108 பானைகளில் வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரருக்கு பொங்கல்!

 


வவுனியா வடக்கு, வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரரின் வருடாந்த பொங்கல் விழாவின் இறுதிநாளான இன்று 108 பானைகள் வைத்து கோலாகலமாக பொங்கல் விழா இடம்பெற்றது.

ஆதிலிங்கேஸ்வரரின் வருடாந்த பொங்கல் விழா கடந்த 17ஆம் திகதி ஆரம்பமாகி தொடர்ந்து ஒன்பது நாட்கள் இடம்பெற்று இன்று (சனிக்கிழமை) பத்தாம் நாள் இறுதி விழா இடம்பெற்றது.

அந்தவகையில், ஆலய வளாகத்தில் 108 பானைகளில் பொங்கல் பொங்கி விசேட பூசை வழிபாடுகளுடன் கோலாகலமாக திருவிழா நடைபெற்றது.

காலை 11 மணிக்கு ஆரம்பமாகிய பூசை நிகழ்வுகளில் வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டிருந்ததுடன் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம், சட்டத்தரணி மணிவண்ணன் மற்றும் புவனேஸ்வரன் ஆகியோர் பங்கெடுத்திருந்தனர்.

இதேவேளை, ஆலய வளாகத்தில் அதிகளவான பொலிஸார் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததுடன் ஆலயத்திற்கு வருகைதரும் பக்கதர்கள் பதிவுசெய்யப்பட்ட பின்னரே உட்செல்ல அனுமதிக்கப்பட்டனர். அத்துடன் ஆலயத்திற்குள் உட்செல்வதற்கான சந்தியில் ஒலுமடு பிரதான வீதியை அண்டி இராணுவத்தினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

பொங்கல் விழாவிற்கு வவுனியா தமிழ்விருட்சம் அமைப்பினால் 53 பானைகள் உபயமாக வழங்கப்பட்டுள்ளதுடன் அன்பாலயா இளைஞர்களால் தண்ணீர் பந்தலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதேவேளை, ஆலயத்தில் தியாகி தீலிபனை நினைவுகூர்ந்து தீபம் ஏற்றி நிகழ்வுகள் எதனையும் மேற்கொள்ளவேண்டாம் என வவுனியா நீதிமன்றால் வழங்கப்பட்ட தடை உத்தரவு கோரிக்கை ஒன்றின் பிரதியை நெடுங்கேணி பொலிஸார் ஆலயத்தின் நிர்வாகத்தினருக்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.