பொய்களால் என்னைக் கொல்லாதீர்கள்: ஜானகி வேதனை!

தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்' என அழைக்கப்படும் பாடகி ஜானகியின் உடல்நிலை பற்றிய வதந்தி நேற்று(ஜூன் 28) மதியம் முதல் பரவத்தொடங்கிய நிலையில், ஜானகி அவர்கள் வதந்திகளுக்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.


எஸ். ஜானகி இந்தியாவின் புகழ் பெற்ற திரைப்படப் பாடகி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உட்படப் 17 மொழிகளில் பல ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடியவர். நான்கு தேசிய விருதுகள், 33 மாநில விருதுகள் என 55 ஆண்டு காலத்துக்கும் மேல் இசைத்துறையில் வலம் வருபவர் இவர். 2016ஆம் ஆண்டு திரையுலகிலிருந்து தான் விலகுவதாக அறிவித்த ஜானகி, ஹைதராபாத்தில் தனது மகன் முரளி கிருஷ்ணனுடன் வாழ்ந்து வருகிறார்.

சில வருடங்களுக்கு முன்னதாக, இவரது உடல்நலம் குறித்து வதந்தி உருவானது. அதற்கு அவரும், அவரது குடும்பத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று(ஜூன் 28) மதியம் முதலே ஜானகி அம்மாள் உடல்நிலை குறித்து மீண்டும் வதந்தி உருவானது. மேலும், ஜானகி அம்மாள் மறைந்துவிட்டார் என்றும் வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவின. இதனிடையே ரசிகர் ஒருவருடன் பாடகி ஜானகி அவர்கள் நேற்று (ஜூன் 28) பேசியுள்ள ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ஜானகி அம்மா பேசியிருப்பதாவது, "எல்லாருமே போன் போட்டு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். எத்தனை போன் தெரியுமா?. எதற்கு இந்த மாதிரி செய்தியை வெளியிடுகிறார்கள் என்று தெரியவில்லை. இது முதல் முறையல்ல, 6 வது முறை. சும்மா அநாவசியமாக வேண்டுமென்றே செய்து கொண்டிருக்கிறார்கள். முன்னதாக இதே மாதிரி செய்தி வந்த போது வாட்ஸ்-அப்பில் பேசி அனுப்பினேன். இந்த மாதிரி வதந்திகள் எல்லாம் வேண்டாம். இந்த மாதிரி செய்தி எல்லாம் கேட்டால் சிலருக்கு உடல்நிலை பாதிக்கும். இந்த மாதிரி பொய் எல்லாம் சொல்லி என்னை நீங்க கொல்லாதீங்க என்று நல்லா திட்டிவிட்டேன். மறுபடியும் இப்படி செய்கிறார்கள்" எனக் கூறியுள்ளார் ஜானகி அம்மாள்.

இசையமைப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் தீனா வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில் "எஸ்.ஜானகி அம்மா தவறிவிட்டதாக தவறான தகவல் பரவிக் கொண்டிருக்கிறது. இப்போது தான் எஸ்.பி.பி அண்ணாவிடம் பேசினேன். அவர் உடனே ஜானகி அம்மா குடும்பத்தினரிடம் தொலைபேசியில் பேசினார். ஜானகி அம்மா நல்லா சிரித்து சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார். நல்ல ஆரோக்கியத்துடன் தான் இருக்கிறார். எந்தவித பயமும் இல்லை. ஆகையால் எந்தவொரு தவறான தகவலையும் பரப்பாதீர்கள்" என்று தெரிவித்துள்ளார்.

இன்னமும் பல ஜானகி ரசிகர்கள், 'புத்தம் புது காலை' என ஜானகியின் குரலோடு தான் தங்கள் காலை பொழுதுகளை இசையோடு துவக்குவர். அந்தளவிற்கு ரசிகர்களின் மனதில் படிந்திருக்கும் குரலுக்கு சொந்தக்காரரான ஜானகிக்கு தொடர்ந்து இவ்வாறு நடப்பது வருத்தத்திற்கு உரியதே.

-முகேஷ் சுப்ரமணியம்
Blogger இயக்குவது.