பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடை – முக்கிய தீர்ப்பு இன்று!


 தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிராக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று (புதன்கிழமை) வெளியிடப்படவுள்ளது.

பிரித்தானிய நேரம் இன்று காலை 10:30 மணிக்கு இந்தத் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இதனையடுத்து, இந்தத் தீர்ப்பு தொடர்பாக பிரித்தானிய நேரம் மாலை 4:15 மணிக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஊடக சந்திப்பொன்றினை நடத்தவுள்ளது.

எவ்விதமான பயங்கரவாத செயற்பாடுகளிலும் விடுதலைப் புலிகள் ஈடுபடவில்லை எனச் சுட்டிக்காட்டி தடையினை நீக்குமாறு பிரித்தானியாவின் உள்துறை அமைச்சிடம் 2008ம் ஆண்டில் நாடுகடந்த அரசாங்கம் கோரியிருந்தது.

இதனை பிரித்தானிய உட்துறை அமைச்சு நிராகரித்திருந்த நிலையில், தடையை நீக்கும் செயற்பாடாக (Proscribed Organisations Appeal Commission) தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் மேன்முறையீட்டு ஆணையத்திடம் நாடுகடந்த அரசாங்கம் சட்டநடவடிக்கையினை முன்னெடுத்திருந்தது.

விடுதலைப் புலிகள் மீதான தடை என்பது தமிழர்களின் பேச்சு சுதந்திரத்துக்கும் கருத்து சுதந்திரத்துக்கும் இடையூறாக இருக்கின்றதென இதன்போது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வாதிட்டிருந்தது.

மேலும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை சுதந்திர அரசின் வடிவத்தில் பிரயோகிப்பதற்கு தடையாக உள்ளதோடு, சுதந்திர தமிழீழத்தினை இலக்காக கொண்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஜனநாயக ரீதியான செயற்பாடுகளுக்கும் பெருந்தடையாக இது இருக்கின்றதென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வாதிட்டிருந்தது.

மேலும் பிரித்தானியாவின் நியாயமற்ற விதத்திலான தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பயங்கரவாத முத்திரையினை, இலங்கை அரசு தனது தமிழின அழிப்பை, பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற போர்வைக்குள் மறைத்துக்கொள்ளும் உபாயமாக கைக்கொள்கின்றது எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.