போதைமருந்துப் பிடியில் சினிமா உலகம்
சினிமா நடிகர்கள் போதைப் பொருளை பயன்படுத்துவதாகவும், இதற்காக போதைப் பொருள் கடத்தல் காரர்களுடன் தொடர்பு கொண்டிருப்பதாகவும் தயாரிப்பாளர் ஒருவர் கூறிய தகவல் சினிமா உலகை அதிர வைத்திருக்கிறது. மும்பையை மையமாகக் கொண்ட பாலிவுட் சினிமா உலகத்தில் போதைப் பொருள் பழக்கம் பற்றி அவ்வப்போது சர்ச்சைகள் எழுவதும் அடங்குவதுமாக இருக்கும். ஆனால் தென்னிந்திய சினிமாவுலகில் போதைப் பொருள் புழக்கம் பற்றித்தான் இப்போது கன்னட தயாரிப்பாளரும் பத்திரிகையாளருமான இந்திரஜித் லங்கேஷ் மூலம் தகவல் வெளியாகியிருக்கிறது. 2017 செப்டம்பர் 5 ஆம் தேதி பெங்களூருவில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் கௌரி லங்கேஷின் சகோதரர்தான் இந்திரஜித் லங்கேஷ்.
ஆகஸ்டு மூன்றாவது வாரத்தில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் பெங்களூருவில் ஒரு சோதனை மேற்கொண்டனர். இதில் கன்னட நடிகர்கள் மற்றும் இசைக்கலைஞர்களின் பெயர்கள் சம்பந்தப்பட்டதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அறிக்கை வெளியிட்டது. இதைத் தொடர்ந்துதான், பத்திரிகையாளரும் தயாரிப்பாளருமான இந்திரஜித் லங்கேஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அதில், “கன்னட சினிமா உலகில் ஏராளமான போதைப்பொருள் புழங்குகிறது. அதற்காக ஒட்டுமொத்த சினிமா துறையையும் குறை சொல்ல மாட்டேன். புலனாய்வு அதிகாரிகள் விரும்பினால், பெயர்கள் மற்றும் ஆதாரங்களுடன் உதவவும் நான் தயாராக இருக்கிறேன்” என்று அறிவித்தார் லங்கேஷ்.
லங்கேஷ் வெளியிட்ட தகவலால் அதிர்ந்த கர்நாடக போலீஸார் அம்மாநில உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனைக்குப் பிறகு லங்கேஷை விசாரணைக்கு அழைத்தனர். இதையடுத்து பெங்களூரு போலீஸ் மத்திய குற்றப் பிரிவு சார்பில் ஆகஸ்டு 31 ஆம் தேதி விசாரணைக்கு அழைக்கப்பட்டார் லங்கேஷ். அங்கே நான்கு மணி நேரத்திற்கும் மேலாக போலீஸார் அவரிடம் விசாரித்தனர்.
விசாரணைக்குப் பின்னர் ஊடகத்தினரிடம் பேசிய லங்கேஷ், “கன்னட சினிமா உலகில் போதைப் பொருள் பயன்படுத்தும், போதைப் பொருள் கும்பலோடு தொடர்புடைய 10 முதல் 15 நடிகர்களின் பெயர்களையும் போலீஸிடம் ஒப்படைத்துள்ளேன். அவர்களில் புதிய மற்றும் இளம் நடிகர்கள் சிலரும் இருப்பதைக் கூற நான் வெட்கப்படுகிறேன். போதைப்பொருட்களுக்கான பிராண்ட் தூதர்களாக அவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இது தொடர்பாக என்னென்ன செய்கிறார்கள் என்பதற்கான கூடுதல் ஆதாரங்களுடன் நான் புலனாய்வுக் குழுவுக்கு தகவல்களைக் கொடுத்துள்ளேன். அவர்களுக்கு நிறைய வீடியோக்களையும் படங்களையும் கொடுத்துள்ளேன் அவர்களின் தற்போதைய விசாரணைகளுக்கு இது உதவியாக இருக்கும். சிசிபி அதிகாரிகள் விசாரணையில் மிகவும் திருப்தி அடைந்துள்ளனர்” என்று கூறிய லங்கேஷிடம், “இவ்வளவு முக்கிய தகவல்களைக் கொடுத்த நீங்கள் போலீஸ் பாதுகாப்பை கேட்டிருக்கிறீர்களா?’ என்று கேட்டதற்கு, "நான் பாதுகாப்பு கேட்கவில்லை. நிறைய திரைப்படத் துறையினரும் அரசியல்வாதிகளும் என்னை ஆதரித்து நன்றி தெரிவித்துள்ளனர். என்னை ஆதரித்த பொது மக்களுக்கும் நான் நன்றி கூறுகிறேன்" என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் இன்று (செப்டம்பர் 3) மீண்டும் இந்திரஜித் லங்கேஷ் பெங்களூரு மத்திய குற்றப் பிரிவு போலீஸார் அலுவலகத்தில் இரண்டாம் முறையாக ஆஜரானார். இம்முறை கையில் ஒரு பையுடன் வந்த லங்கேஷ் அதில் புகைப்படங்கள் வீடியோ சிடிக்களை போலீசாரிடம் கொடுத்ததாக தெரிகிறது. அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய இந்திரஜித் லங்கேஷ்,
“ கடந்த முறை நான்கு முதல் ஐந்து மணி நேரம் விசாரணையில் பங்கு பெற்றேன். இன்று 40 நிமிடங்கள் மட்டுமே விசாரணையில் கலந்துகொண்டேன். கடந்த விசாரணையின் அடிப்படையில் சில தெளிவுபடுத்துதல்களை கேட்டிருந்தார்கள். இதற்கு மேல் நான் ஏதும் சொன்னால், அவர்களின் விசாரணையைத் தடுக்கும் என்பதால் வேறு எதையும் நான் வெளியிட விரும்பவில்லை. திரையுலகத்தை போலீஸார் சுத்தம் செய்வார்கள் என்று நம்புகிறேன் " என்று கூறியுள்ளார்.
போதை மருந்து பயன்படுத்தும் கன்னட நடிகர்கள் பட்டியலில் இருப்பவர்களில் பலர் தமிழிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் நடிகைகளும் உண்டு. அதில் சில நடிகைகள் அரசியல் செல்வாக்கோடு இருப்பதால் போலீசார் எப்படி நடவடிக்கை எடுப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கன்னட சினிமா வட்டாரத்தில் சிலர் சொல்கிறார்கள். தமிழ் சினிமா உலகிலும் போதை மருந்து உபயோகம் இருக்கிறதா என்றும் போலீஸார் இந்த விசாரணையின் ஓர் அங்கமாக விசாரித்து வருகிறார்கள்.
-ஆரா
கருத்துகள் இல்லை