இலங்கைக்கு கடல் அட்டைகள், மஞ்சள் கடத்த முயன்ற மூவர் கைது!!

 


இந்தியாவின் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற கடல் அட்டைகள் மற்றும் சமையல் மஞ்சள் ஆகியவற்றை இந்திய மெரைன் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.


நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற சம்பவத்தில் மூன்று சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


இந்தியாவின் தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து பாம்பன் கடல் வழியாக இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள், சமையல் மஞ்சள் அடங்கிய 22மூட்டைகள் பொலிஸாரினால் நடுக்கடலில் பறிமுதல் செய்யப்பட்டதுடன், மீனவர்களையும் கைது செய்துள்ளனர்.


பாம்பன் பாலம் கடல் வழியாக வெளி மாவட்ட படகு ஒன்றில், இலங்கைக்கு கடத்தல் பொருட்கள் அனுப்பப்பட உள்ளதாக இந்திய மெரைன் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குந்துக்கால் கடற்கரையில் நேற்று காலை முதல் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.


இதன்போது, பாம்பன் குந்துகால் கடலில், பைபர் நாட்டு படகு ஒன்று இயந்திரப் பழுதாகி நின்று கொண்டிருந்தது. ரோந்து பணியில் இருந்த மெரைன்பொலிஸார், படகில் உள்ள மீனவர்களிடம் விசாரணை நடத்தியத்தில் மீனவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.


இதனால் சந்தேகம் அடைந்த பொலிஸார், படகில் ஏறி சோதனை மேற்கொண்டபோது, இலங்கைக்கு கடத்துவதற்காக 22 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் சமையல் மஞ்சள் ஆகியவை படகில் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.


மீனவர்களிடம் மெரைன் பொலிஸார் நடத்திய விசாரணையில்,  தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து பாம்பன் கடல் வழியாக இலங்கைக்கு கடல் அட்டைகளும், சமையல் மஞ்சளும் கடத்தி செல்வதற்காக படகில் எடுத்து சென்றபோது நடுவழியில் எஞ்சின் பழுது காரணமாக நடுக்கடலில் தத்தளித்து நின்றதாகவும் தெரிவித்தனர்.


குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட மூன்று மீனவர்களை கைது செய்ததுடன்,  கடல் அட்டைகள், சமையல் மஞ்சள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதன்போது 22 மூடைகளில் சுமார் 800 கிலோ கடல் அட்டைகளும், 400 கிலோ மஞ்சளும் இருந்துள்ளன.


இவ்வாறு கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் சமையல் மஞ்சளின் சர்வதேச மதிப்பு இந்திய பெறுமதியில் சுமார் 20 இலட்சம் இருக்கலாம் என பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இந்திய மெரைன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.