சமையல் காய்கறிகளை வாங்க சில தகவல்கள்!!

 


காய்கறி வாங்கும் போது சிறப்பான காய்களாக வாங்க சில எளிய யோசனைகள்:


பெரிய வெங்காயம்


மேல் பகுதியில் தண்டு பெரிதாக இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.


வெள்ளை வெங்காயம்


நசுக்கினாலே சாறு வரும்படி இருக்க வேண்டும்.


சின்ன வெங்காயம்


பழைய வெங்காயம் வாங்குவதே நல்லது. இரண்டு பல் இருப்பதாக, பெரியதாக, உரிப்பதற்கு ஏற்றதாக இருக்க வேண்டும்.


பூண்டு


பல் பல்லாக வெளியே தெரிவது நல்லது. உரிப்பதற்கும் இலேசாக இருக்கும்.


கத்திரிக்காய்


தோல் மென்மையாக இருப்பதுபோல் பார்த்துக் கொள்ளவும். காயைச் சுற்றிலும் சொத்தைக்கான ஓட்டை இல்லாதவாறு இருக்க வேண்டும்.


சுரைக்காய்


நகத்தால் அழுத்தினால் நகம் உள்ளே இறங்க வேண்டும்.

பீன்ஸ்


பிரன்ச் பீன்ஸில் நார் அதிகமிருக்கும், புஷ் பீன்ஸில் நார் இருக்காது. தோல் மென்மையாக இருந்தால் சுவை அதிகமாய் இருக்கும்.


அவரைக்காய்


அவரைக்காயினைத் தொட்டு பார்த்தால் விதைகள் பெரிதாக இருந்தால் அதைத் தவிர்த்து விட வேண்டும். காய்கள் இளசாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.


பாகற்காய்


பெரிய பாகற்காயில் உருண்டையை விட, தட்டையான நீண்ட காய் நன்றாயிருக்கும்.


மாங்காய்


தேங்காயைக் காதருகே வைத்துத் தட்டி பார்ப்பது போல, மாங்காயும் தட்டி பார்த்தால் சத்தம் வரும். அந்த மாங்காயில் கொட்டை சிறிதாக இருக்கும்.


பீர்க்கங்காய்


அடிப் பகுதி குண்டாக இல்லாமல், காய் முழுதும் ஒரே அளவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.


பரங்கிக்காய்


கொட்டைகள் முற்றியதாக இருக்க வேண்டும்.


புடலங்காய்


கெட்டியாக இருக்க வேண்டும். அப்போதுதான் விதைப்பகுதி குறைவாகவும், சதைப் பகுதி அதிகமாகவும் இருக்கும்.


முருங்கைக்காய்


முருங்கைக்காயைக் கட்டை மற்றும் ஆட்காட்டி விரல்களைப் பயன்படுத்தி சிறிது முறுக்கினால், எளிதாக வளைந்தால் அது நல்ல முருங்கைக் காய்.


கோவைக்காய்


முழுக்கப் பச்சையாக வாங்க வேண்டும். சிவப்பு லேசாக இருந்தாலும் ருசி இல்லாமல் போய்விடும்.

பச்சை மிளகாய்


நீளமானது சற்று காரம் குறைவாக இருக்கும். சற்றே தடிமனானதாக இருந்தால் காரம் கூடுதலாக இருக்கும், வாசனையும் இருக்கும்.


குடை மிளகாய்


தோல் சுருங்காமல் இருப்பதை வாங்கலாம். கரும் பச்சையில் வாங்கினால் அது அடிபட்டிருக்கும்.


மொச்சைக்காய்


கொட்டை பெரிதாக தெரியும் காய் நன்றாக இருக்கும்.


சௌசௌ காய்


வாய் போன்ற பகுதி விரிசல் பெரிதாக இல்லாத படி பார்த்துக் கொள்ள வேண்டும். விரிசல் இருந்தால் அது முற்றிய காய்.


வெள்ளரிக்காய்


மேல் நகத்தால் குத்திப் பார்த்தால் நகம் உள்ளே இறங்கினால், நல்ல காய். அதில் விதைகளும் குறைவாக இருக்கும்.


தக்காளி


நல்ல சிவப்பில் தக்காளி இருந்தால் சுவையாக இருக்கும்.


முள்ளங்கி


இலேசாகக் கீறினால் தோல் மென்மையாக இருந்தால் அது இளசு, நல்ல காய் எனத் தெரிந்து கொள்ளலாம்.


உருளைக் கிழங்கு


முளை விடாமல் பச்சை நரம்பு ஓடாமல் கீறினாலே தோல் உதிர்ந்து பெயர்ந்து வர வேண்டும்.


கருணைக் கிழங்கு


பெரியதாக இருக்க வேண்டும். அழுத்தினால் சிறிது கனமாக இருக்க வேண்டும்.


சேப்பங்கிழங்கு


முளை விட்டது போல் ஒரு முனை நீண்டிருக்கும் கிழங்கு சமையலுக்கு சுவையாக இருக்காது. உருண்டையாக இருக்க வேண்டும்.


சர்க்கரை வள்ளிக்கிழங்கு


உறுதியான கிழங்கு இனிக்கும். அடிபட்டுக் கருப்பாக இருந்தால் கசக்கும்.வாழைத் தண்டு


மேல் பகுதி நார் அதிகம் இல்லாமலும் உள்ளிருக்கும் தண்டுப் பகுதி சிறுத்தும் இருப்பதாகப் பார்த்து வாங்க வேண்டும்.


வாழைப்பூ


மேல் இதழை விரித்து பூக்கள் கருப்பாகாமல் வெளிர் நிறத்தில் இருந்தால் அது புதிய பூ என்று அறிந்து கொள்ளலாம்.


காலிபிளவர்


பூக்களுக்கிடையே இடைவெளி இல்லாமல் அடர்த்தியாகக் காம்பு தடினமனாக இல்லாமல் இருக்க வேண்டும்.


இஞ்சி


இலேசாகக் கீறிப் பார்க்கும் போது, தோல் பெயர்ந்து வருவது நல்லது. நார்ப் பகுதி குறைவாக இருக்கும்.


மக்காச் சோளம்


இளசாகவும் இல்லாமல், அதிகமாக முற்றாமல் மணிகளை அழுத்தி பார்த்தால் உள்ளே இறங்காமல் இருந்தால் அது நல்ல மக்காச்சோளம்.


- சித்ரா பலவேசம், திருநெல்வேலி


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Powered by Blogger.