நடிகர் கார்த்தியின் ஆக்கபூர்வமான பதிவு!

சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த புதிய சுற்றுச்சூழல் விதி குறித்து கடும் எதிர்ப்புகளை அரசியல் தலைவர்கள் தெரிவித்து வரும் நிலையில் நடிகர் கார்த்தி தனது சமூக வலைத்தளத்தில் உழவன் பவுண்டேஷன் வெளியிட்ட இதுகுறித்த அறிக்கையை பதிவு செய்துள்ளார். மிகவும் ஆக்கபூர்வமான கருத்துக்களை கொண்ட அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

“முயற்சி செய்து தேடாமலேயே தரும்‌ வளத்தை உடைய நாடுகளைச்‌ சிறந்த நாடுகள்‌ என்று கூறுவர்‌, தேடிமுயன்றால்‌ வளம்‌ தரும்‌ நாடுகள்‌ சிறந்த நாடுகள்‌ அல்ல” மேற்கண்ட குறளுக்கு ஏற்ப பல வளங்களை உடைய மிக சிறந்த நாடாக உலக நாடுகள்‌ போற்றும்‌ நம்‌ இந்தியாவில்‌, இப்பொழுது உள்ள சுற்றுச்சூழல்‌ சட்டங்களே, நம்‌ இயற்கை வளங்களையும்‌ மக்களின்‌ வாழ்வாதாரங்களையும்‌ பாதுகாக்க போதுமானதாக இல்லை. ஆனால்‌ தற்பொழுது மத்திய அரசு வெளியிட்டிருக்கும்‌ 'சுற்றுச்சூழல்‌ தாக்க மதிப்பீட்டு விதிகள்‌ 2020 வரைவு நம்‌ இந்திய நாட்டின்‌ சுற்றுச்சூழலுக்கு மேலும்‌ அச்சுறுத்தலாக அமைந்திருப்பதாகவே தோன்றுகிறது.

மலைகளும்‌, ஆறுகளும்‌, பல்வகை உயிரினங்களுமே நம்‌ வாழ்விற்கு ஆதாரமானவை. மரங்களையும்‌, விவசாய நிலங்களையும்‌ அழித்து நெடுஞ்சாலைகள்‌ போடுவதும்‌, இயற்கை வளங்களை அழித்து தொழிற்சாலைகள்‌ அமைப்பதும்‌ நிச்சயம்‌ வளர்ச்சி அல்ல. இயற்கை வளங்களை அழித்து, அதை வளர்ச்சியின்‌ அடையாளமாக காட்டுவது வருங்கால தலைமுறையின்‌ எதிர்காலத்தை கேள்வி குறியாக்கும்‌ முயற்சி. அதை மக்களால்‌ தேர்ந்தெடுக்கபட்ட அரசு ஒருபோதும்‌ அனுமதிக்க கூடாது.

இந்த வரைவு அறிக்கையில்‌, 'பல முக்கிய திட்டங்களை மக்கள்‌ கருத்து கேட்பு மற்றும்‌ பொது ஆலோசனைகள்‌ இல்லாமலேயே நிறைவேற்றலாம்‌' என்கிற ஒரு சரத்தே, நம்‌ உள்ளத்தில்‌ மிகப்‌ பெரிய அவநம்பிக்கையையும்‌, அச்சத்தையும்‌ உருவாக்குகிறது. நம்முடைய சுற்றுச்சூழல்‌ சார்ந்த திட்டங்களையும்‌, அதனால்‌ நமக்கு ஏற்படும்‌ பாதிப்புகளை பற்றியும்‌ மக்களாகிய நாம்‌ பேசவே முடியாது என்பது எந்த வகையில்‌ நியாயமான ஒரு சட்டமாக இருக்கும்‌?

மேலும்‌ தொழிற்சாலைகளின்‌ வகைப்பாடு மாற்றம்‌, பழைய விதி மீறல்களுக்கு பிந்தைய உண்மை மக்கள்‌ கருத்து .பதிவுக்கான நாட்களை குறைப்பது போன்ற சரத்துகளும்‌ நம்மை அச்சுறுத்துகின்றன. குமரி முதல்‌ காஷ்மீர்‌ வரையிலுமான சட்டம்‌ என்ற போதும்‌, இந்த வரைவறிக்கை வெறும்‌ ஹிந்தியிலும்‌, ஆங்கிலத்திலேயும்‌ மட்டும்‌ வெளியிடப்பட்டு இருக்கிறது. தமது தாய்‌ மொழி மட்டுமே அறிந்த கோடிக்கணக்கான மக்கள்‌ இந்த கொள்கைகளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா?


நாட்டிற்கான முன்னேற்றங்கள்‌ தேவை என்பதில்‌ நமக்கு எந்த மாற்று கருத்தும்‌ இல்லை. ஆனால்‌ கோவிட் 19 எனும்‌ அரக்கப்‌ பிடியில்‌ நாம்‌ அனைவரும்‌ சிக்கி, மீள போராடிக்‌ கொண்டிருக்கும்‌ இந்த வேளையில்‌, நம்முடைய வாழ்வாதாரத்தையும்‌, முக்கியமாக நமது வரும்‌ சந்ததியினரின்‌ வாழ்வையும்‌ நிர்ணயிக்கக்கூடிய சக்தியுள்ள இந்த சட்டத்தை எதற்காக இவ்வளவு அவசரமாக நிறைவேற்ற வேண்டும்‌?

எனவே, இந்த வரைவு அறிக்கையின்‌ சாதக பாதக அம்சங்களை அனைத்து தரப்பு மக்களிடமும்‌ கொண்டு சேர்த்து, பொது விவாதமாக்கி, அதை அரசின்‌ கவனத்திற்கு கொண்டு செல்ல நமக்கு கிடைத்திருக்கும்‌ கடைசி வாய்ப்பை நாம்‌ நிச்சயமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்‌. eia2020-moefcc@gov.in என்கிற மின்னஞ்சல்‌ முகவரியில்‌, ஆகஸ்ட்‌ 11, 2020 தேதிக்குள்‌ நம்‌ கருத்துக்களை பதிவு செய்வோம்‌.

அறிஞர்கள்‌, ஆய்வாளர்கள்‌ கருத்துக்களுக்கும்‌, மக்களின்‌ உணர்வுகளுக்கும்‌ மதிப்பளித்து தேவையான மாற்றங்களை புதிய வரைவில்‌ கொண்டு வர வேண்டுமென மக்களில்‌ ஒருவனாக கேட்டு கொள்கிறேன்‌.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.