இன அழிப்பின் இரு வேறு முகங்கள் -கேணல் ரத்னப்பிரிய பந்துவும் அம்பிகா சற்குணநாதனும்!!

கேணல் ரத்னப்பிரிய பந்து இந்தப் பெயரைப் பலர் மறந்து போயிருக்கலாம். போராளிகளை கண்காணிக்கவும்/ மூளைச் சலவை செய்யவும்/ போலி நல்லிணக்க நாடகத்தை நடத்தி கட்டமைக்கப்பட்ட இன அழிப்பைத் தொடரவும் உருவாக்கப்பட்ட CSD எனப்படும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் முன்னாள் பொறுப்பாளர்.
இவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு கொழும்புக்கு மாற்றலாகிச் சென்ற போது விசுவமடுவில் எமது மக்கள் பலர் கண்ணீரும் கம்பலையுமாக ஒப்பாரி வைத்த அவலம் நடந்தேறியது பலர் மறந்து போயிருக்கலாம்.
அவ்வளவு நுட்பமாக இன அழிப்பு அரசு காய் நகர்த்தியிருந்தது. சம்பந்தர் கும்பலை இணக்க அரசியலுக்குள் புதைத்துவிட்டு அவர்களின் தவறை இன அழிப்பு அரசு மறுவளமாக இப்படி அறுவடை செய்தது.

 உண்மையில் இந்த ரத்னப்பிரிய பந்து யார்?
எமது மக்களையும்/ பல தமிழ் தலைவர்களையும் படுகொலை செய்த ஆழ ஊடுருவும் படையணியின் அதிகாரி. ஆனால் இதை மறந்து நமது மக்களை அவனுக்காக அழ வைத்தது இன அழிப்பு அரசு. இந்தச் சதியை நாம் புரிய வைக்க முற்பட்டு அப்போது தோற்றுப் போனோம். விதி வலியது. மீண்டும் அதே ரத்னப்பிரிய பந்து.
இப்போது இன அழிப்பு அரசின் வன்னி வேட்பாளராக களத்தில்..
கேட்கவே பதறுகிறது. ஏனெனில் நமது மக்களின் ஊனமுற்ற உளவியலையும்/ நமது அரசியல்வாதிகளின் தவறையும் இன அழிப்பு அரசு இலகுவாக அறுவடை செய்ய தூர நோக்கில் அப்போது CSD பொறுப்பாளராக அவரை நியமித்தவர்கள் தற்போது தேரதலில் இறக்குகிறார்கள்.
ஒரு வேளை அவர் வென்று விட்டால் எமது வரலாறு மோசமானதாக இருக்கும். அடுத்து தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் அம்பிகா சற்குணநாதன். இவர் கதிர்காமர்/ நீலன் திருச்செல்வத்தின் அரசியல் தொடர்ச்சி. சுமந்திரனின் Female version இவர் – சிங்கள இன வாதத்தின் தமிழ் முகம். ஆனால் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராம். தற்போது தேசியப் பட்டியலில் அவரது இடம் உறுதி செய்யபட்டிருக்கிறது.
மக்களின் அனுதாப வாக்குகளைப் பெறவும்/ புலிகளினால் மாமனிதர் கவுரவமளிக்கப்பட்டவரின் மனைவி என்று மக்களை ஏமாற்றவும் ரவிராஜ் அவர்களின் மனைவியைப் பலிக்காடாயாக்கிவிட்டு தேசியப்பட்டியலில் அம்பிகாவின் இடத்தை உறுதி செய்திருக்கிறார் சுமந்திரன். இன அழிப்பு அரசால் சுமந்திரனுக்குக் கொடுக்கப்பட்ட புரொஜெக்ட் இது.
இவரை தேர்தலில் நிறுத்துவதற்காக கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு முன்பே மனித உரிமை ஆணையப் பதவியை விட்டு விலகுமாறு கொழும்பு ஆலோசனை கூறியதையடுத்து இவர் தனது பதவியை அண்மையில் இராஜினாமா செய்த போது எமக்குள் இருக்கும் சுமந்திரனின் தறுதலைகள் ” ஐநா தீர்மானத்திலிருந்து இலங்கை விலகியதால் தனது பதவியை ராஜினாமா செய்த வீரப் பெண்” என்று கொக்கரித்ததை என்னவென்பது?
நளினி ரட்ணராஜா என்ற ஒரு வேட்பாளருக்கு எதிராகக் காட்டிய தீவிரத்தை அம்பிகா விடயத்தில் நம்மவர் காட்டவில்லை. இது ஒரு முரண்பாடு. நளினி ஒரு புலி எதிர்ப்பாளர் – தமிழ்த் தேசியத்திற்கு எதிரானவர். அவ்வளவுதான். ஆனால் அவர் வென்றாலும் அவரால் எமக்கு எதிராக ஒன்றும் செய்ய முடியாது.
ஏனென்றால் அதற்கான ஆளுமையோ/ தகுதியோ/ கொள்ளளவோ இல்லாதவர் அவர். ஆனால் அம்பிகா அப்படியல்ல. அவர் சுமந்திரனை விட மோசமான நச்சுப் பாம்பு. அம்பிகாவின் நுழைவு தமிழர் வரலாற்றை பல ஆண்டுகளுக்குப் பின் நோக்கித் தள்ளும் என்பதே யதார்த்தம்.

பரணி கிருஷ்ணரஜனி

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.