்லை. கண்டிப்பாக ஜப்பானியர்கள் தங்கள் வீட்டினுள் இருக்க வேண்டும். அத்யாவசியமற்ற கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டிருக்க வேண்டும். டோக்கியோ மற்றும் ஜப்பானில் பெரும்பாலான நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன. ரெஸ்டாரெண்டுகள் திறக்கும் நேரத்தில் மாற்றம் மற்றும் பார்சல் முறையில் டெலிவரி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் அவசர நிலையை நீட்டித்துள்ள சூழலில், மக்களின் உடல்நலனோடு, பொருளாதாரத்தை படிப்படியாக திறக்க அரசு திட்டமிட்டு வருகிறது. பொதுமக்கள் கூடும் இடங்களான நூலகம், அருங்காட்சியகம் மற்றும் பூங்காக்களை உரிய சமூக இடைவெளியுடன் மீண்டும் திறக்கவும், கிராமப்புற மாகாணங்களில் கட்டுப்பாடுகளை மெதுவாக தளர்த்தவும், ஆனால் மாகாணம் தழுவிய போக்குவரத்திற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தொடர முடிவெடுத்துள்ளது. டோக்கியோ உள்ளிட்ட 13 மாகாணங்களில் தற்போது அமலில் உள்ள கடுமையான கட்டுப்பாடுகளை தொடர முடிவு செய்துள்ளது. 80 சதவீதம் அளவுக்கு சமூக தொடர்புகளை குறைக்க இலக்கு நிர்ணயித்துள்ள அரசு, மக்கள் வீடுகளில் தங்கி இருப்பதுடன், மாஸ்க் அணிவது மற்றும் வெளியே செல்லும் போது சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது.
Blogger இயக்குவது.