மக்களுக்கான உரிமைகள் பற்றி சி.வி விக்னேஸ்வரன் எடுத்துரைப்பு!

 


மக்களின் உரிமைகளுக்காக தமது உயிர்களைத் தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான உரிமை மறுக்கப்பட்டிருப்பது கொடுமையிலும் கொடுமையாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(வியாக்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “எமது மக்களின் உரிமைகளுக்காக தமது உயிர்களைத் தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான உரிமை மறுக்கப்பட்டிருப்பது கொடுமையிலும் கொடுமையாகும்.

சென்ற அரசாங்கம் இவ்வாறான அஞ்சலிகளைக் கண்டும் காணாதது போல் இருந்ததால்த்தான் இம்முறை மத்தியில் இருக்கும் ஒரு தேசியக் கட்சிக்கு மக்களின் வாக்குகள் கிடைத்தன.

அடுத்த முறை மத்திய தேசியக் கட்சிகளை மக்கள் வெறுத்தொதுக்குவதற்காகத்தான் இவ்வாறு இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றதோ நான் அறியேன். அடுத்த முறை கையூட்டுகள் இரட்டிப்பாகக் கிடைத்தாலும் மக்கள் மத்திய தேசியக் கட்சிகளுக்கு வாக்களிக்க மாட்டார்கள்.

(இப் பந்தி வரையில் தான் விக்னேஸ்வரனினால் நாடாளுமன்றத்தில் உரையாற்ற முடிந்தது. நேரம் போதாமையால் மிகுதியை ஹன்சாட்டில் உள்ளவாங்குவதற்கு அனுமதி பெறப்பட்டது)

எமது மக்களின் நியாயமான உரிமைகளை வலியுறுத்தியே தியாகி திலீபன் 30 ஆண்டுகளுக்கு முன்னர் உண்ணாவிரதம் இருந்தார். உண்ணாவிரதம் இருந்து மடிந்த ஒருவரைக் கூட நினைத்து அஞ்சலி செலுத்தக் கூடாது என்று அரசாங்கம் தடை விதித்திருக்கின்றது என்றால் ஆயுதமேந்தி மடிந்தவர்களை நினைத்து அஞ்சலி செலுத்தலாம் என்று நினைக்கின்றதா?

இரண்டுமே வேண்டாமென்றால் அரசாங்கம் கூறவருவது எதனை? அஹிம்சை முறையிலேயோ ஹிம்சை முறையிலேயோ தமிழ் மக்கள் அரசியல் நடவடிக்கைகளில் இறங்கக் கூடாது என்பதைத் தானே?

மக்கள் தமது நியாயமான உரிமைகளைப் பெற எத்தனிக்கக் கூடாது என்பதைத் தானே அரசாங்கம் சொல்ல வருகின்றது? இப்பொழுதே இப்படி என்றால் 20வது திருத்தச் சட்டம் நிறைவேறினால் என்ன நடக்கப் போகின்றது என்பதை இலங்கை மக்கள் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அடுத்து திலீபனின் அன்றைய நியாயமான கோரிக்கைகள் இன்று வரையில் நிறைவேற்றப்படவில்லை என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். வடக்குக் கிழக்கில் திட்டமிட்ட அரச குடியேற்றங்கள் இன்றும் நடைபெற்று வருகின்றன.

தமிழ் அரசியற் கைதிகளுக்கு இன்றும் விமோசனம் கிடைக்காதிருக்கின்றது. பயங்கரவாதத் தடைச்சட்டம் இன்னமும் நடைமுறையில் உள்ளது. தமிழர் பிரதேசங்களில் புதிய பொலிஸ் நிலையங்களைத் திறந்து அங்கு தமிழ் பேசாதவர்களைப் பதவியில் இருத்துவது இன்றும் நடந்து கொண்டிருக்கின்றது.

அன்று அவர் எதற்காக ஒரு துளி நீர் கூட அருந்தாமல் 12 நாட்கள் உண்ணா நோன்பிருந்து மடிந்தாரோ அதே கோரிக்கைகள் 30 வருடங்கள் கடந்த நிலையிலும் இன்றும் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன. அரசாங்கம் தொடர்ந்தும் எம் மக்களைப் பயங்கரவாதிகளாகவே சித்திரிக்கப்பார்க்கின்றார்கள்.

ஆனால் நாம் செய்யும் அனைத்துச் செயல்களும் உலக அரசாங்கங்களினாலும் ஐ.நா. சபையாலும் கவனமாக உற்று நோக்கப்பட்டே வருகின்றன என்பதை அரசாங்கம் மறக்கக் கூடாது. கலாநிதி பச்சலட் அவர்களின் அண்மைய கூற்று இதனை வெளிப்படுத்துகின்றது.

அடக்கு முறைகளின் மூலம் எமது மக்களின் உணர்வுகளை அடக்குவது இந்த நாட்டில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்குக் குந்தகமாகவே அமையும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

ஆகவே தயவு செய்து எதிர்வரும் 26ந் திகதி எமது மக்கள் தியாகி திலீபனின் நினைவு தினத்தை அனுஷ்டிப்பதற்கு ஏற்படுத்தியுள்ள தடைகள் அனைத்தையும் நீக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கின்றேன்.

மூன்றாவதாக திலீபன் தொடர்பாக எமது மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா கருத்துக்களைத் தெரிவிக்காது இருத்தல் நலமென்றே நினைக்கின்றேன்.

முன்னர் எப்போதும் இல்லாத வகையில் தமிழ் மக்களின் போராட்டமும் வரலாறும் தமிழ் மக்களினாலேயே கொச்சைப்படுத்தப்படும் புதிய நிகழ்ச்சித் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சர் தேவானந்தா பாவிக்கப்படுகின்றார் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

எதற்காக திலீபன் சம்பந்தமாக அமைச்சர் தேவானந்தா முறையற்ற விமர்சனங்களில் ஈடுபட்டு வருகின்றார் என்பது எமக்குப் புரியவில்லை. சூளை மேட்டுக் கொலை பற்றியோ ஊர்காவற்றுறை, நெடுந்தீவு போன்ற தீவுப்பகுதிகளில் அவரின் கட்சி இயற்றிய அட்டகாசச் செயற்பாடுகள் பற்றியோ, மகேஸ்வரன் கொலை பற்றியோ, அற்புதன், நிமலராஜன் போன்ற பத்திரிகையாளர்கள் கொலை பற்றியோ எவரும் கூறாதிருக்க ஏன் திலீபன் பற்றியும் என்னைப் பற்றியும் மிகுந்த கரிசனை காட்டுகின்றார் அவர் என்பது புரியவில்லை.

அத்துடன் மாகாணசபையின் அதிகாரங்கள் தொடர்பில் பொருத்தம் அற்றதும் விளக்கமற்றதுமான கருத்துக்களைக் கூறுவதையும் அமைச்சர் டக்ளஸ் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

கூலிக்கு மாரடிப்பவர்களுக்கு எமது மக்களுக்கான உரிமைகள் பற்றியோ, தேவையான அதிகாரங்கள் பற்றியோ என்ன விளங்கப் போகின்றது? கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.