பிரபாகரன் ஆயுதம் ஏந்தியமைக்கு தென்னிலங்கை தலைவர்கள்தான் காரணம்!!

தமிழினத்தின்  தலைவர்களான தந்தை செல்வா மற்றும் அமிர்தலிங்கம் ஆகியோரை தென்னிலங்கை பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த  தலைவர்கள் ஏமாற்றி இருக்காவிட்டால் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆயுதமேந்திருக்க மாட்டார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் அக்கட்சியின் திருமலை மாவட்ட தலைமை வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கையிலுள்ள தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக இரா.சம்பந்தன் மேலும் கூறியுள்ளதாவது,  “இலங்கையில்  70வருடங்களாக இனப்பிரச்சினை தீர்க்கப்படாது நீடித்து வருகின்றது.

தமிழினத்தின் தலைவர்களான தந்தை செல்வநாயகம்  மற்றும் அமிர்தலிங்கம் ஆகியோர் தென்னிலங்கை தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு பலமுறை முயற்சி மேற்கொண்டனர்.

ஆனால் தென்னிலங்கை தலைவர்கள் அவர்களின் கோரிக்கைகளை நிராகரித்து ஏமாற்றினார்கள்.

இவ்வாறு மாறி மாறி நாட்டை ஆட்சி செய்த அனைத்து தென்னிலங்கை தலைவர்களும் இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வை வழங்கவில்லை.

இந்நிலையில் நல்லாட்சி அரசாங்கத்தில்  பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு அது இடைக்கால அறிக்கைவரையில் சென்றடைந்தது.  இவ்வாறு பல நிகழ்வுகள் இடம்பெற்றிருக்கின்றன.

அதாவது இனங்களுக்க இடையில் பிரச்சினைகளை தீர்க்க வேண்டுமாயின் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும். அவை மீளப் பெறாமை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்திசெய்ய வேண்டும். அதற்கு நியாயமான தீர்வொன்று சமஷ்டி அடிப்படையிலேயே வழங்கப்பட வேண்டும்.

இதனைத்தான் நாம் கோருகின்றோம். நாங்கள் நாட்டை பிரிக்கப்போவதில்லை. எனவே எமது கோரிக்கைகளை நிராகரிக்காது  பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க  அரசாங்கம் முன்வர வேண்டும்.

கடந்த காலத்தில் தந்தை செல்வா மற்றும்  அமிர்தலிங்கம் ஆகியோரை தென்னிலங்கை தலைவர்கள் ஏமாற்றியமையால்தான் பிரபாகரன் ஆயுதமேந்தினார். அத்தகைய நிலைமை ஏற்படாதிருந்திருந்தால் அவர் ஆயுதமேந்தியிருக்க மாட்டார்.

எனவே நாட்டை அபிவிருத்தியை நோக்கி கொண்டுச் செல்ல வேண்டுமாயின் இனப்பிரச்சினைக்கு தீர்வொன்றை வழங்குவது  அவசியமாகும்.

இதனை தென்னிலங்கை தலைமைகள்  முதலில் புரிந்துக்கொள்ள வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.