கொரோனா அடிப்படை பொறுப்பு மாநிலங்களுக்கே!
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் பல்வேறு கேள்விகளுக்கு நேற்று (செப்டம்பர் 15) எழுத்து மூலம் பதிலளித்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை இணை அமைச்சர் அஷ்வினி குமார் சௌபே, முக்கிய தகவல்கள் மற்றும் அறிவிப்புகளை வெளியிட்டார்.
“கொரோனாவை எதிர்கொள்ள நிலைமை சார்ந்த அணுகுமுறையை இந்தியா பின்பற்றும். அதாவது பயணம் சார்ந்த பாதிப்புகள், உள்ளூர் பரவல், பெரிய அளவிலான பரவல், சமூகப் பரவல் உள்ளிட்டவற்றை சார்ந்ததாக இருக்கும்.
பொது சுகாதாரமும், மருத்துவமனைகளும் மாநிலப் பட்டியலில் வருவதால், கொரோனா கிச்சைக்கான அடிப்படை பொறுப்பு மாநில அரசுகளிடம் இருக்கிறது. எனவே, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் தங்களது சொந்த வளங்களைப் பயன்படுத்தினாலும், தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் தேவையான தொழில்நுட்ப மற்றும் நிதி உதவி மத்திய அரசால் வழங்கப்படுகிறது. நிலைமையை மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. 2020 செப்டம்பர் 3 வரை, ரூ.4,230.78 கோடியை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது” என்று கூறினார் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர்.
மேலும் அவர், “நாட்டின் கொரோனா பரவல் நிலைமையை பிரதமர், உயர்மட்ட அமைச்சர்கள் குழு, அமைச்சரவை செயலாளர், செயலாளர்களின் குழு மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்காகத் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக மாநிலங்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன” என்றார்.
கொரோனா தடுப்பு மருந்து உருவாக்கம் பற்றி பேசிய அமைச்சர், இதற்காக உயர்மட்ட தேசிய நிபுணர்கள் குழுவை அரசு அமைத்துள்ளதாகவும், 30-க்கும் அதிகமான தடுப்பு மருந்து மாதிரிகள் பரிசோதனையின் பல்வேறு கட்டங்களில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
வேந்தன்
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை