யாழ் காவல்துறையும் கட்டிப்பிடி கட்டியணைத்து மன்னிப்பும்

யாழ் காவல்துறையும் கட்டிப்பிடி கட்டியணைத்து மன்னிப்பும்
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கடந்த 7ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை பொதுத் தேர்தல் வாக்குகள் எண்ணும் பணியகம் இயங்கிய நிலையில் முடிவுகளுக்காகக் காத்திருந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வலி.தெற்கு பிரதேச சபை உறுப்பினர் தவராசா துவாரகன் தாக்கப்பட்டதற்கு யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்பட தாக்குதல் நடத்திய பொலிஸ் உத்தியோகத்தர்கள் மன்னிப்புக் கோரினர்.

தன் மீதான பொலிஸாரின் சித்திரவதைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று தவராசா துவாரகனால் ஜனாதிபதி, பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட உயர்மட்டத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அத்துடன் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவும் தாக்கல் செய்யவும் அவர் நடவடிக்கை எடுத்திருந்தார்.

இதனால் பொலிஸாருக்கு கடும் அழுத்தம் ஏற்பட்டதுடன், அவர்களது பதவி உயர்வுகளுக்கும் தடையாகக் காணப்பட்டால் தவராசா துவாரகனை நேற்று நேரில் அழைத்து மன்னிப்புக் கோரியுள்ளனர்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கடந்த 4, 5, 6 மற்றும் 7ஆம் திகதிகளில் பொதுத் தேர்தல் மத்திய நிலையம் இயங்கியது. இதில் 7ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை யாழ்ப்பாணம் மாவட்ட இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்று கட்சிகளின் வேட்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் காத்திருந்தனர்.

அதிகாலை 1 மணியளவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் அங்கு வருகை தந்ததையடுத்து குழப்பநிலை ஏற்பட்டது. அங்கு கூடியிருந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சி, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஆதரவாளர்கள், சுமந்திரனுக்கு எதிராக சத்தம் எழுப்பியவாறு இருந்தனர். அதனால் அங்கு குழப்பநிலை ஏற்பட்டது.

அதனையடுத்து தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கட்டளைக்கு அமைய பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் அங்கிருந்தவர்களை வெளியேற்றும் வகையில் தாக்குதலை மேற்கொண்டனர்.

இதன்போது சிலர் மீது கண்மூடித்தனமான தாக்குதலை பொலிஸார் மேற்கொண்டனர். அதுதொடர்பில் காணொலிகளும் வெளியாகியிருந்தன.

இதில் பொலிஸாரின் தாக்குதலில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வலி. தெற்கு பிரதேச சபை உறுப்பினர் தவராசா துவாரகன், தனக்கு பொலிஸாரால் சித்திரவதை செய்யப்பட்டதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்தார்.

யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக முறைப்பாட்டை வழங்கினார்.
பொலிஸாரால் தாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் முறைப்பாட்டாளரை மருத்துவ பரிசோதனைக்கு உள்படுத்தி மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ நிபுணரிடம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகம் கோரியிருந்தது.

தவராசா துவாகரன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதனை உறுதிப்படுத்தி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரி மருத்துவ அறிக்கையை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு வழங்கியிருந்தார்.

தன்மீது பொலிஸார் சித்திரவதை செய்தனர் என்று குற்றஞ்சாட்டிய தவராசா துவாரகன், நீகோரி ஜனாதிபதி செயலகம், பொலிஸ் தலைமையகம் உள்ளிட்ட இடங்களில் முறைப்பாடு செய்ததுடன், உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் செய்வதற்கான ஆவணங்களையும் கொழும்பில் உள்ள மூத்த சட்டத்தரணியிடம் அவர் சமர்ப்பித்திருந்தார்.

இந்த நிலையில் பொலிஸாருக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளைக் கைவிடக் கோரியும் நடந்தவைக்கு பகிரங்க மன்னிப்புக் கோருவதாகவும் யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய அதிகாரிகள், தவராசா துவாரகனை அனுகியிருந்தனர். எனினும் அவர் பின்னடித்து வந்த நிலையில் இன்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்

இன்று நண்பகல் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்குச் சென்றிருந்த தவராசா துவாரகனிடம் மன்னிப்புக் கோரிய யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்பட தாக்குதல் நடத்திய பொலிஸ் உத்தியோகத்தர்கள், தமது பிழைக்கு வருத்தம் தெரிவித்து கட்டியணைத்து மன்னிப்புக் கோரினர்.

தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெனாண்டோ, அதன்போது பாதிக்கப்பட்டவர்களிடம் ஊடகங்கள் ஊடாக மன்னிப்புக் கோருவதாக அறிவித்தார்.

எனினும் பொலிஸாருக்கு எதிராக வழங்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் மீள்பரிசீலனை செய்வது தொடர்பில் தனது மூத்த சட்டத்தரணியிடம் ஆலோசனை பெற்ற பின்பே அறிவிக்க முடியும் என்று தவராசா துவாரகன் தெரிவித்தார் 
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.