100 கோடி டொலர்களை எட்டும் சீனாவின் கடன் தொகை! புதிய கடன் குறித்து அரசாங்கம் பேச்சுவார்த்தை

 சீனாவின் உயர்மட்ட தூதுக் குழுவொன்று இலங்கைக்கு வந்து திரும்பிய கையோடு பெய்ஜிங்குடன் கொழும்பு 50 கோடி டொலர்கள் கடனுதவி குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஆரம்பித்திருக்கிறது. இலங்கை வெளிநாடுகளிடமிருந்து இதுவரைப் பெற்றிருக்கும் கடனில் 450 கோடிடொலர்களை அடுத்த வருடம் திருப்பிச் செலுத்துவதற்கு ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கும் நிலையிலேயே இந்தக் கடனுதவிப் பேச்சுவார்த்தை இடம்பெறுகிறது.

சீனாவின் நிதிநிறுவனம் ஒன்றிடமிருந்து இலங்கையின் நிதி அமைச்சு கேட்டுக்கொண்ட சலுகை அடிப்படையிலான 50 கோடி டொலர்கள் கடனுதவி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஆனால், அது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று சீனத் தூதரகம் ஞாயிறன்று டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை செய்திருந்தது.

இந்தக் கடனுதவி பெய்ஜிங் நிர்வாகத்தில் ஒரு உயர்மட்ட வெளியுறவுக் கொள்கை அதிகாரியான யாங் யீச்சி தலைமையிலான சீனத்தூதுக்குழு கொழும்பு வந்து சென்ற பிறகு அறிவிக்கப்பட்ட இலங்கைக்கான பெய்ஜிங்கின் 9 கோடி டொலர்கள் நன்கொடைக்கு மேலதிகமானதாகும்.

இந்தப் புதிய கடனுதவி அங்கீகரிக்கப்படுமாகவிருந்தால் இவ் வருடம் சீனாவிடமிருந்து இலங்கை பெற்றிருக்கக்கூடிய  மொத்த கடன்கள் 100 கோடி டொலர்களுக்கும் அதிகமானமதாகும். கொவிட் - 19 கொரோனா வைரஸ் தொற்று நோயின் விளைவான பொருளாதாரத் தாக்கங்களை இலங்கை சமாளிப்பதற்கு உதவியாகக் கடந்த மார்ச்சில் கொழும்புக்கு பெய்ஜிங் 50 கோடி டொலர்கள் அவசர நிதியுதவியை வழங்கியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடுமையாக குவிந்திருக்கும் வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான வழிவகைகள் குறித்த இலங்கை ஆராய்ந்து வருகின்ற நேரத்தில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறுகின்றது. இந்தியாவிடமிருந்து 100 கோடி டொலர்கள் நாணய உடன்படிக்கை , பங்குச் சந்தையில் பெருமளவு முதலீடுகள், சீனாவின் பல கடன்வழங்கும் நிறுவனங்களிடமிருந்து 70 கோடி டொலர்கள் கடனுதவி உட்பட சகலவிதமான தெரிவுகளையம் இலங்கை ஆராய்ந்து வருவதாக பணம் , மூலதனச்சந்தை மற்றும் அரச நிறுவனங்கள் சீர்திருத்தங்கள் இராஜாங்க அமைச்சரான அஜித் நிவாட் கப்ரால் ஊடகங்களுக்கு அண்மையில் தெரிவித்திருந்தார்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.