800:எல்லாம் முடிந்துவிட்டது- விஜய் சேதுபதி!

 


இலங்கையின் ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் பயோபிக் திரைப்படமான 800 திரைப்படத்தில் இருந்து தான் விலகுவதை உறுதிப்படுத்தியிருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி.

முத்தையா முரளிதரன் ஈழத் தமிழர்களுக்கு எதிரான போக்குடையவர் என்றும், அவர் ராஜபக்‌ஷேவின் நண்பர் என்றும் அதனால் அவரது பயோபிக் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதை அனுமதிக்க முடியாது என்று தமிழகத்தில் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். சிலர் முரளிதரன் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதை ஆதரித்தனர்.

இந்நிலையில், “விஜய் சேதுபதியின் கலைத் துறை எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அவர் இப்படத்தில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும்” என முத்தையா முரளிதரன் இன்று (அக்டோபர் 19) அறிக்கை விட்டிருந்தார். இந்த அறிக்கையை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த விஜய் சேதுபதி, ‘நன்றி வணக்கம்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இதன் பிறகு இன்று மாலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக சென்னையில் அவரது வீட்டுக்குசென்றார் விஜய் சேதுபதி. முதல்வரின் தாயாரின் திருவுருவப் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திவிட்டு, முதல்வரையும் சந்தித்துவிட்டு வெளியே வந்தார்.

அப்போது அவரை சூழ்ந்துகொண்ட செய்தியாளர்கள், ‘முரளிதரன் அறிக்கையைக் குறிப்பிட்டு நன்றி வணக்கம்’ என்று எழுதியிருந்தீர்களே...அதற்கு என்ன அர்த்தம் சார் என்று கேட்டனர். “நன்றிவணக்கம்னா முடிஞ்சுபோச்சுனுதான் அர்த்தம்” என்றார் விஜய் சேதுபதி. ‘நீங்க சொல்றது புரியலை. நேரடியா சொல்லுங்களேன்’ என்று கேட்டதற்கு, ‘அவ்ளதான் தலைவா... முடிஞ்சுடுச்சுனா முடிஞ்சுடுச்சு’ என்று மீண்டும் சொல்லிவிட்டுப் புறப்பட்டார் விஜய் சேதுபதி.

இதன் மூலம் 800 படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகிவிட்டார் என்பது உறுதியாகிவிட்டது.

-இந்திரன்

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


Blogger இயக்குவது.