“நல்லிணக்க அலுவலகங்களை” இராணுவம் சத்தம் சந்தடியில்லாமல் வடக்கில் திறக்க ஆரம்பித்துள்ளன.
இந்த அலுவலகத்தின் ஊடாக; இளைஞர் யுவதிகளுக்கான தொழில் பயிற்சிகள், சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள், நல்லிணக்கம், சமயம், கலாச்சாரம் என அனைத்தும் முன்னெடுக்கப்படவுள்ளதாக இராணுவம் அறிவித்தருக்கின்றது. இவ்வளவு காலமும் இராணுவம் மக்களை நேரடியாக தொடர்பு கொள்வதற்கு வடக்கில் உள்ள சில மதகுருக்கள், தொழில் அதிபர்கள், கல்வியலாளர்களை பயன்படுத்தி வந்தது. இப்போது தானே தனித்து களத்தில் இறங்கியுள்ளது. இராணுவம் ஆங்காங்கே செய்து வந்த புத்தக அன்பளிப்பு, சிரமதானம், மரம் நடுகை, விளையாட்டு போட்டிகள், வீடு புணரமைப்பு, ஆகிய எல்லாவற்றையும் ஒருங்கமைத்து செயற்படுவதற்கான ஒரு ஆரம்ப கட்டம் தான் இது. இதன் பின்னாலுள்ள நோக்கத்தை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எந்த மக்கள் மீது குண்டுகள் பொழிந்து இனப்படுகொலை செய்ததோ, எந்த மக்களை நினைவு கூருவதை தடை செய்கின்றதோ, அந்த மக்களுக்கிடையே ஊடுருவி தமிழ் மக்களுடைய பல தசாப்த கோரிக்கைகளை சிதறடிப்பது தான் இதன் பின்னாலுள்ள நோக்கம். யாழ். பல்கலைக்கழகம் முதற்கொண்டு தொழில்நுட்ப கல்லூரி நிர்வாகங்களில் தலையீடு செய்யும் யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி, இனி இந்த அலுவலகம் அமைந்துள்ள இடத்தின் பாடசாலைகள், கோவில்கள், சனசமூக நிலையங்களுக்கும் நாட்டாமை செய்ய செல்வார். எங்கள் அரசியல் கட்சிகள் வடகிழக்கில் நடைபெறும் இராணுவயமாக்கல் தொடர்பில் மக்களுக்கு தெளிவு படுத்தவேண்டும். எங்கள் பத்திரிகைகள் தனியே “இராணுவம் புத்தகம் அன்பழிப்பு, “இராணுவம் பாடசாலையில் சிரமதானம்” என்று அன்பளிப்பு செய்தியாக வெளியிடாமல், அதனை “இராணுவமயமாக்கல்” செய்தியாக வெளியிட வேண்டும். இவ்வாறான இராணுவமயமாக்கலுக்கு துணை போவதை வாமதேவன் போன்றோர் கைவிட வேண்டும். (கடந்த 29 ஆம் திகதி கோப்பாயில் திறந்து வைக்கப்பட்ட இந்த இராணுவத்தின் நல்லிணக்க மத்திய நிலையத்துக்கான இடத்தையும், செலவையும் தியாகி அறக்கொடை நிறுவுனர் வாமதேவன் வழங்கியிருக்கிறார்.)
கருத்துகள் இல்லை