ரஷ்ய எதிர்கட்சித் தலைவர் நவால்னி: கோமாவில் இருந்து மீண்டதாக மருத்துவர்கள் தகவல்
ரஷ்ய எதிர்கட்சித் தலைவர் அலெக்ஸே நவால்னி, நச்சு வேதிப்பொருள் தாக்கத்துக்கு ஆளாகி ஜெர்மன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கோமா நிலையில் இருந்து அவர் மீண்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
44 வயதாகும் நவால்னி, நோவிசோக் எனப்பபடும் நரம்பு மண்டலத்தை தாக்கக்கூடிய ரசாயன தாக்குதலுக்கு ஆளானதாக ஜெர்மன் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் கோமா நிலையில் இருந்த அவரது உடல்நிலையில் இன்று முன்னேற்றம் காணப்பட்டதாகவும், வாய்மொழியாக கேட்கப்படும் கேள்வியை அவரால் உணர முடிவதாகவும் அந்த மருத்துவமனை வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது உடலில் கலந்துள்ள நச்சு ரசாயனம் எந்த அளவுக்கு நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இப்போதைய சூழலில் அனுமானிக்க முடியாது என்றும் அந்த மருத்துவமனை தெரிவித்துள்ளது.
முன்னதாக, நவால்னியின் உடல்நிலை தொடர்பாக மருத்துவர்கள் பகிர்ந்து கொண்ட தகவலை அவரது செய்தித்தொடர்பாளர் கிரா யார்மிஷ் தமது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.
Новости об Алексее. Сегодня его вывели из искусственной комы. Постепенно его отключат от ИВЛ. Он реагирует на речь и на обращения к нему
— Кира Ярмыш (@Kira_Yarmysh) September 7, 2020
கடந்த மாதம் சைபீரியாவில் இருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் வந்தபோது திடீரென நவால்னி மயங்கி விழுந்தார். இதனால், ஓம்ஸ்க் நகரில் அந்த விமானம் தரையிறக்கப்பட்டது.
அவரை விஷயம் வைத்து கொல்ல முயற்சி நடந்ததாக அவரது ஆதரவாளர்கள் குற்றம்சாட்டினர். இந்த நிலையில், அவசரஊர்தி விமானத்தில் ஜெர்மனி அழைத்து வரப்பட்ட நவால்னிக்கு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் நோவிசோக் எனப்படும் நரம்பு மண்டலத்தை தாக்கக் கூடிய நச்சு ரசாயனம் அவரது உடலில் கலந்திருப்பது தெரிய வந்தது.
இந்த சம்பவத்தில் நவால்னிக்கு நச்சு ரசாயனம் கொடுத்தது யார் என்பதை அறிய ரஷ்யாவுக்கு கடுமையான அழுத்தம் தர வேண்டும் என்று ஜெர்மன் ஆட்சித்துறைத் தலைவர் ஏங்கலா மெர்க்கலுக்கு அவரது நாட்டில் நெருக்கடி அதிகரித்து வருகிறது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஆட்சித்துறை தலைவரின் அலுவலகம், சில கடுமையான கேள்விகளுக்கு ரஷ்யா பதில் சொல்வது அவசியம். ஆனால், அந்த பதில் 2 அல்லது 3 நாட்களுக்குள் வரும் என எதிர்பார்க்க முடியாது என்று கூறியுள்ளது.
கருத்துகள் இல்லை