உருவாகிறது நிசர்கா புயல் – மும்பைக்கு சிவப்பு எச்சரிக்கை!!
அரபிக் கடலில் இன்று உருவாகும் நிசர்கா புயல் காரணமாக மகாராஷ்டிரா, குஜராத், கோவாவில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அரபிக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகலுக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாகி பின்னர், புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று உருவாகவுள்ள புயலுக்கு நிசர்கா என பெயரிடப்பட்டுள்ளது.
நிசர்கா புயல் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை பிற்பகல் மகாராஷ்டிராவின் ஹரிஹரேஸ்வர்-டாமன் இடையே கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
நிசர்கா புயல் காரணமாக, மேற்கு இந்திய பகுதிகள் குறிப்பாக மகாராஷ்டிராவின் மும்பை உட்பட சில பகுதிகள் கோவா மற்றும் குஜராத் மாநிலங்களில் மணிக்கு 115 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. மேலும் மும்பைக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று பிற்பகலுக்கு பிறகு கிழக்கு-மத்திய அரபிக்கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும். அடுத்த 24 மணி நேரத்திற்கு தென்கிழக்கு அரபிக் கடல், லட்சத்தீவு பகுதி மற்றும் கேரள கடற்கரை பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேபோல் கிழக்கு-மத்திய மற்றும் வடகிழக்கு அரபிக் கடல் மற்றும் கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, தெற்கு குஜராத் கடற்பகுதிகளுக்கு ஜூன் 3 வரை மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

.jpeg
)




