முள்ளிவாய்க்கால் வலியின் வடுக்கள்!!

இனிமேல் இங்கிருந்து ஆகப்போவது ஒன்றும் இல்லை என்றானதும் இராணுவ பகுதிக்கு செல்லலாம் என முடிவு செய்து புறப்பட்டு விட்டோம்,  எறிகணைச் சத்தத்தில் காது வெடித்தது, இதயம் அதிர்ந்தது,  கால்கள் நகர மறுத்தது,  வேறு வழியின்றி இயந்திர தனத்தோடு நடக்க ஆரம்பித்தோம், மனத்துயரம் விம்மல்களாய் வெளியேறியது, மேய்ப்பனில்லாத ஆடுகள் போல ........கனத்தது  உள்ளம்,


காலையில் புறப்பட்ட நாங்கள் இராணுவ பகுதியை அடைந்த போது மாலையாகிவிட்டது,  துயரம் நெஞ்சை கெளவிக்கொள்ள பசி வயிற்றைக் கிள்ளியது, கையிலிருந்த என் இரண்டு வயது குழந்தை பசியில் துடிதுடித்து கதறியது, தொடர் வயிற்றுப்போக்கினால் பத்து வயது பாலகன் உயிரை கையில் பிடித்தபடி துடித்துக்கொண்டிருந்தான்.

என் பிள்ளைகளுக்கு பசி என்று யாரிடம் கேட்கமுடியும்? நெஞ்சம் கொண்ட வலி கண்ணீராய் கரைந்து கொண்டிருந்தது,  மாலை ஐந்து மணியளவில் இராணுவம் எங்களை வரிசையில் நிற்கவைத்து  சோதனை நடாத்தியது,

பக்கத்தில் நின்ற அக்கா சொன்னா,  "பொடி செக்கிங்காம்" என்று,  இதயம் ஒருகணம் நின்று துடித்தது,  உடம்பை நிர்வாணமாக்கி தான் உயிர் வாழ வேண்டுமா?

கையிலிருந்த குழந்தையை இறுக்கமாக பற்றிக்கொண்டேன்,  சிறு வயது முதல் உரமூட்டி வளர்த்த உணர்வுகள் ஓங்கி குரல் கொடுத்தது, ஏதிலிகள் என்பதன் உண்மையான அர்த்தம் அப்போதுதான் புரிந்தது,

சேலைகளால்  கொட்டகை அமைத்து அதற்குள்ளே படுத்துறங்கி  பொதுவெளியில் குளித்து,  வெறும் பருப்பை அவித்து உணவாகச் சாப்பிட்டு,  கஞ்சிக்காக வரிசையில் நின்று,  அதற்கும் உயிரை காவு கொடுத்து, இயற்கை உபாதைகளை இயன்றவரை அடக்கிவைத்து,  உயிர் வாழும் நிமிடங்களை மெல்ல மெல்ல எண்ணியபடி, மரணவாசலை தொட்டு வந்ததெல்லாம் இதற்காகத்தானா?

கடைசியில் மானத்தை இழக்கும் இந்த நிலைக்காக தானா, ?

உயிர் துடித்தது,  அழவும் முடியாத,  அடக்கவும் முடியாத துயரத்தின் வலியை உணர்ந்தவர்கள் நரக வேதனையைப் புரிந்து கொண்டிருப்பர்,  பேசாமல் செத்து தொலைந்திருக்கலாம் என்ற எண்ணம் அப்போதுதான் உண்டானது,

சதைக் குவியல்களின் மணமும்  பிணங்களின் நாற்றமும் காற்றோடு கலந்து வந்தது,  முள்ளிவாய்க்கால் மரண பூமியாய் , மயான பூமியாய் மாறிப்போனது.


எறிகணைக் குண்டுக்கும் பட்டினிச்சாவிற்கும் தப்பி அகதிகளாக அடிமைகளாக நடந்து கொண்டிருந்தோம்,  என்னை இறுகப் பற்றியிருந்த என் இரண்டு வயதேயான குழந்தை தான், என் ஆடைகளை கழற்றவிடாமல் காத்துக்கொண்டாள்,

என்னை விட்டு துளியும் விலகமாட்டேன் என அவள் அடம்பிடித்ததில் என் மானம் காப்பாற்றப்பட்டது, வெறும் கைப்பை சோதனையோடு அந்த இடத்தை கடந்து விட்டேன்,

பொது மக்களுக்கே இந்த நிலை என்றால் போராளிகள்........?????

பாதுகாப்பு வலயமென சில இடங்களை அறிவித்துவிட்டு  மொத்தமாய் மக்கள் குவிந்ததும் அங்கேயே கொத்துக் குண்டுகளை வீசிக் கொன்ற அவலம் அங்கேதான் நடந்தது,


இந்த வெறியாட்டத்திற்கு இன்று வரை விடிவு கிட்டவில்லை,  முப்பது வருடங்களைக் கடந்த போராட்டம் அமைதி அடைந்த நாளில் இருந்து இன்று வரை பதினொரு வருடங்கள் கடந்து விட்டதெனினும் தமிழர் விடியல் என்று கிட்டும், என்ற ஏக்கம் மனதை அரித்தபடிதான்,


கல்வி வீழ்ச்சி, கலாசார சீரழிவு,  வாள் வெட்டு இவை எல்லாம் நீண்டு செல்கையில் தூரப்புள்ளியாய் தெரிகிறது தமிழர்கள் விடுதலை.....

கோபிகை

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


Powered by Blogger.