நாளை தலிபான்- ஆப்கானிஸ்தானுக்கு இடையே சமாதானப் பேச்சுவார்த்தை ஆரம்பம்!

 


வளைகுடா அரபு மாநிலமான கட்டாரில் தலிபான் மற்றும் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் பேச்சுவார்த்தைக் குழுவுக்கு இடையே நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சமாதானப் பேச்சுவார்த்தைகள் சனிக்கிழமை தொடங்கவுள்ளதாக தலிபான் மற்றும் கட்டார் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த பேச்சுவார்த்தைகள், ‘உள்- ஆப்கானிஸ்தான் பேச்சுவார்த்தைகள்’ என அழைக்கப்படுகின்றன. இந்த பேச்சுவார்த்தைகளின் மூலம் இரண்டு தசாப்தங்களாக நீடித்த வந்த போர் நிறுத்தப்பட்டு அமைதி நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த அறிவிப்புக்குப் பின்னர், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ கட்டார் சென்று பேச்சுவார்த்தைகளின் தொடக்கத்தில் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானியின் செய்தித் தொடர்பாளர் செடிக் செடிகி இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் திகதி அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலில் தொடர்புடைய அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு தலிபான்கள் அடைக்கலம் கொடுத்ததன் காரணமாக ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டது. அதன் பிறகு ஆப்கானுக்கு அமெரிக்கப் படைகள் அனுப்பப்பட்டன.

இதன்பிறகு ஆப்கானிஸ்தானில் தலிபான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் இடம்பெற்று வரும் நீண்ட கால மோதல்களினால் ஏற்பட்ட சேதங்களை கருத்திற் கொண்டு, இரு தரப்புகளுக்குமிடையே கடந்த பெப்ரவரி மாதம் அமைதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

கட்டாரில் பல மாத பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் அமெரிக்க அதிகாரிகளும் தலிபான் பிரதிநிதிகளும் இந்த ஒப்பந்தத்தில் பெப்ரவரி 29ஆம் திகதி கையெழுத்திட்டனர்.

குறித்த ஒப்பந்தத்தில், 135 நாட்களுக்குள் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை வீரர்கள் எண்ணிக்கை 8,600 ஆக குறைக்கப்படும், 14 மாதங்களில் நேட்டோ படை வீரர்கள் முழுமையாக ஆப்கானிஸ்தானில் இருந்து விலக்கி கொள்ளப்படுவார்கள் உள்ளிட்ட விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

ஆப்கானிய அரசாங்கம் 5,000 தலிபான் கைதிகளை விடுவிக்கும் என்றும், தலிபான்கள் சுமார் 1,000 ஆப்கானிய பாதுகாப்புப் படை வீரர்களை விடுவிப்பார்கள் என்றும் இந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்தது. இந்த அறிவிப்புக்கு முன்னர், ஏற்கனவே சுமார் 1,000 தலிபான் கைதிகளை ஆப்கான் விடுவித்திருந்தது.

இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டால்தான் ஆப்கானிஸ்தான் அரசுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த சம்மதம் தெரிவிப்போம் எனவும் தங்கள் பிடியில் உள்ள 1,000 பேரை விடுவிப்போம் எனவும் தலிபான் அமைப்பு கூறியது.

அண்மையில் புதிய போர்நிறுத்தத்தின் ஒரு பகுதியாக, ஆப்கானிஸ்ஸ்தான் சிறையில் பலகட்டங்களாக நான்காயிரத்து 991 தலிபான் பயங்கரவாதிகள் விடுதலை செய்யப்பட்டனர். தலிபான்கள் பிடியில் இருந்த ஆப்கானிஸ்தான் வீரர்கள் பலரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால் பயங்கரவாதிகளில் 9 பேர் மட்டும் தற்போதுவரை விடுதலை செய்யப்படவில்லை. அவர்கள் ஆப்கானிஸ்தான் அரசு – தலிபான் அமைப்பு இடையே நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு பிணையாக இருப்பார்கள் என தகவல் வெளியானது.

தலிபான்கள் உடனான பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் எட்டப்பட்ட பின்னர் எஞ்சிய பயங்கரவாதிகள் விடுவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.