ஈரானில் கொண்டாட்டங்களுக்குத் தடை!!

ஈரானில் கொரோனா பரவல் அதிகமாகப் பரவுவதைத் தொடர்ந்து, அங்கு திருமணம் போன்ற பெரும் நிகழ்வுகளுக்குத் தடை விதிப்பதாக அந்நாட்டின் அதிபர் ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.

ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 2,397 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் 188 பேர் பலியாகி உள்ளனர்.
ஈரானில் இதுவரை 2,55,117 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 12,635 பேர் பலியாகி உள்ளனர்.
இந்த நிலையில் ஈரானில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் புதிய அறிவிப்பை ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி வெளியிட்டார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, 'நாடு முழுவதும் நடக்க இருக்கும் பெரிய நிகழ்வுகளுக்குத் தடை விதிக்கிறோம். அது திருவிழாவாக இருந்தாலும் சரி, திருமணமாக இருந்தாலும் சரி, பயிலரங்கமாக இருந்தாலும் சரி.
கொண்டாட்டத்திற்கு இது நேரம் அல்ல' என ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, முகக்கவசம் அணியாத ஈரானியர்களுக்கு அரசின் சேவைகள் மறுக்கப்படும் என்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றாத நிறுவனங்கள் ஒரு வாரம் மூடப்படும் என்றும் அதிபர் ஹசன் ரவ்ஹானி முன்னரே தெரிவித்திருந்தார்.
ஈரானின் புனித நகரமான கூமிலில் பிப்ரவரி மாதத்தில் முதல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து வட பகுதியில் உள்ள சுற்றுலா நகரமான கிலான் கடுமையான பாதிப்புக்குள்ளானது. தற்போது ஈரானின் எல்லைப் பகுதியில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
தற்போதைய நிலையில் ஈரான் தலைநகரில் மட்டும் 20 சதவீதம் பேருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என ஈரான் கரோனா தடுப்புப் பணிக்குழுவின் தலைவர் அலிரேஸா சாலி தெரிவித்திருந்தார்.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் 90 லட்சம் பேர் வசிக்கின்றனர். ஊரடங்குத் தளர்த்தப்பட்டதால் மக்கள் புழக்கம் அதிகரித்துள்ள நிலையில், கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இவ்வாறான நிலையில் கொரோனா தொற்று எண்ணிக்கை மேலும் அதிகரித்தால் ஊரடங்குக் கட்டுப்பாடுகள் மீண்டும் கொண்டுவரப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.