நிபந்தனைகளுடன் ஐ.தே.க.வுடன் இணைந்து பணியாற்றத் தயார் – சஜித் தரப்பு!!


 இரண்டு நிபந்தனைகளின் அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பணியாற்ற கட்சி தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சி நிபந்தனைகள் ஏதும் இல்லாமல் சஜித் பிரேமதாசவிடம் ஒப்படைக்கப்படுவதே ஒரு நிபந்தனை என கூறினார்.

மேலும் மாறுபட்ட அரசியல் கருத்துக்களை கொண்டவர்கள் அனைவரையும் ஓரணியில் ஒன்றிணைக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்தோடு புதிய தலைவர் நியமிக்கப்பட்டால் ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தியை இணைத்துக்கொள்ள வேண்டும் என்பது மற்ற நிபந்தனை என்றும் ஐக்கிய தேசியக் கட்சியை மறுசீரமைக்க அதிக காலம் தேவைப்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய தேசியக் கட்சி பொதுமக்கள் அனுப்பிய செய்தியைப் புரிந்துகொண்டு பிரச்சாரத்தை வலுப்படுத்த ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் திஸ்ஸ அத்தநாயக்க கேட்டுக்கொண்டார்.

இதேவேளை பொதுத்தேர்தலின்போது ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரித்த குற்றச்சாட்டில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சுமார் 60 பேர் குறித்து கருத்து தெரிவித்த அவர், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தேவையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது வருந்தத்தக்கது, இது ஒரு பாரிய குறைபாடு என்றும் குறிப்பிட்டார்.

குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவின் ஒப்புதலுடன் உருவாக்கப்பட்டது என்றும் அதன் அடிப்படையிலேயே அடிமட்ட அரசியல்வாதிகள் இவ்வாறு செயற்பட்டதாகவும் கூறினர்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.