வேறு இடத்துக்கு இடம்பெயரும் திருநெல்வேலி பொதுச்சந்தை

வேறு இடத்துக்கு இடம்பெயரும் திருநெல்வேலி பொதுச்சந்தை

திருநெல்வேலி பொதுச்சந்தை நாளை மறுதினம் முதல் ஆடியபாதம் வீதியிலுள்ள தனியார் காணியில் இயங்கும் என நல்லூர் பிரதேச சபை தவிசாளர் த.தியாகமூர்த்தி தெரிவித்துள்ளார்.
தற்காலிகமாக யாழ்ப்பாணம், கலாசாலை வீதியில் திருநெல்வேலி பொதுச்சந்தை இயங்கிவந்த நிலையில் இவ்வாறு மீண்டும் இடம்மாற்றப்படவுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலால் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக பொதுச் சந்தைகளைத் திறப்பதில் அச்சம் காணப்பட்டமையினால், யாழ்ப்பாணத்திலுள்ள பொதுச் சந்தைகள் அனைத்தும் சமூக இடைவெளியினை பேணக்கூடிய வகையில் மாற்று இடங்களில் சந்தை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், நல்லூர் பிரதேச சபையின் ஆளுகையின் கீழ் உள்ள யாழ்ப்பாணம், திருநெல்வேலி சந்தை நடவடிக்கைகள் தற்காலிகமாக திருநெல்வேலி கலாசாலை வீதியில் இடம்பெற்றுவந்தது.
இந்நிலையில், திருநெல்வேலி, கலாமன்ற சனசமூக நிலையத்தின் குறித்த பகுதியில் சன நெருக்கடி அதிகரித்துக் காணப்படுவதாகவும் மழை நாட்கள் என்பதால் வெள்ளநீர் தேக்கம் காரணமாக மக்கள் அசௌகரியத்திற்கு முகம் கொடுப்பதாகவும் விசனம் வெளியிடப்பட்டது.
இதனையடுத்து சந்தையை இடம் மாற்றுமாறு வடமாகாண ஆளுநர் மற்றும் அரசாங்க அதிபர் உட்பட உயர் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதன்காரணமாக, நாளைய தினத்திலிருந்து திருநெல்வேலி சந்தையானது ஆடியபாதம் வீதியில் உள்ள தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணியில் இயங்கவுள்ளதாக நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் த.தியாகமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

Blogger இயக்குவது.