வீட்டுத் தோட்டத்தில் தேங்காய்கள் பறித்த அருந்திக்க

தெங்கு, கித்துல், பனை மற்றும் இறப்பர் செய்கை ஊக்குவிப்பு மற்றும் அது சார்ந்த கைத்தொழில், உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ, தேங்காய் பறிக்கும் உபகரணத்தைப் பயன்படுத்தி தங்கொட்டுவையிலுள்ள தனது வீட்டுத் தோட்டத்தில் வெள்ளிக்கிழமை (18) தேங்காய்களை பறித்துள்ளார். இவ்வாறு தென்னை மரத்தில் ஏறி தேங்காய்களை பறித்த இராஜாங்க அமைச்சர், தென்னை மரத்தில் இருந்தபடியே ஊடகங்களுக்கும் கருத்து தெரிவித்தார் இலங்கையில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் உள்ளூர் நுகர்வோருக்கு தேங்காயின் தேவை அதிகமாக காணப்படுவதே நாட்டில் தேங்காய்க்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமைக்கான காரணமாகும். வருடத்தில் 2.8 மில்லியன் தேங்காய் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 700 மில்லியன் தேங்காய்களை தொழிற்சாலைகள் கொள்வனவு செய்கின்றன. 1.8 மில்லியன் தேங்காய்களையே நுகர்வோர் கொள்வனவு செய்கின்றனர். எனவேதான் தென்னை மரக் கன்றுகளை அதிகளவில் நடுவதற்கு எதிர்பார்த்துள்ளோம். தேங்காயின் விலை எவ்வளவுதான் அதிகரித்துக் காணப்பட்டாலும் அதை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என்றும் இராஜாங்க அமைச்சர் கூறினார். வரக்காப்பொல மெனிக்கடவல பிரதேசத்தைச் சேர்ந்த உபுல் குமார என்பவர் தயாரித்த குறித்த தேங்காய் பறிக்கும் உபகரணத்தைப் பயன்படுத்தியே இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ தென்னை மரத்தில் ஏறி தேங்காய்களை பறித்தார். குறித்த உபகரணத்தை பயன்படுத்தி ஆண்கள் மாத்திரமின்றி, பெண்களும் மரத்தில் ஏறி தேங்காய்களை பறிக்க (அறுவடை) கூடிய வகையில் அந்த உபகரணம் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் குறித்த உபகரணம் சந்தையில் விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.