அத்தியாவசியமற்ற பொருட்கள் இறக்குமதி மட்டுப்படுத்தபட்டுள்ளது!

நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்டுவரும் அத்தியாவசியமற்ற பொருட்கள் இறக்குமதியை மட்டுப்படுத்தியுள்ளதால், உள்நாட்டில் பல துறைகளில் உற்பத்திகளை ஆரம்பிப்பதற்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்ட வகையில் மக்கள்மயப்பட்ட பொருளாதாரத்திற்கான பாதை திறக்கப்பட்டுள்ளது என்றும் உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தையை வெற்றிகொள்வது தொழிலதிபர்களுக்குள்ள தற்போதைய சவாலாகுமென்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.
கைத்தொழில் மற்றும் வர்த்தக முயற்சிகளின் அபிவிருத்திக்கான அனைத்து அமைச்சுக்களையும் ஒன்றிணைத்த வகையில் உருவாக்கப்பட்டுள்ள செயலணி மற்றும் பல்துறைசார் தொழிலதிபர்களுடன் நேற்று (திங்கட்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
மக்களின் நுகர்வுத் தேவையை பூரணப்படுத்தல், புதிய தொழில் முயற்சிகளை உருவாக்குவதுடன், நாட்டிற்கு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தல் போன்ற வர்த்தகர்களினால் முன்னெடுக்கப்பட வேண்டிய பல்வேறு விடயங்கள் காணப்படுகின்றன. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து பொருட்கள் மற்றும் வழங்கப்படும் அனைத்து சேவைகளினதும் தரத்தை உயர் மட்டத்தில் பேணுவதற்கும் சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதற்கும் முயற்சி எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
கைத்தொழிலாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க அனைத்து அரச நிறுவனங்களும் ஒன்றுபட்டுள்ளன. தனி இலக்க வட்டி வீதத்திற்கு வங்கி கடன் வழங்குதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஒருசில மாதங்களுக்குள் இந்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தும்புத்தடி, ஈர்க்கில்மாறு தொடக்கம் மருந்து வில்லை வரை உள்நாட்டு உற்பத்திகளை அதிகரிக்கச் செய்து பெறுபேற்றைக் காண்பிப்பது தொழிலதிபர்களிடம் இருந்து தான் எதிர்பார்க்கும் விடயம் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.
விவசாயிகளுக்கு பயிர்ச் செய்கைக்கான ஆலோசனைகளை வழங்கி, விவசாய பொருட்களை இறக்குமதி செய்வது அரசாங்கத்தின் கொள்கையாகாது. உறுதியான கொள்கையுடன் இருந்து அரசாங்கத்தின் செயற்பாடுகளை முன்கொண்டு செல்வதால், தொழிலதிபர்களைப் போன்று விவசாயிகளுக்கும் பொருட்களுக்கான கேள்வியை அடையாளம் கண்டு செயற்படுவதற்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.