அரசாங்கத்தை எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள் சங்கம்!

கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு அவசியமான உறுதியான கட்டுப்பாடுகளை அரசாங்கம் விதிக்குமாறு இலங்கை மருத்துவ நிபுணர்கள் சங்கம் வலியுறுத்தியிருக்கிறது.

நாட்டில் தற்போது காணப்படும் கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவல் நிலையானது அலட்சியப்படுத்தப்படும் பட்சத்தில், இலங்கை மற்றுமொரு பிரேஸிலாகவோ அல்லது இந்தியாவாகவோ மாறலாம் என்றும் மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியநிபுணர் எல்.ஏ.ரணசிங்க எச்சரித்துள்ளார்.
அதுமாத்திரமன்றி நாட்டில் ஒரு உடனடியான அல்லது ஏற்கனவே காணப்பட்ட கொரோனா வைரஸ் சமூகப்பரவல் நிலையொன்று இருக்கலாமெனவும் அவர் சந்தேகம் வெளியிட்டிருக்கிறார்.
கடந்த 14 ஆம் திகதியிலிருந்து நாட்டில் தொற்றாளர்கள் கண்டறியப்பட்ட விதம், நிலைமை சற்றுத் தீவிரமடைந்திருப்பதை உணர்த்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிலர் இதனைக் கொத்தணி தொற்றுப்பரவல் என்று கூறுகின்றபோதும் தற்போது கண்டறியப்பட்ட தொற்றாளர்களிடமிருந்து, அவர்கள் தொடர்புகளைப் பேணியவர்களுக்கும் இது பரவியிருக்க முடியும்' என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
அதேவேளை தேர்தல் பிரசாரங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் ஒன்றுகூடும் கூட்டங்கள் மற்றும் பிரத்யேக வகுப்புக்கள் போன்றவற்றுக்குக் கட்டுப்பாடுகளை விதித்தல், பாடசாலைகளை மீளத்திறப்பது குறித்து நன்கு ஆராய்தல், பொதுப்போக்குவரத்துக்கான கட்டுப்பாடுகளை விதித்தல் ஆகியவை மிகவும் அவசியமானவை என்றும் மருத்துவ நிபுணர்கள் சங்கம் வலியுறுத்தியிருக்கிறது.
'நாட்டில் மேலும் தொற்று ஏற்படுவதைத் தடுப்பதற்கு, தற்போது குறைந்த அளவிலேனும் கொரோனா வைரஸ் சமூகப்பரவல் நிலை ஏற்பட்டிருக்கிறது என்று நம்புவது விவேகமானது என்றே தாம் கருதுவதாகவும் மருத்துவ நிபுணர்கள் சங்கம் கூறியிருக்கிறது.
அதேவேளை நாட்டில் பற்றாக்குறையாக இருக்கும் மருத்துவ வசதிகள் தொடர்பில் சுட்டிக்காட்டியிருக்கும் சங்கம், 'தேசிய ரீதியில் பெருமளவானோருக்கு சிகிச்சையளிப்பதற்கு எம்மிடம் போதுமான மருத்துவ சுகாதார வசதிகள் இல்லை என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும்' என்றும் குறிப்பிட்டிருக்கிறது.
எனவே தாமதப்படுத்தாமல் உடனடியாக கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு அவசியமான உறுதியான கட்டுப்பாடுகளை விதிப்பதுடன், சமூகத்தில் எழுமாற்றாக நபர்களைத் தெரிவுசெய்து பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவ நிபுணர்கள் சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்தியிருக்கிறது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.