ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு பல்வேறு அமைப்புக்கள் கண்டனம்!

 


முல்லைத்தீவு, முறிப்பு பகுதியில் சட்ட விரோத மரக்கடத்தல் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர்கள் சண்முகம் தவசீலன் மற்றும் கணபதிப்பிள்ளை குமணன் உள்ளிட்ட இருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.


இந்நிலையில் முல்லைத்தீவு ஊடகவியளாலர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் உடனடியாக சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட்ட வேண்டும் என மன்னார் மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.


இச்சம்பவம் தொடர்பாக மன்னார் மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், “சட்ட விரோத செயற்பாட்டை தடுத்து நிறுத்தும் வகையில் தமது கடமையை மோற்கொண்ட இரு ஊடகவியலாளர்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


நாட்டில் தொடர்ச்சியாக ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் சம்பவங்களும் அச்சுறுத்தல் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. குறிப்பாக வடக்கு கிழக்கைச் சேர்ந்த ஊடகவியலாளர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.


இவ்வாறான சம்பவங்கள் தொடர்சியாக இடம்பெறுவதை அனுமதிக்க முடியாது. இச்சம்பவங்கள் தொடரும் பட்சத்தில் மாகாண ரீதியில் உள்ள ஊடகவியலாளர்களை ஒன்று திரட்டி போராட்டங்களை மேற்கொள்ள வேண்டிவரும் என எச்சரிக்கை விடுக்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, முல்லைத்தீவு ஊடகவியலாளர்களின் தாக்குதலுக்கு வவுனியா தமிழர் ஊடகவியலாளர் சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.


குறித்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் ஊடக சுதந்திரம் கேள்விக்குறியாகி வருவது தொடர்பாக பல தரப்பினராலும் சுட்டிக்கப்பட்டப்பட்டு வரும் நிலையில் வடபகுதியில் தொடர்ந்தும் அதிகார வர்க்கத்தினரால் ஊடகவியலாளர்கள் மீது வன்முறைகள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன.


கடந்த காலங்களில் இன, மத பேதமின்றி ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டது மாத்திரமின்றி கொலையும் செய்யப்பட்ட வரலாறுகள் இலங்கையில் இடம்பெற்ற நிலையில் அவற்றுக்கான நீதி கிடைக்கப்பெறவில்லை.


இதன் தொடர்ச்சியாகவே முல்லைத்தீவில் மரக்கடத்தல் மாபியாக்கள் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற இரு ஊடகவியலாளர்கள் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டுள்ளனர்.


சட்டவிரோத செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுக்கவும் அவ்விடயங்கள் தொடர்பாக தமக்கு ஆதரவாகவுள்ள அரச அதிகாரிகளை இனங்காட்டாது இருப்பதற்காகவுமே மிலேச்சத்தனமான செயற்பாடுகளில் சமூகத்திற்கு ஒவ்வாத செயற்பாடுகளில் ஈடுபடும் குழுக்கள் இவ்வாறான தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன.


எனவே, இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்த பொலிஸார் பாரபட்சமின்றி செயற்பட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், இந்த செயலை கடுமையாக கண்டிப்பதாக ஸ்ரீ ரெலோ கட்சியின் இளைஞரணித் தலைவர் பரமேஸ்வரன் கார்த்தீபன் ஊடக அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.


குறித்த அறிக்கையில், “இலங்கையில் புதிய அரசாங்கம் உருவாகி ஆறு மாதங்களுக்கு மேல் கடந்துள்ள நிலையில், ஊடகவியலாளர்கள் மீதான அழுத்தமும் தாக்குதல்களும் தொடர்ந்த வண்ணமே உள்ளன.


வடக்கு, கிழக்கிலுள்ள சிறுபான்மையின ஊடகவியலாளர்கள் இன்றும் பாதுகாப்புத் தரப்பினரால் கண்காணிக்கப்படுவதுடன் அவர்களுக்காகப் பணியாற்றவும் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். அதிகார வர்க்கத்தின் அநீதியைக் வெளிக்கொண்டுவரும் ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவதுடன் இனந்தெரியாத நபர்களின் மூலமும் அச்சுறுத்தப்படுகின்றனர்.


எனவே, தொடரும் மறைமுகமான ஊடக அடக்குமுறையைத் தடுத்து நிறுத்தி ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.