தியாகி திலீபனுக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலி தமிழர்களின் ஒற்றுமையே- சசிகலா ரவிராஜ்!!
தியாகி திலீபனுக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலி தமிழர்களின் ஒற்றுமையே என மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ்ஜின் பாரியார் சசிகலா ரவிராஜ் தெரிவித்துள்ளார்.
அத்துடன், திலீபனின் அகிம்சைப் போராட்டத்தை சம்பந்தப்பட்டவர்கள் கண்டு கொள்ளவில்லையென்று ஆதங்கப்படும் நாம், அவருக்கு அஞ்சலி செய்தல் மட்டும் போதுமா என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தியாகத்தால் மேன்மை பெற்ற பலர் குறித்து பேசுவதைக் கேட்டிருக்கிறோம். தனது வாரிசினால் அரியாசனத்திற்கான பதவிப்போட்டி வந்து விடக்கூடாது என்பதற்காக இல்லறத்தை தியாகம் செய்தான் கங்கை மைந்தன் பீஷ்மன்.
எதிரியோடு களத்திலே போரிடும் வேளையில் தான் பலவீனம் ஆக்கப்படுவேன் எனத் தெரிந்திருந்தும் கவச குண்டலங்களை தியாகம் செய்தான் கொடை வள்ளல் கர்ணன். கற்ற வித்தையை பிரயோகிக்க முடியாத நிலை வரும் என அறிந்தும் பெருவிரலை தியாகம் செய்தான் ஏகலைவன். புறாவின் உயிரைப் பாதுகாக்க அதற்குச் சமனான சதையைத் தர முன்வந்தான் சிபி சக்கரவர்த்தி. இவைபோன்ற பல்வேறு தியாகங்களை விஞ்சி நிற்கிறது நமது திலீபனின் ஈகம்.
அகிம்சை வழி நின்று அகில உலகுக்கும் தமிழினத்தின் அவலத்தை அறிவித்த தியாகி திலீபனின் மரணத்தால் அகிம்சை, இம்சை செய்யப்பட்டது. அணுவணுவாய் மரணம்
அவரை ஆட்கொண்டபோது மனிதநேயமும் மரணித்துப் போனது. ஆண்டுகள் பல கடந்தாலும் நெஞ்சை நெருடும் அந்த நினைவுகள் ஆறாத புண்களாக, மாறாத வேதனையைத் தருகின்றன.
அவரது அகிம்சைப் போராட்டத்தை சம்பந்தப்பட்டவர்கள் கண்டு கொள்ளவில்லையென்று ஆதங்கப்படும் நாம், அவருக்கு அஞ்சலி செய்தல் மட்டும் போதுமானதா? அவருக்கு அஞ்சலி செலுத்துவதில்கூட ஒன்றுபட முடியாதவாறு பிரிவினைகள் நமக்குள்ளே தீவிரமடைந்து கொண்டிருக்கின்றன.
கட்சிகளாகப் பிரிந்து, கட்சிக்குள்ளே கோஷ்டிகளாக பிரிந்து நாமே சரியானவர்கள் மற்றவர்கள் எல்லோரும் பிழையானவர்கள் என்பதை நிரூபிப்பதிலேயே நாம் காலத்தைக் கடத்திக்கொண்டு இருக்கிறோம். இவையெல்லாம் திலீபனுக்குச் செலுத்தும் அஞ்சலிகளா?, எமது அஞ்சலியை திலீபனின் ஆத்மா ஏற்குமா?
விடிவே வராது என்று விரக்தியில் நின்று விசனப்படும் வேளை விடியலுக்கான ஒளிக்கீற்றுக்களாய் அண்மைக்காலத்தில் பதிவாகியிருக்கும் நிகழ்வுகள் எமக்கு நம்பிக்கையூட்டுகின்றன.
நாடாளுமன்றத்தில் குரல்கொடுக்கும் பெரியார் ஒருவர் மீதான தனது நீதிமன்ற வழக்கை இளைய சட்டத்தரணி ஒருவர் மீளப் பெற்றுக்கொண்டதோடு, முடிவில் புரிந்துணர்வுடன் பரஸ்பரம் வாழ்த்துகள் தெரிவித்தமையும், தியாக தீபம் திலீபனின் அஞ்சலி நிகழ்வுகள் மீதான தடை தொடர்பாக தமிழ் தலைமைகள் ஒரே மேடையில் அமர்ந்து பேச்சில் ஈடுபட்டு ஜனநாயக வழியிலான தீர்வைப் பெற முயற்சி எடுத்துள்ளமையும் அவற்றில் சிலவாகும்.
அத்தோடு, தமிழ் தேசியக் கட்சிகளின் இளைஞர் அணியினரிடையே காணப்படும் ஐக்கியம் வரேவற்கப்படத்தக்கதும் வளர்க்கப்பட வேண்டியதுமாகும். அவர்கள் தொடர்ந்தும் அறிவு பூர்வமாகச் சிந்தித்து மக்களின் உரிமைகளையும் அபிலாசைகளையும் அடைவதற்கான பயணத்தை விவேகத்துடன் தொடர வாழ்த்துகிறேன்.
தியாக தீபம் திலீபனுக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் நாம் இனத்திற்காக ஒன்றுபட்டு, இனிவரும் நாட்களில் வரப்போகும் ஒவ்வொரு சவால்களையும் ஒற்றுமையாக எதிர்கொள்வோமானால் அதுவே உண்மையாக அவருக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாக அமையும். என்போது ஒரே அணியில் ஒற்றுமையாக நின்று நம் இனம் உரிமைக்குரல் கொடுக்கிறதோ அன்றே திலீபனின் ஆத்மா சாந்தியடையும்!
கனவான்களே, கற்றவர்களே, கட்சிகளின் தலைவர்களே, தொண்டர்களே! அமர்ந்திருந்து உற்றுக் கேளுங்கள்; திலீபனின் தீனமான ஆனால் தீர்க்கமான குரல் உங்கள் காதுகளில் கேட்கும்.
ஒன்று சேருங்கள் உரிமைக்குரல் கொடுங்கள், ஒன்றுபடுங்கள் வென்றெடுங்கள்!” என சசிகலா ரவிராஜ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை