உனக்காக ஒரு கவி!

ஆழ்கடல் அத்தனையும்
இனி என் ஆனந்த கண்ணீருக்கே
உவமை என்பேன்..!


சூழ்நிலை எப்போதும்
இனி எனக்கு சுக்கில பக்கமே
சுழலும் என்பேன்..!

என் வாழ்க்கை பயணத்தின்
வழித்துணையாய் வந்தவளே......

உன்னோடு நடக்கயில்
தாழ்வாரம் எதுவும்
என் தலையில் தட்டவில்லை..!

உன்னோடு நடக்கயில்
அதிர்ஷ்ட கதவுகளில்
தாழ்ப்பாள் கூட இல்லை..!

உன்னோடு நடக்கயில்
என் உல்லாச குரங்குக்கு
உச்சி வரம்பே இல்லை..!

உன்னோடு நடக்கயில்
என் உள்ளத்தில் எதுவும்
உபாதைகளே இல்லை...!

இந்த எரிமலையில் கோயில் கட்டிட
உனக்கு எப்படித்தான்
எண்ணம் வந்ததோ..!
உன் பரிவுகளை
கண்ட பின்பு
நான் பனிமலையாய் ஆனேன்டி..!

ஒரு துளி மழையாய்
கிடந்த என்னை...
பெரும் நதியென மாற்றிய
ஓடை நீ..!
திருமண நாளை
திரும்பிப் பார்க்கயில்
வருடம் முழுதும்
வறட்சி இல்லையடி..!

உன் திருமுகம் பூசிய
வெட்கம் கண்டே
என்மனம்
திருவிழா நடத்த கற்றது..!

உன் கருவிழியில்
சங்கமம் கொண்ட என் பிம்பம்
கோடி அழகை பெற்றது..!

நான் முத்தம் கேட்கும் போதெல்லாம்
பனித்துளியின் கால்தடங்கள்
என் கன்னங்களில்
பதிவதை உணர்ந்தேன்..!

பெரும் யுத்தம் செய்யும்
உன் கோபப் பார்வையிலோ...
அந்த முத்தங்களை விட
அதிக காதலை உணர்ந்தேன்..!

இரத்தமும் எச்சியும்
வற்றியே போனாலும்...
என் உயிரை தக்க வைக்க
உன் காதல் போதும்..!

நித்தமும் உன்னை
நினைத்து நினைத்தே...
என் நிழலும் கூட
சொர்க்கம் சேரும்..!

என் நிழலும் கூட
சொர்க்கம் சேரும்..!!!

- ந.இராஜ்குமார்

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.