குருதிப்பூ - புத்தகப் பார்வை!!

சங்ககால வாழ்வியல் என்றாலே, சங்கத் தமிழ்ப் பாடல்களும், அதற்கான விளக்கங்களுமாகத்தான் இருக்குமென்கிற எண்ணத்திலேயேப் பலரும் சங்ககாலத்தை ஒதுக்கி விடுவதுண்டு. ஆனால், அந்த எண்ணத்தை உடைத்தெறியும் வகையில், சங்ககாலப் பாடல் எதையும் குறிப்பிடாமல், அவற்றில் இடம் பெற்றிருக்கும் வாழ்வியல் குறித்தப் பல்வேறு தகவல்களைச் சுவையாக, குட்டிக்கதைகள் சொல்வது போல் மிக அருமையாகத் தனித்தன்மையுடன் நூலாக்கம் செய்திருக்கிறார் நூலாசிரியர். சங்ககாலத்தில் வாழ்ந்த தமிழ் மன்னர்களான சேரர், சோழர், பாண்டியர் மற்றும் களப்பிரர்கள் ஆகியோருடன் சில சிற்றரசர்கள் பற்றிய செய்திகளையும், தமிழ் நிலப்பகுதிகள் மற்றும் இயற்கை வளங்களையும், தமிழ்க் கடவுள் முருகன் குறித்த செய்தியினையும் பொதுவானவைகளாகத் தந்திருக்கும் நூலாசிரியர், தமிழர்களின் வாழ்வியல் நடைமுறைகளை மிகச் சிறப்பாக அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்கிற மேலான எண்ணத்தில் அழகாகத் தந்திருக்கிறார்.


சங்ககால வாழ்வியலில் காதலுக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட காதல் கதைகளில் சில சுவையன காதல் கதைகள் இந்நூலில் சொல்லப்பட்டிருக்கின்றன. அத்துடன், காதல் செய்யும் தலைவன், தலைவி, அவர்கள் காதலுக்கு உதவும் தோழன், தோழி, காதலால் கிடைத்த இன்பம், காதலால் அடைந்த துன்பம், காதலுக்குப் பின்பு தலைவன், தலைவியின் நிலை, இருவரும் சந்தித்துக் கொள்ள முடியாத நிலையில் காதலர்களிடம் ஏற்பட்ட மாற்றம், காதலியைக் கைப்பிடிப்பதற்காக ஏறு தழுவி வெற்றி பெற வேண்டிய கட்டாயம், காதலில் வெற்றி பெற்றுத் திருமணம் செய்தல், ஒருதலைக் காதலால் தோல்வியடைந்த காதலன் மடலேறுதல், ஊரார் தூற்றலால் மகளின் காதலுக்குத் தாய் தடை போடுதல், காதலுக்குத் தடை விழுந்த நிலையில் காதலி, காதலனுடன் உடன் செல்லல் என்று சங்ககாலக் காதல் தொடர்புடைய பல்வேறு செய்திகளை அருமையாகத் தந்திருக்கிறார்.

சிறு வயதிலேயேத் திருமணம் செய்து கொடுக்கப்பட்ட பெண், புகுந்த வீட்டில் எப்படி இருக்கிறாளோ? என்கிற அச்சத்தில் தாய், தன் மகள் புகுந்த வீட்டிற்குச் சென்று, கணவன், மனைவியாக இருவரும் மகிழ்ச்சியாகக் குடும்பம் நடத்துவதை அறிந்து மகிழ்கிறாள். சிறிய வயதிலேயே வாழ்க்கையின் பொருளை மகள் உணர்ந்து கொண்டுவிட்டதை எண்ணி மகிழ்கிறாள். இதே போல், பொருள் தேடச் சென்றிருக்கும் தலைவன் திரும்பி வருவதை எதிர் நோக்கியிருக்கும் தலைவியின் வருத்தங்கள், அவளுக்கு ஆறுதலாகத் தோழி தரும் நம்பிக்கைகள், தலைவன் வருகையின் போது தலைவி அடையும் மகிழ்ச்சிகள் போன்றவை சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. இதற்கிடையே, தலைவன் தலைவியைத் தவிர்த்து, பரத்தைகளுடன் சென்று தங்கியிருத்தல், பின்னர் அங்கிருந்து விடுபட்டுத் தலைவியிடம் மீண்டும் சேர விரும்புதல், அதற்குத் தலைவி ஒப்புக் கொள்ளாதிருத்தல் போன்ற செய்திகளும் தரப்பட்டிருக்கின்றன.

இளைஞர்கள் மகிழ்ச்சிக்காகக் கள் அருந்தும் பழக்கத்தைக் கொண்டிருந்திருக்கின்றனர். ஒரு இளைஞன், முதன்முறையாகக் கள் குடிக்கச் செல்கிறான். அங்கு அவனிடம், ‘கலங்கலா? தேறலா?’ என்று கேட்கிறார்கள். அவன் ஒன்றும் புரியாமல் விழிக்கிறான். “கலங்கல் என்றால் வடிகட்டி எடுக்காத கள். அது புளிப்பாக இருந்தாலும், களிப்பு (மகிழ்ச்சி) தரும். தேறல் என்றால் வடித்து எடுக்கப்பட்ட தெளிந்த கள். அது புளிக்காது, இனிக்கும். மயக்கமும் வராது” என்று கள்ளின் இரு வகைகளை எடுத்துச் சொல்லி, அதன் குணங்களையும் சொல்லியிருக்கின்றார். அத்துடன், கள் குடிப்பதால் ஏற்படும் தீமைகளும் விளக்கப்பட்டிருக்கின்றன.

தங்கள் வறுமையைப் போக்க, அரசனைப் பாடிப் பரிசு பெறச் செல்லும் புலவர்கள், அதற்காக அவர்கள் கடைப்பிடித்த நேர்மை, வாங்கி வந்த உயர்ந்த பரிசுகளைத் தனக்கும், தன் குடும்பத்துக்கும் மட்டுமென்று வைத்துக் கொள்ளாமல், தனக்கு அருகிலிருப்பவர்களுக்கும் பகிர்ந்தளிக்கும் தன்மை போன்றவை புலவர்கள் மேலான நல்லெண்ணங்களை மேலும் உயர்த்திக் காட்டுகின்றன. அக்காலத்தில் வாழ்ந்த புலவர்கள், மன்னர்களைப் புகழ்வதை மட்டுமே செய்யாமல், சில வேளைகளில் மன்னருக்குத் தேவையான அறிவுரைகளையும் சொல்லியிருக்கின்றனர். இங்கு மன்னரைக் காட்டிலும் புலவர்கள் உயர்ந்து நிற்கின்றனர். புலவர்களின் அறிவுரைகளை ஏற்றுக் கொண்ட மன்னர்களின் பெருந்தன்மையும் இங்கு போற்றத்தக்கதாகவே இருக்கின்றன.


போருக்குச் செல்லும் வீரர்கள் குறித்த செய்திகள், போருக்குச் செல்லும் வீரர்களுக்குத் தாய், மனைவி மற்றும் குடும்பத்தினர் தரும் ஒத்துழைப்புகள், போரினால் ஏற்பட்ட இழப்புகள் போன்ற செய்திகளையும் இந்நூலின் நூலாசிரியர் தந்திருக்கிறார். இங்கு, வீரம் குறித்த செய்தியுடன், நாட்டுப்பற்று குறித்த செய்தியையும் சேர்ந்துத் தெரிந்து கொள்ள முடிகிறது. இதே போன்று, இந்நூலில் சங்ககால மக்களின் வாழ்வியலுடன் தொடர்புடைய திருட்டு உள்ளிட்ட செய்திகளும் இடம் பெற்றிருக்கின்றன. சங்ககால வாழ்வியலை மிகவும் எளிமைப்படுத்திச் சொல்லியிருக்கும் இந்நூல் தமிழார்வலர்களுக்கும், தமிழ் ஆய்வாளர்களுக்கும் மட்டுமின்றித் தமிழ் படிக்கத் தெரிந்த அனைவருக்குமே உதவும் அருமையான நூல் என்று உறுதியாக சொல்லலாம்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.