கிழக்கு மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள வேண்டுகோள்!

கிழக்கில் தொல்பொருள் பிரதேசங்களை கண்காணிக்கும் ஜனாதிபதி செயலணியில் தமிழர்களும் இடம்பெறவேண்டுமென கிழக்கிலங்கை உயர்கல்வி மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள வொய்ஸ் ஒப் மீடியா ஊடக வள நிலையத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே மாணவர் ஒன்றியத்தினர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தனர்.
இதன்போது அவர்கள் தெரிவிக்கையில், “அண்மையில் ஜனாதிபதியால் கிழக்கிலங்கையில் இருக்கின்ற தொல்பொருள் சார்ந்த ஆவணங்களை ஆவணப்படுத்துவதற்கு நிபுணர் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
இலங்கை வரலாற்றில் அதுவும் கிழக்கிலங்கையைப் பொறுத்தவரையில் தொல்பொருள் மரபுரிமைகள் தொடர்பான அகழ்வாராய்ச்சிகளில் முதன்முறையாக அரச சார்போடு நடக்கிறது என்பதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் அதிலிருக்கின்ற சில குறைபாடுகளை நாங்கள் ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
அதாவது, ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட இந்த குழுவில் இருப்பது இராணுவமும் இராணுவம் சார்ந்த அமைப்பினருமே. அதற்கு அடுத்தபடியாக மதகுரு சார்ந்த அமைப்பினரும் அதிகப்படியாக உள்ளனர்.
ஜனாதிபதி இலங்கையின் இறைமையை பாதுகாப்பதிலும் இலங்கையை அபிவிருத்தியை நோக்கி இட்டுச்செல்லவும் பல நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருக்கின்ற அதேநேரம், இவ்வாறான ஒரு செயற்பாடு இலங்கையில் மேற்கொள்ளப்படுமாக இருந்தால், அது தமிழர்களின் உணர்வுகள் சார்ந்த விடயங்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய முன்னெடுப்புக்களை சாத்தியமாக்காத ஒரு விடயமாக இருக்குமென்பதை நாங்கள் அறியப்படுத்துகின்றோம்.
இலங்கை தேசத்தில் கிழக்கிலங்கை சார்ந்து இம்முயற்சிகள் முன்னெடுப்பது மிகமிக மகிழ்ச்சிக்குரிய விடயம். அதேநேரம் அந்தக் குழுவில் இருக்கும் அங்கத்தவர்களுடன் இந்த துறைசார்ந்த வல்லுநர்களான இரண்டு தமிழ் பிரஜைகள் என்றாலும் இக்குழுவில் இணைக்கப்பட வேண்டும். அப்போதுதான் கிழக்கிலங்கையில் காணப்படுகின்ற தொல்பொருள் சார்ந்த ஆவணங்களும் மிகமிக உறுதியான நம்பகத்தன்மையுடன் ஆவணப்படுத்தப்படும் என்பதை நாங்கள் தெரிவித்துக்கொள்கின்றோம்” எனத் தெரிவித்துள்ளனர்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.