வரலாற்றில் பிறழ்வு ஏற்படாமல் காத்துக்கொள்வது ஒவ்வொரு தமிழனதும் வரலாற்றுக்கடமை

 


உலகில் ஒவ்வொரு இனமும் தமக்காக ஆகுதியான தியாகிகளை, அதியுயர் ஈகைக்கொடை புரிந்த வீரர்களை, தங்களின் வரலாறாக வரிந்து கொண்டாடி மகிழ்கிறது. அவ்வாறு ஈழத்தமிழர் வாழ்வில் மட்டுமல்ல, உலகளாவிய தமிழர் வாழ்வில் நீக்கமற நிறைந்திருப்பவர் தான் தியாகதீபம் திலீபன். தன் மக்களிற்காக, அவர்களின் வாழ்வின் உயர்ச்சிக்காக, உரிமைகளின் உறுதிக்காக, பாதுகாப்பின் கவசத்திற்காக, அதியுயர் அர்ப்பணிப்பின் வடிவமான சாகும்வரை உண்ணாநோன்பை மேற்கொண்டு, அத்தியாக வேள்வியில் தீபமானவர் தான் எங்கள் பார்த்தீபன். உலகில் பலரும் அகிம்சை ஆயுதமான உண்ணாநோன்பை தம் மக்களுக்காக கையில் எடுத்தாலும், அதில் திலீபன் போல் உறுதிப்பாட்டையும், இலட்சிய வேட்கையையும், உண்ணாநோன்பின் அதியுயர் வடிவத்தையும் என்றும் கைக்கொண்டதில்லை. மருத்துவபீட மாணவனான திலீபனுக்கு தான் முன்னெடுக்கும் நீராகாரம் கூட அருந்தாத வடிவம், எவ்வளவு உடலியல் ரீதியாக கொடியது என்பது நன்றாகவே தெரியும். தெரிந்தே அவ்வடிவத்தை திலீபன் தெரிவு செய்தது தான் அவனது உறுதிப்பாட்டின் உச்சம். அது நீராகாரம் கூட அருந்தாத அவனது உண்ணாநோன்பின் போதான அவனது உரைகள் அனைத்திலும் ஆணித்தரமாக வெளிப்பட்டது. இரண்டாம் நாள் பல்லாயிரத்தில் தன் முன்னிருந்த ன் மக்களைப் பார்த்து பின்வருமாறு பேசினான் திலீபன் ”எனது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய மக்கள் அனைவருக்கும் வணக்கம். நின்று கொண்டு பேச முடியாத நிலையில் இருப்பதால் இருந்து பேசுகிறேன். நாளை நான் சுயநினைவுடன் இருப்பேனோ என்று தெரியாது அதனால் இன்று உங்களுடன் பேச வேண்டும் என்று விரும்பினேன். நான் எமது இலட்சியத்தில் உறுதியாக இருக்கின்றோம். 650 பேர் வரையில் இன்று வரை மரணித்துள்ளோம். மில்லர் இறுதியாகப்போகும் போது என்னிடம் ஒரு வரி கூறினான். நான் அவனுடன் இறுதி வரை இருந்தேன். “நான் எனது தாய் நாட்டிற்காக உயிர் துறப்பதை எண்ணும்போது மகிழ்ச்சியும் திருப்தியும் அடைகிறேன். மக்கள் விடுதலை அடையும் காட்சியை என் கண்களால் காண முடியாது என்பதே ஒரே ஏக்கம்” என்று கூறிவிட்டு வெடி மருந்து நிரப்பிய லொரியை எடுத்துச்சென்றான். இறந்த 650 பேரும் அனேகமாக எனக்கு தெரிந்துதான் மரணித்தார்கள். அதனை நான் மறக்க மாட்டேன். உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு தலைவரின் அனுமதியை கேட்டபோது அவர் கூறிய வரிகள் என் நினைவில் உள்ளன. "திலீபா நீ முன்னால் போ..நான் பின்னால் வருகிறேன்" என்ற அவர் கூறினார். இத்தகைய ஒரு தெளிவான தலைவனை தனது உயிரை சிறிதும் மதிக்காத தலைவனை நீங்கள் பெற்று இருக்கிறீர்கள். அந்த மாபெரும் வீரனின் தலைமையில் ஒரு மக்கள் புரட்சி இங்கு வெடிக்கட்டும். அது நிச்சயமாக தமிழீழத்தினை தமிழர்களின் அடிப்படை உரிமைகளை பெற்றுத்தரும். இதனை வானத்தில் இருந்து இறந்த மற்ற போராளிகளுடன் சேர்ந்திருந்து நானும் பார்த்து மகிழ்வேன். நான் மனரீதியாக ஆத்மார்த்தமாக எமது மக்கள் விடுதலை அடைவார்கள் என உணர்கிறேன். மகிழ்ச்சியுடனும் பூரண திருப்தியுடனும் உங்களிடமிருந்து விடைபெறுகிறேன். விடுதலைப்புலிகள் தங்கள் உயிரினும் மேலாக சிறுவர்களை சகோதரிகளை தாய்மார்களை தந்தையர்களை நினைக்கிறார்கள். உண்மையான உறுதியான இலட்சியம். அந்த இலட்சியத்தினை எமது தலைவருடன் சேர்ந்து நீங்கள் அடையுங்கள் எனது இறுதி விருப்பமும் இதுதான்.” தனது முடிவில் முன்னெடுப்பில் தீர்க்கமாக தீர்மானமாக இருந்த திலீபனுக்கு மூன்றாம் நாள் பின்வருமாறு பேசிய உறவொன்றின் பேச்சு அதீத கலவையை ஏற்ப்படுத்திவிட்டது. “தியாகி திலீபனின் உயிர் விலைமதிப்பற்றது. அவர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு மட்டும் உரியவர் அல்ல …… அவர் …… தமிழ் இனத்துக்கே சொந்தமானவர்… அப்படிப்பட்ட திலீபன் அவர்கள் ஒரு சொட்டு நீராவது அருந்தி தன் உடலைக் காப்பாற்ற வேண்டும். ஆவர் தன் பிடிவாதத்திலிருந்து இறங்கி நீர் உணவு அருந்தி எம் கவலையைப் போக்கவேண்டும்…… இது எனது வேண்டுகோள் மட்டுமல்ல: இங்கே வந்திருக்கும் இலட்சக்கணக்கான மக்களின் வேண்டுகோளும் இதுதான்.” அந்தப் பேச்சைக் கேட்ட திலீபனின் முகம் வாடியது…… உடன் தான் பேசப்போவதாகக் கூறிப் பின்வருமாறு பேசினார். “இந்த மேடையில் பேசிய ஒர் அன்பர் என்னை நீர் உணவு அருந்தும்படி கூறியது என்னை அவமானப் படுத்துவது போல் இருக்கிறது…… நான் இந்த மேடையிலே நீராகாரம் எதுவும் எடுக்காமல் தான் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தேன்… இறுதிவரை இந்த இலட்சியத்தில் இருந்து மாறமாட்டேன். நீங்கள் இந்தத் திலீபனை நேசிப்பது உண்மையாக இருந்தால் தயவு செய்து இனிமேல் என்னை யாரும் நீராகாரம் அருந்தும்படி வற்புறுத்த வேண்டாம். உங்கள் திலீபனுக்கு நிறைந்த மனக்கட்டுப்பாடும் தன்னம்பிக்கையும் உண்டு…… என் கோரிக்கைகளை இந்திய அரசு நிறைவேற்றாவிட்டால் நீரே எடுக்காமல் இறப்பேனே தவிர இந்த அற்ப உயிரைக் காப்பாற்றுவதற்காக என் இலட்சியத்திலிருந்து ஒரு போதும் பின் வாங்க மாட்டேன்.” இவ்வாறு திலீபன் பேசி முடித்ததும் கண்ணீரும் கம்பலையுமாக இருந்த மக்களுடன் இணைந்து கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்த மழை கூட நின்று போனது. நீராகாரம் கூட அருந்தாது உண்ணாநோன்பிருந்தால் அது உடலின் அவயவங்களின் இயக்கத்தில் நிரந்தர பாதிப்பைக் கூட விரைவில் ஏற்ப்படுத்திவிடும் என்பதை மருத்துவபீட மாணவனாக நன்கறிந்த திலீபன் அதனை தனது நான்காவது நாள் உரையில் மக்களிடம் நேரடியாகவே பகிர்ந்து கொண்டான். “அன்பார்ந்த தமிழீழ மக்களே! விளக்கு அணையுமுன்பு பிரகாசமாக எரியுமாம். அதுபோல இன்று நானும் உற்சாகத்துடன் இருக்கிறேன் என்பது தெரிகிறது. இன்று தாராளமாகப் பேசமுடிகிறது. போராடத் தயாராகுங்கள்! எனக்கு விடை தாருங்கள்! ஒருவரும் என்னை இந்தப் போராட்டத்தைக் கைவிடுமாறு கேட்க வேண்டாம். நானும் எனது தலைவரும் சேர்ந்து எடுத்த முடிவுதான் இது. மறைந்த போராளிகள் 650 பேருடன் சேர்ந்து 651 ஆவது ஆளாகி மேலிருந்து பார்ப்பேன். எங்கள் உயிர் உங்களுடன் ஒட்டிவிடும். என்னைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். எனது அவயவங்கள் செயலிழப்பதனால் இனிமேல் மனிதனாக வாழமுடியாது என்பது எனக்குத் தெரியும். எமது வீரர்கள் கொள்கைக்காக உயிரைக் கொடுப்பவர்கள். கொள்கைக்காக என்னைத் தொடர்ந்து வருவார்கள். அவர்களையும் தடுக்காதீர்கள். நாங்கள் ஐந்து ஆறு பேர் சாவதால் எவ்வித தீங்கும் வந்துவிடாது. மக்கள் புரட்சி வெடிக்கட்டும். நான் மூன்று தடவைகள் பேசியுள்ளேன். மூன்று தடவைகளும் ஒரே கருத்தைத்தான் பேசியுள்ளேன்”. இவ்வாறு தான் தியாக தீபன் திலீபனின் வீரவரலாறு என்முன்னே நிதர்சனமாக விரிந்து கிடக்கிறது. இன்றும் அப்பேச்சுகள் காணொளியாக ஒலிவடிவமாக திலீபனின் அறைகூவலாக எம்மத்தியில் ஓங்கியெலிக்கின்றன. இவ்வரலாற்றை பிறழ்வுக்கு உட்படுத்தவே சிங்களத்திலும் சிங்களத்தைக் கடந்தும் ஏன் எம் மத்தியிலும் சிலர் கூட 33 ஆண்டுகள் கழிந்தும் முனைகின்றனர். திலீபனின் வீரச்சாவைத் தொடர்ந்து தமிழர் தேசமும் உலகளாவிய தமிழரும் கொதித்தெழுந்து நிற்கையில் நோய்வாய்ப்பட்டவரை வேண்டுமென்றே கொன்று விட்டார்கள் என வினை விதைத்துப் பார்த்தது இந்திய ஆதிக்கவர்க்கம். அதற்கு அணிசேர்க்க தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகத்தைக் கொண்டு அவ்வாறான அறிக்கை ஒன்றைக் கூட விடவைத்தும் தோற்றுப் போனது அது அன்று. அதே முயற்சியில் 33 ஆண்டுகள் கழித்தும் சிங்களம் முயன்று பார்க்கிறது. தமிழினத்தை சீண்டிப் பார்க்கிறது. எம் ஓர்மத்தை எமது சுயத்தை உரசிப் பார்க்கிறது. சிந்திக்கும் தமிழர்களுக்கு சுய அடையாளத்தை பேணும் தமிழர்களுக்கு உங்கள் வரலாற்றை பிறழ்வுக்கு உள்ளாகாமல் பார்த்துக் கொள்ளும் பெரும் பொறுப்பு இருக்கிறது என்பதை இடித்து நினைவூட்டுகிறது. பிறழ்வா? நிமிர்வா? என எம்மையே கேள்வி கேட்க வைக்கிறது. என்னருமைத் தமிழினமே. ஒரு மனிதனின் பிறப்பும் இறப்பும் ஒருமுறை தான் நடக்கிறது. அவை அர்த்தமுடையவையாக எமக்கு அமைய வேண்டுமானால் எமது அடையாளமான வரலாற்றைப் பேணுவோம் பாதுகாப்போம்.. அதில் முதன்மையானது தமிழ் அன்னையின் அருந்தவப்புதல்வன் தியாகதீபம் திலீபனின் தியாக வரலாறு. ஒவ்வொரு தலைமுறையாக பகிரப்பட்டு காக்கப்படவேண்டிய உன்னதவரலாறு அது.. தவறாது காத்துப்பகிர்வோமா?

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.