கலாநிதி குமாரவடிவேல் குருபரன் பதவியைத் துறந்தார்!

கலாநிதி. குமாரவடிவேல் குருபரன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்ட முதுநிலை விரிவுரையாளர் பதவியில் இருந்து விலகுவதற்கான இராஜினாமா கடிதத்தை இன்று பல்கலைக்கழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரிக்கு, கலைப் பீடாதிபதி மற்றும் சட்டத்துறைத் தலைவர் ஊடாக அனுப்பி வைத்துள்ளார்.

தான் பதவி விலகுவதற்கான காரணமாக , அவர் பல்கலைக்கழக பேரவை தன்னை சட்டத் தொழிலில் ஈடுபடுவதில் இருந்து தடை செய்துள்ளமையை சுட்டிக்காட்டியுள்ளார்.
தன்னால் உயர் நீதிமன்றில் தொடரப்பட்டிருக்கும் வழக்கு பல்வேறு காரணங்களுக்காக விவாதத்திற்கு எடுக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுக் கொண்டிருக்க தான் இவ்விடயத்தில் இனியும் காத்திருப்பதில் பிரயோசனம் இல்லை என்றும் தொடர்ந்து தனது வாழ்வில் நிச்சயத்தன்மை இல்லாதிருக்க தான் அனுமதிக்கப் போவதில்லை என்றும் தனது இராஜினாமா கடிதத்தில் கலாநிதி குருபரன் குறிப்பிட்டுள்ளர்.
நடைமுறை அனுபவம் இல்லாத ஓர் சட்ட ஆசிரியராக தான் கடமையாற்றுவது இயலாத விடயமென்றும், தனது சட்டத் தொழில் மூலம்தான் செய்து வந்த சமூக பங்களிப்பும் ஊடாட்டமும் தனது ஆசிரியப் பணியில் இணை பிரியா அங்கம் என்றும் அது இல்லாத சட்ட ஆசிரியர் பணியில் தனக்கு ஈடுபடுவது திருப்தியை தர மாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டத் தொழிலில் ஈடுபடுவது கூடிய வருமானத்தை தரும் என்ற காரணத்திற்காக தான் இந்த முடிவை எடுக்கவில்லை என்றும் அவ்வாறாக எடுப்பதாயின் தான் அதனை 2010 ஆம் ஆண்டிலேயே அந்த முடிவை எடுத்திருந்துப்பேன் என்றும், வகுப்பறையில் மட்டும் முடங்கியிருக்கும் ஆசிரியராக கடமையாற்ற தான் தயாரில்லை என்றும் குருபரன் தனது கடிதத்தில் மேலும் குறிப்பிடுகிறார்.
தன் மீது விதிக்கப்பட்ட தடை பல்கலைக்கழகம் சுயாதீனத்தை முழுவதுமாக இழந்துவிட்டதுக்கான முக்கியமான சான்று என்றும் தனது நலன்கள் தொடர்பில் சுயமாக முடிவு எடுக்க முடியாத பல்கலைக்கழகம் யாருக்காக செயற்படுகின்றது என்ற கேள்வியையும் அவர் இதன்போது எழுப்பியிருக்கிறார்.
நல்லாட்சி, சட்டத்தின் பாலான ஆளுகை, சுயாதீனம் ஆகியவற்றை தொலைத்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் நல்லாசிரியர்களை ஈர்க்கவும் முடியாமல் தொடர்ந்து வைத்திருக்கவும் முடியாமல் நலிவடைந்து கொண்டிருப்பதாக கலாநிதி குருபரன் தனது கடிதத்தில் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
சட்டக் கல்வி மீதான தனது ஆர்வத்தை ஒரு போதும் கைவிடப் போவதில்லை எனத் தனது கடித்ததில் கூறும் குருபரன், உயர் நீதிமன்ற வழக்கை தொடர்ந்து கொண்டு நடத்தப் போவதாகவும் தனக்கு சார்பாக கட்டளை ஆக்கும் பட்சத்தில் மீள யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் உள்நுழைய விண்ணப்பிப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இடைப்பட்ட காலத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறையின் இடைவிடா இயங்குகைக்கு தேவையான இயலுமான ஒத்தாசைகளை தான் வழங்குவேன் எனவும் கலாநிதி குமாரவடிவேல் குருபரன் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை குருபரனை நாட்டிற்கும் அரசுக்கும் எதிரானவன் எனக் காட்டவும் அவரது தகப்பனாரை தேவையில்லாமல் இழுத்து களங்கப்படுத்தவும் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு சமர்ப்பித்த மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேபணைகள் பாத்திரம் குருபரனின் இந்த முடிவிற்கான உடனடிக் காரணங்கள் என இது கல்விமான்கள் சுட்டிக்காட்டியுள்ளானர்.
மேலும் சரியான காரணங்கள் இல்லாமல் விசாரிக்கப்பட வேண்டிய வழக்குகளில் முதன்மையானதாக வைத்திருந்தும் விசாரணைக்கு வழக்கை உயர் நீதிமன்றம் எடுக்காமையும் இந்த முடிவை நோக்கி அவரை தள்ளியிருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.