சட்டவிரோத போதைப்பொருள் விற்பனை : 4 இலட்சத்து 70 ஆயிரத்து 201 பேர் கைது!

 கடந்த 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இந்த ஆண்டு செப்டெம்பர் வரையில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 4 இலட்சத்து 70 ஆயிரத்து 201 பேர் சட்டவிரோத போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாடு சம்பந்தமாக கைது செய்யப்பட்டுள்ளதுடன், இந்த காலத்தில் 46ஆயிரத்து 824.98  கிலோகிராம் போதைப்பொருளும், 1 கோடியே 86 இலட்சத்து 1786 போதை வில்லைகளும்  கைப்பற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் சமல் ராஜபக் ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் நாட்டின் போதைப்பொருள் பயன்பாட்டுடன் தொடர்புபட்ட கைதுகள், சுற்றிவளைப்புகள் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்களான ஹெஷா விதானகே, சமிந்த விஜயசிறி, புத்திக பதிரன ஆகியோர் எழுப்பிய கேள்விக்கு பதில் தெரிவிக்கும் போதே அமைச்சர் சமல் ராஜபக் ஷ இவற்றைக் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

கடந்த 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2020 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வரையில் 4 இலட்சத்து 70 ஆயிரத்து 201 பேர் சட்டவிரோத போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாடு சம்பந்தமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை பொலிஸ், சுங்கத்திணைக்களம், இலங்கை கற்படை, இலங்கை விமானப்படை, இலங்கை இராணுவம், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு திணைக்களம் மூலமாக இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன.

இக் காலப்பகுதியில் மொத்தமாக 46ஆயிரத்து 824.98  கிலோகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 1 கோடியே 86 இலட்சத்து 1786 போதை வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. இவற்றை கைப்பற்றவும் குற்றவாளிகளை கைது செய்யவுமாக குறித்த காலத்தில் 4 இலட்சத்து 75 ஆயிரத்து 985 சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த செயற்பாடுகளை தடுக்கும் விதமாக பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. மக்களின் ஒத்துழைப்புடன் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதேபோல் நாட்டின் கடல் எல்லைகள் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.