திலீபன் நினைவேந்தல் தடை நீக்கம் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு24ஆம் திகதி🎦


தியாக தீபம் திலீபன் நினைவேந்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதா அல்லது தொடருவதா  என்பது குறித்து, எதிர்வரும் 24ஆம் திகதி தீர்ப்பளிப்பதாக யாழ்ப்பாண நீதிவான்  அறிவித்துள்ளார்.

    

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை தடை விதிக்கக் கோரி யாழ்ப்பாண நீதிமன்றத்தில் பொலிசார் தாக்கல் செய்த வழக்கு இன்று காலை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது. இதன்போது உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மன்றில் முன்னிலையாக பொலிசார் கால அவகாசம் கோரியதால், விசாரணை பிற்பகல் 1.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


இதையடுத்து, பிற்பகல் விசாரணை ஆரம்பமாகிய போது, மன்றில் பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி சிறிகாந்தா மற்றும் சட்டத்தரணி சுகாஷ் ஆகியோர் 106  பிரிவு 04 கீழ் பொலிசார் வழக்குத் தாக்கல் செய்தது தவறு என்று வாதிட்டதுடன், நினைவேந்தலுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரினர்.


பிரதிவாதிகள் தரப்பு சமர்ப்பணங்களை தொடர்ந்து பொலிசார் தமது நிலைப்பாட்டை எடுத்துக் கூறினார். திலீபன் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் தான் என்றும் அவரது நினைவேந்தலை அனுமதிக்கக் கூடாது என்றும் அவர்கள் வாதங்களை முன்வைத்தனர்.


நினைவேந்தலுக்கு வெளிமாவட்டங்களில் இருந்து பொதுமக்களை அவர்களின் விருப்பமின்றி அழைத்து வரப் போகிறார்கள் என்றும் பொலிசார் தெரிவித்தனர்.


இருதரப்பு வாதங்களையும் கேட்ட யாழ்ப்பாண நீதிமன்ற நீதிவான் , இந்த வழக்கில் நினைவேந்தல் தடையை நீடிப்பதா அல்லது நினைவேந்தலுக்கு அனுமதி அளிப்பதா என்று எதிர்வரும் 24ஆம் திகதி உத்தரவிடுவதாக அறிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.