பாரதிராஜாவுக்கு ‘பால்கே’ விருது

பிரபல இயக்குநர் பாரதிராஜாவை பெருமைப் படுத்தும் விதமாக அவருக்கு ‘தாதா சாகிப் பால்கே’ விருது வழங்க வேண்டும் என்று தேசிய விருது பெற்ற நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், எழுத்தாளர்கள் ஆகியோர் இணைந்து இந்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.


தாதா சாஹிப் பால்கே விருது!

இந்தியத் திரையுலகின் முதல் முழு நீளத் திரைப்படத்தை இயக்கியவர் பாபா சாஹிப் பால்கே. 1913 ஆம் ஆண்டு அவர் இயற்றிய ஹரிச்சந்திரா திரைப்படம்தான் இந்தியாவின் முதல் முழு நீள திரைப்படம். 1944 ஆம் ஆண்டு காலமான இந்திய சினிமாவின் தந்தை எனப்படும் தாதா சாஹிப் பால்கேவின் பெயரால் 1969 ஆம் ஆண்டு ஒவ்வொரு ஆண்டும் இந்திய சினிமாவை முன்னோக்கி நகர்த்திய ஆளுமைகளுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. 

ஐம்பத்து இரண்டு ஆண்டுகளில் ஐம்பது ஆளுமைகள் இந்த விருதை பெற்றிருக்கிறார்கள். சினிமாவின் பாரத ரத்னா என்று சிறப்பாக அழைக்கப்படும் இந்த விருது தமிழகத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் , இயக்குனர் இமயம் கே. பாலச்சந்தர் ஆகியோரை இதுவரை அலங்கரித்திருக்கிறது. இந்திய சினிமாவை ஒவ்வொரு தலைமுறையிலும் முன்னே நகர்த்தும் படைப்பாளிகளை கணிசமாகக் கொண்டது தமிழ் சினிமா. ஆயினும் இந்த ஐம்பதாண்டுகளில் இருவர் மட்டுமே தாதா சாஹிப் பால்கே விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

தேர்ந்தெடுக்கும் முறை என்ன?

இந்திய அரசாங்கத்தின் திரைப்படத் துறையால் நியமிக்கப்படும் இந்திய திரையுலகத்தினரின் முக்கியமான ஆளுமைகளின் குழுவால் ஒவ்வொரு ஆண்டும் பால்கே விருதுக்கான விருதாளர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஒன்றிய அரசின் தகவல் ஒலிபரப்புத் துறை சார்பில் நியமிக்கப்படும் குழுதான் பால்கே விருதாளரை தேர்வு செய்யும். இந்திய சினிமாவை ஆக்கபூர்வமான முறையில் முன்னேற்றத் திசையில் கொண்டு சென்றவர்களில் இருந்து ஒருவரை தேர்ந்தெடுத்து வருடா வருடம் இந்த விருது வழங்கப்படுகிறது.


ஐந்து பேர் கொண்ட இந்த விருது தேர்வுக் குழுவில் குறைந்தது இரண்டு பேர் ஏற்கனவே பால்கே விருது பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்ற வரையறையை மாற்றியது மோடி அரசு. அவர்களுக்கு பதிலாக திரைப்படம், மனிதநேயம் அல்லது பொழுதுபோக்குத் துறையைச் சேர்ந்த சிறந்த நபர்களை கொண்டுவரலாம் என்று முடிவு செய்தது அரசு. 

ஏற்கனவே பால்கே விருது பெற்றவர்கள் வயதானவர்களாக இருப்பதால் அவர்களால் இந்த விருதை இறுதி செய்வதற்கான நீண்ட விவாதங்களில் பங்கேற்க இயலாது என்ற அடிப்படையில் இந்த மாற்றம் செய்வதாக காரணம் சொன்னார்கள்.


 இந்திய சினிமாவின் வளர்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு சிறப்பான பங்களிப்பு செய்ததற்காக அளிக்கப்படும் இந்த விருதில் தங்கத் தாமரைப் பதக்கம், சால்வை மற்றும் ரூ .10 லட்சம் ரொக்கப் பரிசு ஆகியவை அடங்கும்.


இந்த நிலையில்தான் இயக்குநர் இமயம் என்று போற்றப்படும் பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் 78ஆவது பிறந்த நாளான இன்று (ஜூலை 17) தமிழக திரையுலகம் சார்பில் ஒன்றிய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்கள். தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள், படத் தொகுப்பாளர்கள், எழுத்தாளர்கள் என 36 பிரபலங்கள் இணைந்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கோரிக்கைக் கடிதம் அனுப்பியுள்ளனர். 


அதில் இந்தியத் திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் ‘தாதா சாகிப் பால்கே’விருதை இவ்வருடம் இயக்குநர் பாரதிராஜாவுக்கு வழங்கி அவரைப் பெருமைப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
புரட்சியின் புதிய அலையைத் தொடங்கி வைத்தவர்


அந்த கடிதத்தில், “இன்று (17-07-2020) பிறந்தநாள் கொண்டாடும் தென்னிந்தியாவின் ‘இயக்குநர் இமயம்’, தயாரிப்பாளர், பத்மஸ்ரீ பாரதிராஜா, தென்னிந்தியத் திரையுலகில் புதிய அலையைத் தொடங்கி வைத்தவர். கடந்த 43 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து திரைப்படங்களை இயக்கி வருபவர். 1977 முதல் 2019 வரை இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் 42 திரைப்படங்களை இயக்கியுள்ளார். வேலையில்லாத் திண்டாட்டம், தீண்டாமை, சாதிய மோதல்கள், பெண் சிசுக்கொலை போன்ற சமூகக் கொடுமைகளை எதிர்க்கும் படங்களை இயக்கியவர் பாரதிராஜா.


மகளிர் முன்னேற்றம் உள்ளிட்ட சமூக மாற்றத்துக்குத் தேவையான நடவடிக்கைகள், சமூக விழுமியங்கள், ஆகியவற்றை வலியுறுத்தும் படங்களையும், மனித உறவுகளை மகிமைப்படுத்தும் படங்களையும் இயக்கி, தென்னிந்தியாவின் தனிப் பெரும் இயக்குநராக விளங்குகிறார். படைப்பாளிகளுக்கு உத்வேகமூட்டும் சக்தியாகவும் திகழ்கிறார்.


 சிவாஜி கணேசன், ராஜேஷ் கன்னா, கமல்ஹாசன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி, ஸ்ரீதேவி, அமோல் பலேகர், நானா படேகர், சன்னி தியோல், சுஹாசினி மணிரத்னம், பூனம் தில்லான், ராதிகா சரத்குமார், விஜயசாந்தி, ரதி அக்னிஹோத்ரி, ரேவதி, ஜெயசுதா உள்ளிட்ட பல புகழ்பெற்ற நடிகர்களை இயக்கியவர்.


சென்னையில் அமைக்கப்பட்ட செட்களில் உருவாகி வந்த தமிழ் சினிமாவை முதன் முதலாக கிராமங்களுக்கு எடுத்துச் சென்றவர் அவர்தான். உண்மையாக மக்கள் வாழும் பகுதிகளில் திரைப்படங்களைப் படமாக்கியதன் மூலம் புதிய புரட்சியை உருவாக்கியவர். அவரது வருகையும், அவரால் உருவாக்கப்பட்ட புதிய அலையும் பல புதிய திறமைசாலிகளை இந்தியா சினிமாவுக்குக் கொண்டு வந்தன. 

கே.பாக்யராஜ், மணிவண்ணன், மனோபாலா ஆகியோர் இவர்களில் முக்கியமானவர்கள்.
புதிய தலைமுறை இயக்குநர்களுக்கு உந்துதலாகத் திகழ்பவர்


புகழ் பெற்ற பாடலாசிரியரும் ஏழு முறை தேசிய விருது பெற்றவருமான கவிப்பேரரசு வைரமுத்துவை அறிமுகப்படுத்தியவரும் அவர்தான். 50-க்கும் மேற்பட்ட நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தியவர் பாரதிராஜா. அவர் தன்னுடைய திரைப்படங்களுக்காக இந்திய அரசிடமிருந்து ஆறு முறை தேசிய விருதை வென்றுள்ளார். 2017ஆம் ஆண்டின் தேசிய விருதுகள் நடுவர் குழுவின் தலைவராக செயல்பட்டார். 


ஆறு முறை தமிழக அரசின் விருதை வென்றுள்ளார். அவர் இயக்கிய தெலுங்குப் படத்துக்காக ஆந்திர பிரதேச மாநில அரசின் பெருமைக்குரிய நந்தி விருதை வென்றார். 2004ஆம் ஆண்டில் மதிப்புக்குரிய பத்மஸ்ரீ விருதை வழங்கி இந்திய அரசு அவரைக் கெளரவித்தது என்றெல்லாம் பாரதிராஜாவின் பெருமையைப் பட்டியலிட்டுள்ளனர்.


மேலே உள்ள பட்டியலில் இடம் பெற்றவை, இந்த மாபெரும் திரை இயக்குநரின் சில சாதனைகள் மட்டுமே. தன் திரைப்படங்கள் மூலம், அவர் தொடர்ந்து புதிய தலைமுறை இயக்குநர்களுக்கு உந்துதலாகத் திகழ்கிறார். ஒட்டுமொத்த தமிழ் சினிமாத் துறையின் நலனுக்காக ஊக்கத்துடன் உழைத்து வருகிறார். பாரதிராஜா தன்னுடைய 78 ஆம் பிறந்தநாளைக் கொண்டாடும் இந்த நன்னாளில் இந்திய அரசால் கௌரவிக்கப்பட்டுள்ள படைப்பாளிகளாகிய நாங்கள், இந்திய சினிமாவின் மிக உயரிய விருதான பெருமதிப்புக்குரிய ‘தாதாசாகிப் பால்கே’விருதை இந்த ஆண்டு திரு.பாரதிராஜாவுக்கு வழங்குவதற்குப் பரிசீலிக்க வேண்டுகிறோம். 

இந்த விருதே, நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும், இந்த திரையுலக மேதைக்கான பொருத்தமான கெளரவமாகவும். 43 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா சினிமாவில் பல சாதனைகளை நிகழ்த்திய அவருடைய மகத்தான பங்களிப்புக்கு உரிய நேரத்தில் வழங்கப்பட்ட முறையான அங்கீகாரமாகவும் இருக்கும் என நம்புகிறோம். 


எங்களுடைய இந்த முக்கியமான கோரிக்கைக்குத் தங்கள் தனிப்பட்ட கவனத்தை நல்குவீர்கள் என்று நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறோம். நல்ல முடிவுக்கான எதிர்பார்ப்புடன் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். ” என்று கூறியுள்ளனர்.
கையெழுத்திட்டவர்கள்


இந்த கடிதத்தில் தேசிய விருது வென்றுள்ள நடிகர்கள் கமல் ஹாசன், தனுஷ், பாடலாசிரியர் வைரமுத்து, படத் தொகுப்பாளர்கள் ஸ்ரீகர் பிரசாத், பீ.லெனின், இயக்குநர்கள் எஸ்.பிரியதர்ஷன், கே.எஸ்.சேதுமாதவன், சந்தானபாரதி, அகத்தியன், ஞான ராஜசேகரன், கே.ஹரிஹரன், பார்த்திபன், சேரன், பாலா, எஸ்.பி. ஜனநாதன், வசந்தபாலன், பாண்டிராஜ், வெற்றிமாறன், சீனு ராமாசாமி, சுசீந்திரன், ஏ.சற்குணம், பாலாஜி சக்திவேல், ராம், சமுத்திரக்கனி, ராஜு முருகன், ஜி. பிரம்மா, செழியன், தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ். தாணு, சிவசக்தி பாண்டியன், எல். சுரேஷ், எம். சசிகுமார், சுபாஷ் சந்திர போஸ், எஸ். முருகானந்தம், ஜே. சதீஷ்குமார், எஸ்.ஆர். பிரபு, திரை விமர்சகர் ஜி. தனஞ்செயன் ஆகியோர் இணைந்து இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

கேட்டுப் பெற வேண்டிய விருதா?

அரங்கங்களில் அடைந்து கிடந்த தென்னிந்திய சினிமாவை வயல்வெளிகளுக்கும், பொது வெளிகளுக்கும் அழைத்து வந்து ரசிகர்களின் பார்வையை விசாலமாக்கியவர் பாரதிராஜா. சமூகத்தில் நிலவும் மூடப்பழக்கங்களையும், இயல்புகளையும் இம்மி பிசகாமல் திரைமொழியாக்கியவர். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் கோலோச்சி வரும் பாரதிராஜா பற்றி பால்கே விருதுக் குழுவினருக்கு தெரியாதா? தமிழகத்தில் இருந்து இத்தனை பேர் கேட்டுத்தான் அதைப் பெற வேண்டுமா? 

என்றெல்லாம் விமர்சனக் குரல்கள் எழலாம். கண்ணை மூடிக் கொண்டிருப்பவர்களிடம் கண்களைத் திறங்கள் என்று சொல்வதைப் போன்றதுதான் இந்தக் கடிதம். தென்னிந்தியாவின் குறிப்பாக தமிழ்நாட்டின் கலை ஆளுமைகள் பாராமுகமாய் புறக்கணிக்கப்படுகையில் இந்தக் கடிதத்தை கோரிக்கை, யாசகம் என்று சொல்வது தவறு, உரிமைக் குரல் என்றே குறிப்பிடலாம்.

-வேந்தன்
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.