பாடசாலைகளில் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் பற்றி யாழ்.பாடசாலை சுகாதார மருத்துவ அதிகாரி!!

வடக்கு மாகாணப் பாடசாலைகளில் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படுவதை கண்காணிப்பதற்கு பாடசாலை மட்டத்தில் சிறப்பு சுகாதாரக் குழு நியமிக்கப்படவுள்ளது.

இந்தத் தகவலை பாடசாலை சுகாதார மருத்துவ அதிகாரி நித்தியானந்தா தெரிவித்தார்.
கோவிட் – 19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக கடந்த 105 நாள்களாக பாடசாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில் இன்றையதினம் பாடசாலைகள் மீளத் திறக்கப்பட்டுள்ளன.
இன்றைய தினம் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர்கள் கடமைக்குச் சமுகமளித்தனர்.
பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் பின்பற்றப்பட வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பில் யாழ்ப்பாணப் பாடசாலை சுகாதார மருத்துவ அதிகாரி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
அவர் தெரிவித்ததாவது;
பாடசாலைகள் சுத்திகரித்து கிருமித் தொற்று நீக்கும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஒரு வார காலம் ய சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதற்கான செயற்பாடுகள் அதிபர், ஆசிரியர்களால் முன்னெடுக்கப்படும்.
முக்கியமாக கை சுகாதாரம், சமூக இடைவெளி போன்றவற்றுக்குரிய செயற்பாடுகள் பாடசாலை மட்டத்தில் மேற்கொள்ளப்படும்.
மேலும் இது தொடர்பில் ஆசிரியர்களுக்கான செயற்திட்டங்கள் மற்றும் பெற்றோர்களுடனும் கலந்துரையாடல்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மாணவர்களை பாடசாலைக்கு அனுப்பும் போது அவர்கள் எவ்வாறு சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது தொடர்பிலும் நாங்கள் அவர்களுக்கு எடுத்துக் கூறியுள்ளோம்.
இந்தக் காலகட்டத்தில் மாணவர்கள் அனைவரும் பாடசாலைக்கு வரும் பொழுது முகக்கவசங்களை கட்டாயமாக அணிந்து வருவதுடன் பாடசாலை சுற்றாடலுக்கு பிரவேசிக்கும் முன்னர் பாடசாலையின் முன்வைக்கப்பட்டுள்ள கைகழுவும் இடத்திற்கு சென்று தமது கைகளினை சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு மீற்றர் சமூக இடைவெளிக்கு அமைவாக பாடசாலைகளின் வகுப்பறைகளை அமைக்குமாறு நாங்கள் பரிந்துரை செய்துள்ளோம்.
குறிப்பாக இது நகர பாடசாலைகளுக்கு பொருத்தமில்லாதாக இருக்கக் கூடும். ஆனால் கிராமப்புற பாடசாலைகளில் முன்னெடுக்குமாறு அதிபர்களுக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளோம்.
பாடசாலைகளில் மாணவர்கள் சுகவீனமுற்றால் அவர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கு ஏற்பாடுகள் பாடசாலை மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான ஒரு தனி அறையும் அமைக்குமாறு நாங்கள் பாடசாலை அதிபரிடம் பரிந்துரை செய்துள்ளோம்.
அதேபோல் நான் பெற்றோர்களுக்கு இன்னொன்றை கூறிக்கொள்ள விரும்புகின்றேன். இந்த காலகட்டத்தில் பாடசாலைகளில் சிற்றுண்டிச் சாலைகள் திறக்கப்படமாட்டாது.
மாணவர்களுக்கு வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவினை வழங்கி பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்குமாறு பெற்றோரிடம் நான் வேண்டுகோள் ஒன்றினை விடுகின்றேன்.
அதேபோல் மாணவர்கள் ஏனைய மாணவர்களுடன் உணவைப் பகிர்ந்து கொள்வதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. குடிதண்ணீரும் கொண்டு வருதல் வேண்டும். அது சுத்தமான நீராக இருப்பது மிகவும் சிறந்தது.
இது தொடர்பில் பாடசாலை மட்டத்தில் இந்த சுகாதார நடைமுறையினை கண்காணிப்பதற்காக சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
அதே போல் இந்த சுகாதார குழுவினர் வாரத்துக்கு ஒருமுறை பாடசாலைகளுக்கு வருகை தந்து பாடசாலையின் சுகாதாரம் தொடர்பில் அறிக்கைகளை எங்களுக்கு சமர்ப்பிப்பார்கள்.
இதை விட மேலதிகமாக பொது சுகாதார பரிசோதகர்கள் வாரத்துக்கு ஒரு தடவை மாதத்துக்கு ஒரு தடவை பாடசாலைகளை மேற்பார்வை செய்வார்கள்- என்றார்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.