வைரமுத்துவுக்கு வாழ்த்து கூறிய பாரதிராஜா!!

கவிப்பேரரசு வைரமுத்துவின் 66வது பிறந்த நாளை கோலிவுட் திரையுலகமே கொண்டாடி வரும் நிலையில் இயக்குனர் இமயம் பாரதிராஜா தனது சொந்த ஊரில் இருந்து வெளியிட்டிருக்கும் வீடியோ வாழ்த்துக்கவிதையில் கூறியிருப்பதாவது:


இன்றைய தினம் ஜூலை 13, தமிழ் மண் பொங்கி எழ வேண்டிய நாள், பூப்பெய்திய நாள், இலக்கிய உலகம் பூத்த நாள். கவிப்பேரரசு வைரமுத்துவின் 66 வது பிறந்த நாள். சொல்வதற்கே மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த மண் பூப்பெய்த நாளென்று சொன்னேன். இலக்கிய உலகம் பூரித்து எழ வேண்டிய நாள்.

இலக்கிய உலகமும் சரி, திரைப்படத்துறையும் சரி, ஒரு கவிஞனை இப்படி கண்டெடுத்திருக்க முடியாது. அதிலும் எங்கள் மதுரை மண், மிகப்பெரிய பெருமைக்குரியது. இன்று வைகை வறண்டு கிடக்கிறது. ஆனால், இவர் பெயரைச் சொன்னால், ஓர் ஊற்று கிளம்பி வரும். மேற்கு தொடர்ச்சி மலை சிலிர்த்துக்கொண்டிருக்கிறது. மேகங்கள் எல்லாம் பரந்து, அந்த மலையை பொன்னாடை போர்த்திக் கொண்டிருக்கிறது. அத்தகைய ஒரு நாள்.

திரைத்துறையில் கவிஞர்கள் இருந்திருக்கிறார்கள். கண்ணதாசன் இருந்திருக்கிறார். மிகப்பெரிய கவிஞர் அவர். அதன்பிறகு தமிழ் திரையுலகக்கு, இலக்கிய உலகுக்கு பெரிய இடைவெளி வந்துவிடுமோ என்று பயந்த நேரத்தில் பிறந்தவர்தான் கவிப்பேரரசு வைரமுத்து. இந்த கொரோனா நேரத்தில் ஒரு சால்வை போர்த்தி சடங்காக ஒரு நன்றி சொல்ல முடியவில்லை. அதற்கு நன்றி சொல்ல வேண்டும். காரணம், இந்த கொரோனா பிரித்து வைத்திருந்தாலும் நான் உன்னில் இருப்பேன், நீ என்னில் இருப்பாய் என்பது உலகறியும்.

நான் சொல்லிக்கொண்டிருப்பேன். இந்த கொரோனா யாரை வேண்டுமானாலும் பாதிக்கும். உன்னை மட்டும் பாதிக்காது. ஏனென்றால் வைத்தியம் தெரிந்தவன். எதை எவ்வளவு அளவோடு சாப்பிட வேண்டும். எதை எதை கலந்து சாப்பிட வேண்டும், உடல் ஆரோக்கியத்துக்கு அற்புதமாக அறிந்து வைத்திருப்பவன். ஒரு கருவாட்டுக் குழம்பை வைக்கிறோம், அதை அற்புதமாக எப்படி வைப்பது என்பதையும் சொல்வான்.

வயிற்றுப்போக்காக இருக்கிறதே, அதற்குச் சொல்வான் வைத்தியம். மனநிலை சஞ்சலமாக இருக்கிறதே, அதற்கும் மருந்து சொல்வான். அவன் விஞ்ஞான கவிஞனாகவும் இருக்கிறான், மண் சார்ந்த கவிஞனாகவும் இருக்கிறான். அங்குதான் ஆச்சரியப்பட வேண்டும். ஒரு புத்தகம் எழுதினாலும் சரி, கவிதை எழுதினாலும் சரி, ஒவ்வொரு வரியிலும் உயிர் இருக்கும். ஐநூறு பக்கங்களைக் கொண்ட புத்தகங்களை புரட்டினால், முதல் நான்கு பக்கங்கள் பிரமாதமாக இருக்கும். ஐந்தாவது பக்கம் செல்லும்போது சாதாரணமாகி விடும்.

ஆனால், பக்கத்துக்குப் பக்கம் வரிக்கு வரி, இதோ வைரமுத்து இருக்கிறேன் என்று அந்த வரிகள் பேசிக்கொண்டிருக்கும். அத்தகைய சிறப்புக்குரிய மிகப்பெரிய கவிஞன். அவனோடு இணைந்து நான் பணியாற்றிய காலம் அற்புதம். படப்பிடிப்பு இருக்கும்போதுகூட நாங்கள் வாழ்ந்து மூழ்கியதில்லை. இந்த கொரோனா காலத்தில் உட்கார்ந்து பார்க்கிறேன். புரிந்து செய்தாயோ, புரியாமல் செய்தாயோ, அற்புதமான வரிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறாய்.

உலகத் தமிழர்கள் அனைவரும் உன்னை வாழ்த்துகிறார்கள். தமிழகம் உன்னைத் தவமாக பெற்றிருக்கிறது. ஷேக்ஸ்பியரையும் ஷெல்லியையும் சொல்வார்கள். எங்கள் நாட்டின் ஷேக்ஸ்பியரும் ஷெல்லியும் கவிப்பேரரசு வைரமுத்துதான். வாழ்க, நீடுழி வாழ்க. இன்னும் சிறந்த படைப்புகளை உங்களிடம் எதிர்பார்க்கிறார்கள். நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. மதுரை பெற்ற செல்வம். தெரிந்து பெயர் வைத்தார்களோ தெரியவில்லை. பிறக்கும்போதே வைரமுத்து. நீ பட்டை தீட்டிய வைரம். கிடைப்பதற்கு அரிய முத்து. வாழ்க, வாழ்த்துகள்.

இவ்வாறு இயக்குனர் பாரதிராஜா கூறியுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.