எட்டுவழிச் சாலை: வழக்குக்குக் காரணம் முதல்வரா?

எட்டுவழிச் சாலை தொடர்பான நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டுமென முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சேலம் - சென்னை எட்டுவழிச் சாலை திட்டம் தொடர்பாக தமிழக அரசுப் பிறப்பித்த அறிவிப்பாணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.




இந்த நிலையில், சேலம் - சென்னை எட்டுவழிப் பசுமைச் சாலைத் திட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. உடனடியாக செயல்படுத்தி ஆக வேண்டும். எனவே, இந்த வழக்கை உடனடியாக அவசரமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் தற்போது இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.

இதுதொடர்பாக தஞ்சையில் நேற்று (ஜூன் 8) செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், “2019 மக்களவைத் தேர்தலில் சென்னை - சேலம் எட்டுவழிச் சாலை திட்டத்தைக் கைவிடுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஆனால், தற்போது மத்திய அரசைத் தூண்டிவிட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டு திட்டத்தைச் செயல்படுத்த முயற்சி செய்கிறாரோ என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.



அமைச்சர்கள் கருப்பணன், கடம்பூர் ராஜு போன்றவர்கள் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. எனவே முதலமைச்சர் போராடும் மக்களை ஏமாற்றுவதை கைவிட்டு எட்டுவழிச் சாலை குறித்து தனது நிலையைத் தெளிவுபடுத்துவதோடு, கொரோனா பாதிப்பு காலத்தில் உயிரை பணயம் வைத்து போராடும் மக்களின் போராட்டத்துக்கு மதிப்பளித்து அத்திட்டத்தை கைவிட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

மத்திய அரசு, விவசாயிகள் பெற்ற கடனை திரும்ப செலுத்த ஆகஸ்ட் 31 வரை கால நீட்டிப்பு செய்து வட்டி தள்ளுபடி செய்வதாக அறிவித்ததாகவும், ஆனால் அதற்கான அரசாணையில் வட்டி கணக்கிட உத்தரவிட்டு மோசடி நாடகம் ஆடுவதாகவும் சாடிய பாண்டியன், “இதைப் பயன்படுத்தி தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் வட்டியில்லா கடனுக்கு வட்டிக் கணக்கிட்டு கெடுபிடி வசூல் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். இதைத் தடுத்து நிறுத்த வேண்டும். நபார்டு வங்கி 30,000 கோடி கூடுதல் கடன் வழங்க ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் கூட்டுறவு வங்கிகள் நிலுவைக் கடன்கள் முழுமையும் தள்ளுபடி செய்ய வேண்டும். இல்லையேல் ஒத்தி வைத்துவிட்டு புதிய கடன் வழங்க தமிழக அரசு முன் வர வேண்டும்” என்று வேண்டுகோள் வைத்துள்ளார்.

மேலும், “தமிழகம் முழுவதும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதாலும், மாவட்ட எல்லைகளில் சோதனை சாவடிகளில் பரிசோதனைகள் கைவிடப்பட்டதாலும் அனைத்து கிராமங்களிலும் நோய்த் தொற்று தொடங்கி உள்ளது. இதனால் விவசாய உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தி நோய் தொற்றைக் கட்டுப்படுத்தத் தமிழக அரசு முன் வர வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.

எழில்
Blogger இயக்குவது.