பேராயரின் வேண்டுகோள் - சுகாதார அமைச்சரின் நடவடிக்கை!

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் முன்வைத்த யோசனைக்கு அமைய கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதல்களில் படுகாயமடைந்த 39 பேருக்கு தேசிய சுகாதார மேம்பாட்டு நிதியத்தின் செலவில் விசேட சிகிச்சைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் படுகாயமடைந்த , கை அல்லது கால்களை இழந்த சிறுவர்கள் முதியவர்கள் உள்ளிட்ட 39 பேருடைய விசேட சிகிச்சைகளுக்கு உதவும் வகையிலான வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்குமாறு பேராயர் சுகாதார அமைச்சரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சுகாதார அமைச்சின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளதாவது :
கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி யாரும் எதிர்பார்க்காத வகையில் முழு நாட்டையும் உலகத்தையும் அதிர்ச்சியடையச் செய்யும் வகையில் அடிப்படைவாதிகளால் கத்தோலிக்க தேவாலயங்களை இலக்கு வைத்து மிலேச்சத்தனமாக குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்த குண்டு தாக்குதல்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களாக அறியப்படுகின்றன.
இந்த குண்டுத் தாக்குதல்களால் நூற்றுக்கணக்கான மனித உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. அத்தோடு மேலும் பல நூற்றுக்கணக்கானவர்களுக்கு கை , கால்களை இழந்து படுகாயமடைய நேர்ந்தது. அவ்வாறு காயமடைந்தவர்களில் 139 பேர் தற்போதும் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதோடு அவர்களில் 39 பேருக்கு நீண்ட கால விசேட மருத்துவ சிகிச்சைகள் தேவைப்படுவதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
இவ்வாறு விசேட சிகிச்சை பெற வேண்டியவர்கள் தொடர்பில் பேராயரினால் எமக்கு விளக்கமளிக்கப்பட்டிருந்தது. அதற்கமைய குறித்த 39 பேருக்கும் அரசாங்கத்தின் செலவில் சிகிச்சைகளை முன்னெடுப்பதற்கு உதவி செய்யுமாறு பேராயரினால் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அது தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய அமைச்சர், ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையூடாக அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் உள்ளிட்ட விசேட வைத்தியர்கள் குழுவின் கீழ் சுகாதார அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சரின் முழுமையான கண்காணிப்பில் குறித்த 39 பேருக்கும் மேலும் சில சிகிச்சை பெற வேண்டிய தேவையுடையோருக்கும் உரிய விசேட சிகிச்கைகளை அளிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அத்தோடு இவர்களுக்கு எதிர்காலத்தில் வழங்கப்பட வேண்டிய மருத்துவ சிகிச்சைகளுக்கான அனைத்து செலவுகளையும் சுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டு நிதியிலிருந்து வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பேராயரிடம் தெளிவுபடுத்துவதற்காகவும் சிகிச்சைகளுக்காக முன்னெடுக்கப்பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடுவதற்காக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி நேற்று செவ்வாய்கிழமை கொழும்பு பேராயர் இல்லத்தில் பேராயரை சந்தித்தார்.
இந்த சந்திப்பின் பின்னர் கருத்து தெரிவித்த பேராயர் தமது கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு இவ்வாறானதொரு வேலைத்திட்டத்தை முன்னெடுத்தமைக்கு அரசாங்கத்திற்கும் சுகாதார அமைச்சருக்கும் விசேட நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என்றார்.
சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் படுகாயமடைந்த சிறுவர்கள், முதியவர்கள் உள்ளிட்டவர்களில் பெரும்பாலானவர்கள் ஆயுள் முழுவதும் சிகிச்சை பெற வேண்டிய நிலையிலுமுள்ளனர்.
இவ்வாறானவர்களுக்கும் நீண்ட கால சிகிச்சைப் பெற்றுக் கொள்ள வேண்டியவர்களுக்கும் தேவையான நிதி தேசிய சுகாதா மேம்பாட்டு நிதியத்திலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளது. பேராயரின் கோரிக்கைக்கு துரிதமாக தீர்வினைக்காண முடிந்தமை மகிச்சியளிக்கிறது. என்றார்.
Powered by Blogger.