ஜனாதிபதி - பிரதமர் விடுத்துள்ள ஆணித்தரமான அறிவிப்பு!

அமெரிக்காவுடனான எம்.சி.சி ஒப்பந்தத்தை செய்துகொள்ள மாட்டோம் என்று கோட்டா-மஹிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா அரசாங்கம் ஆணித்தரமாகத் தெரிவித்துவருகின்ற போதிலும் மிகவிரைவில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

இதன் சமிக்ஞையை அமெரிக்காவுக்கு வெளிப்படுத்தும் முகமாக அண்மையில் அமெரிக்காவுக்கு எதிராக கொழும்பில் நடத்தப்பட்ட முன்னிலை சோஸலிசக் கட்சியின் ஆர்ப்பாட்டத்தைக் கலைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்ததாகவும் அந்தக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
கண்டி - ஸ்ரீதலதா மாளிகைக்கு இன்றைய தினம் முற்பகல் விஜயம் மேற்கொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல, அங்கு வழிபாடுகளில் ஈடுபட்டார். அதன் பின்னர் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரைச் சந்தித்து அவர் தலைமையிலான குழுவினர் ஆசிபெற்றுக்கொண்டனர்.
இதன்போது ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்திக்கு இடையிலான நெருக்கடிகள், தேர்தல் நடவடிக்கைகள், சமகால அரசியல் என பல விடயங்களை மகாநாயக்கருடன் அவர் கலந்துரையாடி ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டார்.
இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட முன்னாள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல,
அமெரிக்காவுடனான எம்.சி.சி ஒப்பந்தம் குறித்து ஐக்கிய மக்கள் சக்தி முழுமையான திருப்தியைக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். தற்போது ஆட்சியில் உள்ளவர்கள் நல்லாட்சியின்போது எம்.சி.சி ஒப்பந்தத்திற்கு எதிராக பொய்யான எதிர்ப்பையே வெளியிட்டார்கள். மக்களை ஏமாற்றுவதற்காக அப்படி செய்தார்கள். தற்போது அந்த ஒப்பந்தத்தில் நான்கில் மூன்று பகுதி நல்லது என்கிறார்கள்.
மேலும் இந்த ஒப்பந்தத்தை ஸ்ரீலங்கா அரசாங்கம் மீளாய்வுக்கு உட்படுத்த இணக்கம் வெளியிட்டிருப்பதாக அமெரிக்கத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா அரசாங்கமும் அதனைத் தெரிவித்துள்ளது. எனினும் அவர்கள் எதிர்கட்சியாக இருந்தகாலத்தில் இந்த ஒப்பந்தத்தை மீளாய்வுக்கு உட்படுத்தமாட்டோம் என்றும் கிழித்தே எறிவதாகவும் கூறினார்கள்.
எனினும் அமெரிக்காவுடன் தற்போது மோதுவதற்கு அரசாங்கம் தயாராக இல்லை. அண்மையில் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு முன்பாக முன்னிலை சோஸலிசக் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது அதனைக் கலைப்பதற்காக பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதுவும் அமெரிக்காவைத் திருப்திப்படுத்த எடுத்த நடவடிக்கையாகும். அமெரிக்கத் தூதரகத்திற்கு முன்பாக அமெரிக்காவிற்கெதிரான செயற்பாடுகளுக்கு இடமளிக்கமாட்டோம் என்பதை அமெரிக்காவுக்கு அரசாங்கம் இதனூடாகத் தெரியப்படுத்தியுள்ளது.
தற்போதைய அரச தலைவரும் முன்னாள் அமெரிக்கர்தானே. அரசாங்கத்திற்கு இப்போது நிதிநெருக்கடி உள்ளதால் இந்த எம்.சி.சி ஒப்பந்தத்தின் ஊடாக 500 மில்லியன் டொலர்கள் பெற்றுக்கொள்வதற்காக விரைவில் அரசாங்கம் இதில் கைச்சாத்திடும்.
நாங்கள் இந்த ஒப்பந்தம் குறித்து திருப்தியடைகின்றோம். ஆனால் அன்று எதிர்த்தவர்களே இன்று அதனை ஆதரிக்கின்றனர் தெரிவித்தார்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்திக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையிலான பிரச்சினைகளை பொதுத் தேர்தலின் பின் தீர்த்துக்கொள்வதாகவும் முன்னாள் அமைச்சர் கிரியெல்ல கூறினார்
இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
ஐக்கிய மக்கள் சக்தியானது ஐக்கிய தேசியக் கட்சினால் உருவாக்கப்பட்ட குழந்தையாகும். கட்சியின் மத்திய செயற்குழுவினால் இதற்கான அங்கீகாரம் அளிக்கப்பட்டது.
நான் ஒரு கேள்வியை எழுப்புகின்றேன். கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் பிரசார மேடையில் வைத்து சஜித் பிரேமதாஸவின் கைகளைப் பிடித்து உயர்த்திவிட்டார்.
இப்போது அவரை புறந்தள்ள முடியுமா? தனிமைப்படுத்த முடியுமா? ஆகவே ஐக்கிய தேசியக்கட்சிக்கும், ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையிலான நெருக்கடிப் பிரச்சினைகளுக்கான தீர்வை பொதுத் தேர்தலின் பின்னர் பேசி பெற்றுக்கொள்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.